கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc-ன் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு 2022-ம் ஆண்டுக்கான ஊதியமாக 226 மில்லியன் அமெரிக்க டாலர், (இந்திய மதிப்பில் ரூ.1,854 கோடி) வழங்கப்பட்ட சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பல நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், சமீபத்தில் இந்நிறுவனமும் உலகம் முழுவதுமுள்ள தனது அலுவலகங்களில் இருந்து ஊழியர்களை நீக்கியது. 2022 ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதுமுள்ள 12,000 ஊழியர்கள், கிட்டத்தட்ட 6 சதவிகிதத்தினரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்வதாகத் தெரிவித்தது.

இதைக் கண்டித்து ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான கூகுள் நிறுவன ஊழியர்கள் லண்டன் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஊழியர்கள் ஒருபுறம் பணிநீக்க சிக்கலில் மாட்டித் தத்தளித்துக் கொண்டிருக்க, சுந்தர் பிச்சைக்கு 2022-ம் ஆண்டுக்கான ஊதியமாக 1,854 கோடி ரூபாய் வழங்கப்பட்ட சம்பவம் ஊழியர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஊழியர்களின் சராசரி சம்பளத்தைவிட 800 மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.
சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்ட 218 மில்லியன் அமெரிக்க டாலரில் (1,788 கோடி) பங்கு சார்ந்த பரிசுகளும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிச்சைக்கும் Alphabet ஊழியர்களுக்கும் இடையேயான உயர் ஊதிய இடைவெளி மற்றும் வருமான சமத்துவமின்மையைக் காட்டும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளதாகப் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். நிறுவனம் தன் ஊழியர்களின் நலனைவிட, நிர்வாகிக்குக் கொடுக்கும் ஊதியத்துக்கு முன்னுரிமை அளிப்பதாகப் பலரும் விமர்சித்துள்ளனர். சாதாரண பணியாளர்களுக்கும், தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களுக்கும் இடையிலான மிகப்பெரிய அளவிலான ஊதிய முரண்பாடுகளை எடுத்துக்காட்டுகிறது என்று பணியாளர் கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.