“ஊர்க்குருவி பருந்தாக முடியாதுன்னாங்க, ஆனா, நாங்க ஜெயிச்சுட்டோம்!” சக்சஸ் காட்டிய இளைஞர்கள்!

‘‘தமிழ்நாடு முழுக்க 1000 பைக், 350 கார், 750 ஆட்டோ எங்களோட டைஅப்பில் இருக்கு’’ என்கிறார்கள் இந்த இளைஞர்கள்...
புதிதாக ஆரம்பிக்கும் தொழில் தோல்வி அடைந்தால், அதை மூட்டைக் கட்டி விட்டு, வேறொரு தொழில் ஐடியாவைத் தேடி நாம் போய்விடுவோம். ஆனால், பொள்ளாச்சியைச் சேர்ந்த குமாரும், கரூரைச் சேர்ந்த ஶ்ரீராமும் ஐந்து ஆண்டுகளுக்குமுன் மூட்டை கட்டி வைத்த ஒரு ஐடியாவை மீண்டும் செயல்படுத்தி, வெற்றி காணத் தொடங்கியிருக்கிறார்கள். ‘ஃப்ளையர் வீல்ஸ்’ என்ற பெயரில் ஆன்லைன் வாகனச் சேவை யைத் தந்துவருகிறார்கள். குமாரை சந்தித்துப் பேசினோம்.
நெசவுக் குடும்பம் to ஆபீஸ் வேலை...
“பொள்ளாச்சியில இருந்த எங்க குடும்பத் துக்கு ஓட்டுவீடு மட்டும்தான் இருந்துச்சு. அப்பா, அம்மாவுக்கு நெசவு வேலை. கஷ்டப் படுற குடும்பம். ஆனாலும், என்னை நல்லா படிக்க வச்சாங்க. பள்ளிப்படிப்பை முடிச்சுட்டு, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிங்கிற டிப்ளோமா கோர்ஸ்ல சேர்ந்து, 2006-ல படிச்சு முடிச்சேன். பொள்ளாச்சியிலேயே ஒரு கம்பெனியில ரூ.4,000 சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். வேலைக்குப் போய்கிட்டே, பி.சி.ஏ படிச்சேன். பத்து வருஷம் அதே கம்பெனியில வேலை.
நான் கல்லூரி முடிக்கும் வரை வீட்டுல சைக்கிள்கூட கிடையாது. வேலை பார்க்கிற காலத்துல வேலை முடிந்து லேட்டாக வீட்டுக்குப் போறப்ப, கடைசி பஸ்ஸும் போயிரும். அப்ப, வீட்டுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தேதான் போவேன். அப்பதான், பிற்காலத்தில் இது மாதிரி சின்ன ஊர்ல இருக்கிற மக்கள் எளிதா பயணம் பண்ண பைக் டாக்ஸி மாதிரி ஆரம்பிக்கணும்னு நினைச்சுக்குவேன்.
நான் வேலை பார்த்த கம்பெனியில என் வேலை தொடர்பா நிறைய கத்துக்கிட்டேன். ஐ.டி துறை பத்தியும் குறிப்பா, ஆட்டோ மேஷன் பத்தியும் நிறைய தெரிஞ்சுகிட்டேன். நிறைய உழைச்சு, ஆட்டோமேஷன் மூலமா 20 பேர் செய்ற வேலையை 4 பேர் செய்ற அளவுக்கு குறைச்சேன். அந்த முயற்சிக்கு கம்பெனி தரப்புல இருந்து 100% சம்பள உயர்வு கொடுத்து, உற்சாகப்படுத்தினாங்க. அப்பதான், ‘நமக்குள்ள ஏதோ இருக்கு’னு உணர்ந்தேன்.

நண்பருடன் தொடங்கிய ஸ்டார்ட்அப்...
என்னோட நண்பர் ஶ்ரீராம், கரூர் புலியூரைச் சேர்ந்தவர். டிப்ளோமா படிக்கும் காலத்தில் இருந்து எனக்கு வகுப்புத் தோழர். நாங்க இரண்டு பேரும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி யோசிப் போம். படிச்சு முடிச்ச பிறகு, அவரும் நான் வேலை பார்த்து வந்த நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தாரு. இதுக்கு நடுவுல இரண்டு பேரும் சேர்ந்து, 2014-ல் பீன் டெக்னாலஜிஸ்ங்கிற பெயர்ல கம்பெனி ஒன்றை ஆரம்பித்தோம். நாங்க சேர்த்து வச்ச பணத்தை முதலீடு செஞ்சு தொழிலை ஆரம்பிச்சோம். லாரி, கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் டிராக்கிங் சாஃப்ட்வேர் உருவாக்கும் நிறுவனம் அது. நாங்க இரண்டு பேரும் அவங்க அவங்க வேலையைப் பார்த்துக்கிட்டு, இந்தத் தொழிலை நடத்தினோம். கடின உழைப்பால் அந்தத் தொழிலை சக்சஸ் பண்ணினோம்.
உசுப்பேற்றிய நெகட்டிவ் கேள்வி...
