ஏற்றுமதி, உணவுத் தொழில், இண்டஸ்ட்ரி... பேக்கிங் தரத்தை அறிய வழிகாட்டும் ஆராய்ச்சி நிலையம்!

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அனுப்பக் கட்டாயம் பொருளை வைக்கும் டிரம், அதை மூடும் சீல் ஆகியவற்றுக்கு சான்றிதழ் கட்டாயம்...
இன்றைக்கு உள்ளூரிலோ, உலக நாடுகளிலோ ஒரு பொருளை விற்பனை செய்ய வேண்டுமெனில், நவீன பேக்கிங்கில் அடைத்து விற்பனை செய்வது வழக்கமாகி வருகிறது. அந்த பேக்கிங் தரமானதாகவும், நீண்ட நாள் தாங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, வெளிநாடுகளுக்குப் பொருள்களை அனுப்பும்போது அதற்குத் தகுந்த பேக்கிங் தேவைப்படுகிறது. பேக்கிங்குக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பொருள் தரமானதா, உள்ளே இருக்கும் பொருள் உடைந்துவிடாதபடிக்குத் தாங்குதிறன் கொண்டதா என்பன உள்ளிட்ட அனைத்து வகையான சோதனைகளையும் செய்து தருவதுடன், நவீன வடிவில் பேக்கிங் செய்வதற் கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது சென்னை, பெருங்குடியில் உள்ள இந்திய பொதிவாக்க தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Packaging). மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறையின்கீழ் இயங்கும் இந்த நிறுவனம் தொழில்முனைவோர்கள், ஏற்றுமதி யாளர்கள் எனப் பலதரப்பினருக்கும் வழிகாட்டி வருகிறது. இந்த நிறுவனத்தின் மண்டல இயக்குநர் இரா.பொன்குமாரைச் சந்தித்தோம்.
“1966-ம் ஆண்டு மத்திய வர்த்தக அமைச்சகத்தின்கீழ் மும்பையில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் கிளை நிறுவனம் 1971-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. தென் இந்தியாவில் பேக்கேஜிங் பற்றிய விஷயங்களுக்காகவே தொடங்கப்பட்ட முதல் ஆராய்ச்சி நிலையம் இது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த பேக்கேஜிங்கையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். தற்போது மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத்தில் செயல்பட்டு வருகிறது.

எந்தத் தொழிலுக்கும் பேக்கேஜிங் என்பது மிகவும் முக்கியமானது. பேக்கிங் பாதுகாப்பானது என்றாலும், அதுவொரு கலையும்கூட. ஒரு பொருளுடைய பேக்கிங்தான் மற்றவர்களை ஈர்க்கிறது. அதற்கான வழிகாட்டுதல்களையும் பயிற்சிகளையும் வழங்குகிறோம். அதே சமயம், நீங்கள் ஒரு பேக்கிங் மெட்டீரியலைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். அது தரமானதா, நீண்ட நாள் தாங்குமா, எவ்வளவு எடையைத் தாங்கும் என்பன உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் இங்கே குறைந்த கட்டணத்தில் ஆய்வு செய்து கொடுக்கிறோம்” என்றவர், ஆய்வுக்கூடத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொன்றையும் காட்டி விளக்கினார்.
உலகளாவிய சோதனை இயந்திரம் (UTM)
“இந்தக் கருவியைக் கொண்டு பிளாஸ்டிக், ஜூட் பேக்குகள் உட்பட அனைத்து வகையான பைகளையும் சோதித்தறியலாம். இந்தக் கருவியின் (Universal Testing Machine) மூலம் சாக்கின் உறுதித் தன்மை, எத்தனை கிலோ வரை எடையைத் தாங்கும், இதன் இழுவிசை என்ன, வெயிலில் வைத்தால் இந்தச் சாக்கு எத்தனை நாள்கள் தாங்கும் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங் களையும் சோதித்தறிந்து சொல்லிவிடுவோம்.
