Lakme நிறுவனம் குறித்து நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நிறுவனத்தைத் தொடங்கியது யார், எந்தச் சூழலில் தொடங்கினார்கள் என்பது தெரியுமா? அது ஒரு சுவாரஸ்யமான கதை... வாருங்கள், அந்தக் கதையைச் சொல்கிறேன்...
1950-களின் தொடக்கத்தில் இந்தியா, பொருளாதார ரீதியில் பல பிரச்னைகளை எதிர்கொண்டு வந்தது. உணவு, எரிபொருள், மின்சாரம் போன்ற மிக அடிப்படையான தேவைகளுக்கே தத்தளித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துவந்தது. எனவே, அழகுசாதனப் பொருள்கள் போன்ற ஆடம்பரப் பொருள்களை இறக்குமதி செய்வதில், அரசுத் தரப்பு பல கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்தப் பிரச்னையை, அப்போது பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அலுவலகத்தை நிர்வகித்து வந்த அவருடைய மகள் இந்திரா காந்தியின் கவனத்துக்கு சில பெண்கள் எடுத்துச் சென்றனர். இந்திரா காந்தியும், இந்தியாவுக்கு அழகுசாதனப் பொருள்கள் தேவையான ஒன்றுதான் என்கிற கருத்தில் உடன்பட்டார். இந்திரா காந்தி, தன் தந்தை நேருவிடம் காஸ்மெட்டிக்ஸ் பொருள்களின் அவசியத்தையும் பயன்பாடுகளையும் எடுத்துச் சொன்னார்.
ஜவஹர்லால் நேரு தன் தனிச் செயலர் எம்.ஓ.மத்தாயிடம் அந்த விஷயத்தைக் கவனிக்கச் சொன்னார். பிரதமர் நேரு, கவனத்தில் எடுத்துக்கொள்ளச் சொல்லும் ஆயிரம் விஷயங்களில் இதுவும் ஒன்று; அதுவும் உப்புசப்பில்லாத, அத்தியாவசியமற்ற, உடனடியாகத் தீர்க்கத் தேவை இல்லாத பிரச்னை அல்ல என்பதால், அந்த வேலை அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
ஆனால், இந்திரா காந்தி விடுவதாக இல்லை. எம்.ஓ.மத்தாய் ஒருமுறை இந்திரா காந்தியிடம், ``அழகுசாதனப் பொருள்கள் இந்தியாவுக்கு அத்தனை அவசியமானதுதானா?’’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டார். இந்திரா காந்தியும், ``ஆம், அவசியமானதுதான், இந்தியாவில் எந்த ஒரு நிறுவனமும் அழகுசாதனப் பொருள்களைத் தயாரிப்பதில்லை’’ எனத் திட்டவட்டமாகப் பதில் சொல்லிவிட்டார்.
சரி, பிரதமரின் மகளே சொன்ன பிறகு மறுபேச்சுக்கு இடம் உண்டா… உடனடியாக எம்.ஓ.மத்தாய், அப்போது டெல்லியில் இருந்த டாடா குழுமத்தின் பிரதிநிதி ஏ.டி.நெளரோஜியைக் கூப்பிட்டு, அழகுசாதனப் பொருள்கள் தயாரிக்குமாறும், அதற்கு அரசுத் தரப்பிலிருந்து எல்லா உரிமங்களும் உதவிகளும் செய்து தரப்படும் என்று சொன்னார்.

இந்திய அரசைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே அழகுசாதனப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டால், அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது தடுக்கப்படும். இதனால் அந்நிய செலாவணி மிச்சமாகும். இந்தியாவில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்பது மத்தாயின் கணக்காக இருந்தது.
ஆனால், டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி டாடாவுக்கு ஒரே குழப்பம்... ``என்னடா இது, ஒருபக்கம் ஏர் இந்தியாவை தேசியமயமாக்க நேருவின் அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம், காஸ்மெட்டிக்ஸ் துறையில் கால்பதிக்க அவர்களே அழைப்பு விடுக்கிறார்கள்... அதுவும் எல்லா உதவிகளையும் செய்து தருகிறேன் என்கிறார்களே...’’ எனக் கொஞ்சம் வியப்படைந்தார்.
அரசே முன்வந்து சொல்லும்போது, டாடா போன்ற ஒரு பெரிய தொழில் குழுமத்துக்குப் புதிய தொழில் தொடங்கத் தயங்குமா என்ன..? சட்டென களத்தில் இறங்கியது டாடா.
டாடா ஆயில் மில்ஸ் என்கிற பெயரில் அப்போது தலைக்குத் தேய்க்கும் எண்ணெய், டிட்டர்ஜென்ட் பவுடர், துணி துவைக்கும் சோப்பு, குளியல் சோப்பு… எனப் பல பொருள்களைத் தயாரித்து சந்தையில் லீவர் கம்பெனிக்கு எதிராக கலக்கிக் கொண்டிருந்தது டாடா குழுமம்.

அப்படியே அழகுசாதனப் பொருள்களுக்கென தனியாக ஒரு கம்பெனியைத் தொடங்கினார் ஜே.ஆர்.டி டாடா. கம்பெனியின் பெயரிலேயே பெண்கள் ஈர்க்கப்பட வேண்டும், அது அழகை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டுமென, கம்பெனிக்கு Lakme எனப் பெயரிட்டார். 1952-ம் ஆண்டு, டாடா ஆயில் மில்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக Lakme தொடங்கப்பட்டது.
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் Lakshmi என்கிற பெயரை பிரெஞ்சு மொழியில் கூறினால் Lakme என்று பொருள்படும் வகையில் ஜே.ஆர்.டி பெயர் சூட்டியதாக The TATAs என்கிற புத்தகத்தில் கிரிஷ் குபேர் என்கிற பத்திரிகையாளர் பதிவு செய்திருக்கிறார்.

இன்றும் ``பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கா” எனப் பேச்சளவில் பலரும் சொல்கிறார்கள் இல்லையா… அது அப்படியே டாடாவின் அழகுசாதன கம்பெனிக்கு கச்சிதமாகப் பொருந்திப் போனது. Lakme நிறுவனத்தின் நிர்வாகப் பணிகள், நவால் டாடாவின் மனைவி சிமொன் டாடாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
கிட்டத்தட்ட 50 ஆண்டுக் காலத்துக்கு டாடா குழுமம் வெற்றிகரமாக நடத்தி வந்த Lakme நிறுவனத்தை 1998-ம் ஆண்டு, ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்துக்கு சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் விற்றது.
இன்றும் Lakme நிறுவனம் இந்திய அழகுசாதனச் சந்தையில், பல பிரபலங்களைத் தன் விளம்பரத் தூதர்களாக வைத்து, அழுத்தமான தடம் பதித்து, வணிக ரீதியிலான வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது.
Lakme நிறுவனம், அழகுசாதன உலகின் Lakshmi-யாகவே தொடர்கிறது!
(Brand Story-2 அடுத்த செவ்வாய்க்கிழமை காலை)
- கௌதமன் முராரி