ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின்படி அதானி குழுமத்தில் மோசடி நிகழ்ந்ததாகத் தெரியவில்லை என செபி உச்ச நீதிமன்றத்தில் கூறியதாகத் தகவல் ஒன்று சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருகிறது. உண்மையில் செபி அவ்வாறு கூறியிருக்கிறதா, உண்மை என்ன?
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் பல பகிரங்க மோசடி குற்றச்சாட்டுகளை சில மாதங்களுக்கு முன்வைத்தது. ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு அறிக்கை வெளியானதும் அதானி குழுமப் பங்குகள் அனைத்தும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து பங்குச் சந்தையை கதிகலங்க வைத்ததை முதலீட்டாளர்கள் யாரும் மறக்க மாட்டார்கள். அதானி பங்குகளின் மதிப்பு குறைந்ததால் உலகப் பணக்காரர்கள் பட்டியலிலிருந்தும் அதானி பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
இந்நிலையில் அதானி மீதான குற்றச்சாட்டுகளை செபி, சிபிஐ என அனைத்து ஒழுங்குமுறை அமைப்புகளும் விசாரணை செய்ய வேண்டும் எனவும், அதானிக்கு பாஜக அரசு நெருக்கமாக இருப்பதால் விசாரணையை திசைதிருப்ப வாய்ப்புள்ளது என நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தன. இதனால் அதானி விவகாரம் அரசியல் விவகாரமாகவும் மாறியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அதானி விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய செபிக்கு உத்தரவிட்டது. செபிக்கு வழங்கப்பட்ட இரண்டு மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றத்திடம் செபி தனது தரப்பு அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், "இதுவரையிலான விசாரணையில் அதானி குழும நிறுவனங்களில் மோசடி நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது கடினமான வேலை. இதற்கு இரண்டு மாத கால அவகாசம் போதாது. எனவே 6 மாத கால அவகாசம் வேண்டும்" என செபி குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அதானி குழுமம் செபி அறிக்கையின் பாதி சாராம்சம்த்தை மட்டுமே எடுத்துக்கொண்டு 'அதானி குழுமத்தில் எந்த மோசடியும் நடக்கவில்லை' என்று கூறிய செபியின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் சட்டபூர்வமான எங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்குவோம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை அப்படியே சமூக வலைதளங்களும் சில ஊடகங்களும் மோசடி நிகழவில்லை என செபி கூறியதாகப் பகிர்ந்துவருகின்றன.
அதானி விவகாரத்தில் நடந்த உண்மை என்ன என்பது எப்போது வெளிவரும் என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், வருகின்ற பொதுத் தேர்தல் வரை அதானி விவகாரத்தில் எந்த முடிவும் வராத வகையில் வழக்கையும், விசாரணையையும் இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள் போலிருக்கிறதே என்ற கேள்வி இன்னொருபக்கம் எழுகிறது.