இது மதிப்புக் கூட்டப்பட்ட தக்காளிச் சாறு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் போன்றவற்றை பேக் செய்வதற்கான கவரை சோதித்தறியும் கருவி. எவ்வளவு வெப்பத்தைத் தாங்கும், அதிக வெப்பநிலையில் வெளிப்புறம் பாதிக்கப்படுமா, கசக்கினால் கவர் கிழியுமா என்பன உள்ளிட்ட பலகட்ட சோதனைகள் இதில் மேற்கொள்ளப்படும்.
ஓர் அட்டைப்பெட்டியின்மேல் எத்தனை கிலோ எடை வரை வைக்கலாம், அட்டைப் பெட்டியின் உள்ளே எத்தனை கிலோ எடை வரை வைக்கலாம் என்பதையும் சோதனை செய்கிறோம். பாக்கெட்டுகள் மற்றும் மூட்டை களின் மேல் போடப்படும் சீல் அழியாமல் இருக்குமா என்பது குறித்தும் சோதனை செய்யலாம்.
குறிப்பாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி வைத்துவிடுவார்கள். அதனால் பெட்டிகள்மீது போடப் பட்டிருக்கும் சீல் அழிந்துவிடும். சில இடங்களில் இந்தச் சீல் இல்லாவிட்டால் பொருள் களைப் பெற்றுக்கொள்ள மறுப் பார்கள். ஆகவே, அச்சிடப்பட்ட சீலை சோதித்தறியும் கருவியும் (Scuff tester) இங்குள்ளது. ஓர் அட்டைப்பெட்டி எவ்வளவு கூர்மையைத் தாங்கும் என்று சோதித்தறியும் (Puncture Tester) கருவியும் இங்குள்ளது. பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பாட்டில்களை மைக்ரோ ஓவனில் வைத்து... பேக்கிங்கில் உள்ள ரசாயனங்கள் உணவுப் பொருள்களுக்குள் செல்கிறதா, பொருள்கள் பாதிக்கப்படுமா என்பதையும் சோதித்தறிவோம்.
ஐ.எஸ்.ஓ தரம்...
அட்டைப்பெட்டி, பிளாஸ் டிக் மட்டுமல்லாமல், மரம், கண்ணாடி, உலோகம், காகிதம் என எவற்றால் செய்யப்பட்ட பொருளானாலும் அதன் உறுதித் தன்மையைச் சோதித்தறிந்து சொல்வோம். இங்கே ஐ.எஸ்.ஓ தரத்தில் சோதனை செய்து தருகிறோம். மொத்தம் 200 வகை யான சோதனைகளை எங்கள் கூடத்தில் மேற்கொள்கிறோம்.
அதிர்வை அறியும் கருவி...
லாரியிலோ, கன்டெய்னரிலோ பொருள்கள் செல்லும்போது அட்டைப்பெட்டிக்குள்ளோ, சாக்கு மூட்டைக்குள்ளோ இருக்கும் பொருள்கள் அதிர்வு ஏற்படும்போது உடைபடுமா, அதிர்வைத் தாங்குமா என்று சோதித்தறிவோம். தொழி லாளர்கள் அட்டைப் பெட்டி யையோ, மூட்டையையோ தூக்கும் போது அவை தவறுதலாகக் கீழே விழுந்தால், எந்தளவுக்கு இழப்பு ஏற்படும் என்பதை 3 - 10 அடி உயரம் வரை விழுவது போன்று சோதனை செய்வோம். அதே போல, சறுக்கி விழுவது உள்ளிட்ட பலவிதமான சோதனைகளைச் செய்து ஒரு பொதியின் உறுதித் தன்மையைச் சோதித்தறியலாம்.
