2024 -ல் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையில் எடுத்துக்கொண்டு பா.ஜ.க-வுக்கு எதிராக வியூகம் வகுத்து வருகின்றன. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை கௌதம் அதானி சந்தித்த நிகழ்வு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

அதானி குழுமம் மீதான பல்வேறு முறைகேடான குற்றச் சாட்டுகளை முன்வைத்து அமெரிக்க ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை எடுத்து அதானி குழுமப் பங்குகள் கடுமையாக சரிந்து பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பை இழந்தன. அதானி குழுமத்துக்குப் பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்கியிருப்பதாலும், பொதுத்துறை நிறுவனங்கள் பல அதானி குழுமப் பங்குகளில் முதலீடு செய்திருப்பதாலும் அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாகவும் விஸ்வரூபம் எடுத்தது.
குஜராத் முதல்வராக மோடி இருந்த காலத்திலிருந்தே கௌதம் அதானிக்கும் மோடிக்கும் நெருங்கிய நட்பு இருந்து வந்தது. மோடியின் மூலம் தொழில் ரீதியான ஆதாயங்களை கௌதம் அதானி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அது மோடி பிரதமரான பிறகும் தொடர்ந்ததன் காரணமாகவே உலகின் முன்னணி பணக்காரராக கௌதம் அதானி வளர்ச்சி அடைந்தார் என்று விமர்சனம் வைக்கப்படுகிறது.
எனவே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளன. தொடர்ச்சியாக இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசியும், அவ்வப்போது போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய நிலையில், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாரை கௌதம் அதானி சந்தித்திருக்கிறார். முன்னதாக சரத் பவார் ஹிண்டன்பர்க் அறிக்கையை விமர்சனம் செய்ததோடு, கௌதம் அதானிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்திருக்கிறார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டுமென கூறிவரும் நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் பா.ஜ.க-வுக்குப் பெரும்பான்மை இருப்பதால், அதில் உண்மை தெரியவராது உச்ச நீதிமன்றக் குழுவின் விசாரணையில்தான் உண்மை தெரியவரும் என்றும் சரத் பவார் கூறியுள்ளார்.
இவர் கௌதம் அதானிக்கு ஆதரவாக இப்படி பேசியதைக் கேட்டு எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதிர்ச்சியில் இருக்கின்றன. இந்நிலையில், கௌதம் அதானி தெற்கு மும்பை சில்வர் ஓக் பகுதியில் உள்ள சரத் பவாரின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார். அவருடனான சந்திப்பு இரண்டு மணி நேரம் வரை நீடித்ததாகக் கூறப்படுகிறது.
2024 தேர்தலில் தேசிய கட்சிகளை அணிதிரட்டி ஒருங்கிணைப்பதில் சரத் பவாரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் நிலையில், சில நாள்களாக அதானி விவகாரத்தில் ஆதரவாகப் பேசிவருவதும், கௌதம் அதானி அவரை நேரில் வந்து சந்தித்திருப்பதும் எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கௌதம் அதானி பல வகைகளிலும் அரசியல்வாதிகளைத் தொடர்புகொள்ள முயன்று வருவதாக திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா கூறியிருக்கிறார். மேலும், சரத் பவாரின் சமீபத்திய நடவடிக்கைகளையும் அவர் விமர்சனம் செய்துள்ளார். சரத் பவாரை அதானி சந்தித்தது ஏன், சந்திப்பில் என்னவெல்லாம் பேசினார்கள் என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும். அரசியல் அதானி விவகாரம் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தப்போகிறது என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.