இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்ததையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றத் தொடங்கினர். பல நிறுவனங்களில், பெட்ரோல் பங்குகளில், உணவகங்களில், கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வந்தனர். வங்கியைத் தவிர வேறு எங்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியாது என்றே மக்கள் நினைத்தனர்.
டெல்லியில் உள்ள ஒரு இறைச்சிக் கடை இந்த சமயத்தில் ஒரு மார்க்கெட்டிங் உத்தியைக் கையாண்டது. டெல்லியில் சுமித் அகர்வால் நடத்திவரும் சர்தார் இறைச்சி கடையில், ``2000 ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்தால் அதைப் பெற்றுக்கொண்டு 2100 ரூபாய்க்கு இறைச்சி வழங்கப்படும்" என்று ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ரிசர்வ் வங்கி புத்திசாலி என்று நினைத்தால், டெல்லிவாசிகள் அதைவிட புத்திசாலிகள், விற்பனையை அதிகரிக்க இது ஒரு புதுமையான வழியாக இருந்தது என்று குறிப்பிட்ட சுமித் அகர்வால், `` 2000 ரூபாய் நோட்டுக்கு ஈடாக ₹2100 மதிப்புள்ள இறைச்சியைப் பெறலாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
இந்த ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகி, 175.3k அதிகமான பார்வைகள், 274 ரீ-ட்வீட்கள் மற்றும் 1.6k-க்கும் அதிகமான விருப்பங்களைப் பெற்றது.
இதன்மூலம் டெல்லி வாசிகள் தங்கள் கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதால், இறைச்சி கடையில் கூட்டம் அதிகரித்து விற்பனை உச்சத்தைத் தொட்டது. தக்க சமயத்தில் மாற்றி யோசித்ததால், தனது கடையை பணம் செலவு இல்லாமல் விளம்பரம் செய்ததுடன் வியாபாரத்தையும் குவித்து வருகிறார் சுமித் அகர்வால்.