ஓர் அட்டைப் பெட்டையில் எத்தனை கிலோ பொருள்களை அனுப்பலாம், என்னென்ன வடிவத்தில் பொருள்களை வைக்கலாம், எவ்வளவு வைக்கலாம் என்பன போன்ற விவரங்களையும் சொல்லித் தருவோம். அதே போல, ஆசிட், நறுமண திரவப் பொருள்கள் போன்ற ஆபத்தான பொருள்களை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அனுப்பக் கட்டாயம் பொருளை வைக்கும் டிரம், அதை மூடும் சீல் ஆகியவற்றுக்கு சான்றிதழ் கட்டாயம். ஆய்வு செய்து, இதற்கானச் சான்றிதழையும் இங்கு வழங்குகிறோம்.

பேக்கிங்குக்கான ஆய்வுகள் என்பது வெளிநாடுகளுக்கு ஏற்று மதிக்குச் செய்வதற்கு மட்டுமல்ல, உள்நாட்டு விற்பனைக்கும் அவசியம். கண்ணாடிப் பொருள் கள், உலோகப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன் படுத்தி தயாரிக்கும் பேக்கிங்கில் பலதரப்பட்ட பொருள்கள் ஊர் விட்டு ஊருக்கும், மாநிலம் விட்டு மாநிலத்துக்கும் பயணிக்க ஆரம்பித்துவிட்டன. அதை முறையாகவும், பாதுகாப்பாகவும் அனுப்புவது மிக முக்கியம். அதற்காகத் தான் இந்தச் சோதனைகள். எல்லாப் பொருள்களையும் சோதித்தறிய வேண்டிய அவசியமில்லை. சாம்பிள்களை மட்டும் கொண்டுவந்து கொடுத்தால் போதும். சோதனை செய்து கொடுத்திடுவோம். ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், மதிப்புக்கூட்டலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தாங்களாகவே இதுபோன்ற கருவிகளை வைத்திருக்கும்.
ஆனால், புதிதாகக் காய்கறி, பழங்கள் விற்பனை தொழில் ஈடுபடும் தொழில்முனைவோர், வியாபாரி களிடம், பேக்கிங் சோதனை செய்யும் கருவிகள் இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் இங்கு சோதனை செய்துகொள்ளலாம்.
இந்தச் சோதனைகள் செய்ய 600 ரூபாயிலிருந்து ரூ.2,500 வரை கட்டணம் வாங்குகிறோம். இதிலேயே இன்னும் ஆழமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அதற்குக் கூடுதல் கட்டணம் ஆகும். சோதித்தறி வதற்கென்றே ஒரு குழு இங்கே செயல்படுகிறது. தேவைப் படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று சொல்லி விடை கொடுத்தார்.
வேலை தரும் பயிற்சிகள்..!
இந்த நிறுவனம் தரும் இரண்டு ஆண்டுக்கான முதுகலைப் படிப்புகளையும், ஓர் ஆண்டுக்கான சான்றிதழ் படிப்புகளையும் (Certified Packaging Engineer), நேரடியாகவும் ஆன்லைனிலும் வழங்குகிறது. இதைக் கற்றுக்கொண்டு பேக்கிங் துறை சார்ந்த பணிகளுக்குச் செல்லலாம். தனியாக பேக்கிங் பணிகளையும் எடுத்துச் செய்யலாம். நிறைய தொழில் வாய்ப்புகள் இந்த பேக்கிங் துறையில் உள்ளன. எந்தெந்த மையங்களில் என்னென்ன பயிற்சிகள் நடைபெறும் என்ற முழு விவரங்களை www.iip-in.com என்ற வலை தளத்தில் தெரிந்துகொள்ளலாம். அவ்வப்போது பேக்கிங்கில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள், உணவுப் பாதுகாப்புத்துறை தரும் பேக்கிங்குக்கான விதிமுறைகள், பிளாஸ்டிக்குக்கு மாற்றான தொழில் நுட்பங்கள் எனப் பல பயிற்சிகள் இங்கு நடத்தப்பட்டு வருகின்றன.