ஆனா, அதுக்கு முன்னாடி, ‘ஊர்க்குருவி பருந்தாக முடியுமா?’னு பலரும் எங்களைக் கேலி செஞ்சாங்க. அந்தக் கேள்வி என்னை உசுப் பேத்திச்சு. அவங்க எங்க மேல தெளிச்ச நெகட்டிவ் எண்ணத்தை நாங்க எங்களுக்கான பாசிட்டிவ் டானிக்கா மாத்திக்கிட்டோம். அதே போல, பருந்தாக முடியுமானு அவங்க கேட்ட கேள்வியில இருந்து, ‘ஃப்ளையர்’ங்கிற வார்த்தையை எடுத்துக் கிட்டோம். அந்த வார்த்தை யையே எங்களோட பிராண்டா மாற்ற நினைத்தோம். ஆனா, நானும், ராமும் வேலை பார்த்துகிட்டே தனியார் கம்பெனிகளுக்கு வெப்சைட், மொபைல் அப்ளிகேஷன்ஸ், கஸ்டமைஸ்டு அப்ளிகேஷன்ஸ், வெப் அப்ளிகேஷன்ஸ்னு உருவாக்கி தர்ற வேலையை செய்ய ஆரம்பிச்சோம். வெளி நாடுகள்ல இருந்து எங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கிற அளவுக்கு வளர்ந்தோம்.
ஆனா, மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பு. ‘ஃப்ளையர்’ங்கிற வார்த்தை, ‘என்னை வச்சு ஏதாச்சும் பண்ணுங்க’னு எங்க இரண்டு பேரையும் கேட்டுக் கிட்டே இருந்துச்சு. இந்த நிலையிலதான், சின்ன வயசுல நான் நடந்தே வீட்டுக்கு வந்தப்ப நினைச்ச பைக் டாக்ஸி கான் செப்ட் கண்முன்னே வந்தது. ராமுக்கும் அந்த ஐடியா வர, ‘ஃப்ளையர்ஸ் வீல்ஸ்’ங்கிற இந்தத் தொழிலை ஆரம்பிச்சா என்ன?’னு கேட்டார்.
‘ஃப்ளையர் பைக் டாக்ஸி...’
இந்தியாவுல அவ்வளவா ஆரம்பிக்கப்படாத அந்த முயற்சியை 2017-ம் வருஷம் நாங்க, ‘ஃப்ளையர் பைக் டாக்ஸி’ங்கிற பெயர்ல கரூர், பொள்ளாச்சியில் மட்டும் ஆரம்பிச்சோம். ‘ஃப்ளையர்’ங்கிற வார்த்தையை ரெஜிஸ்டர் பண்ணினோம். நானே ரைடரா இருந்தேன். அதைத் தவிர, இரண்டு ஊர்களிலும் சேர்த்து 12 பேர்களை ஊழியர்களாக நியமிச்சோம். இரண்டு மாசம் தொடர்ந்தோம். ஆனா, அந்த கான்செப்ட் மக்களுக்குப் புரியாததால, அந்த முயற்சி தோல்வியில முடிஞ்சது. கிட்டத் தட்ட ரூ.4 லட்சம் நஷ்டம். ‘இது ஃப்யூச்சருக்கான ஐடியா. இப்போது மூட்டையைக் கட்டி வச்சுட்டு, பின்னாடி எடுத்துக் குவோம்’ என்கிற முடிவை எடுத்தோம்.
‘ஃப்ளையர் ஈட்ஸ்...’
2019-ல் ஃபுட் டெலிவரி ஆப் நிறுவனங்கள் மாதிரி, நாங்களும் ‘ஃப்ளையர் ஈட்ஸ்’ங்கிற பெயர்ல ஃபுட் டெலிவரி சர்வீஸைத் தொடங்கினோம். முதல் வருடம் நஷ்டம்தான். எங்களோட கடுமை யான உழைப்பால, அதை வெற்றி பெற வச்சோம். தமிழ்நாட்டில் உள்ள கரூர், பொள்ளாச்சி மாதிரி யான டயர் 3, அதற்குக்கீழ் உள்ள ஊர்களில் நாங்க இந்த ஃபுட் டெலிவரியை செஞ்சோம். அதைப் பார்த்த ஒரு நிறுவனம், எங்க கம்பெனியை விலைக்குக் கேட் டாங்க. கம்பெனியை விக்கிற எண்ணம் எங்களுக்கு இல்ல. மாறாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, சிங்கப்பூர் என்று எங்க தொழிலை விரிவுபடுத்தினோம்.
இந்த நிலையில், நாங்க மூட்டை கட்டிவச்சுருந்த, பைக் டாக்ஸி ஐடியாவை மறுபடியும் எடுத் தோம். ஏற்கெனவே, தமிழகம் முழுக்க ஃப்ளையர்ஸ் ஈட்ஸுக்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இருக்கிறதால, அவங்க மூலமா இந்த ஐடியாவை செயல்படுத்த நினைச்சோம். இதுல ஆட்டோ வையும் இணைக்க நினைச்சதால, கரூர், பொள்ளாச்சியில் மட்டும் முதலில் ஆட்டோ சங்கங்களைச் சந்தித்துப் பேசி, அவங்க மூலமாக ஆட்டோ டிரைவர்களை எங்க ளோட இணைச்சோம். கரூரில் 32 ஆட்டோகளும், பொள்ளாச்சியில 47 ஆட்டோக்களும் எங்களோட இணைஞ்சது.
கடந்த வருஷம், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, தொடங்கினோம். இதுல, ஏற்கெனவே எங்க ஃபுட் டெலிவரி ஆப் சர்வீஸில் இருந்தவங்களையே பைக் டாக்ஸிக்கும் பயன்படுத்திக்கிட்டதால, அவங்களுக்கு டபுள் இன்கம் கிடைக்க ஆரம்பிச்சது. இது பத்தி, ஆன்லைன் புரொமோஷன் செஞ்சோம். முதல்ல நடந்தது மாதிரி இப்போதும் கையைக் கடிச்சுரக்கூடாதுனு கவனமா இதைச் செயல்படுத்தினோம். பைக் டாக்ஸி பத்தி இப்ப மக்கள்கிட்ட விழிப்புணர்வு இருக்கறதால, மக்கள்கிட்ட எங்க ‘ஃப்ளையர் வீல்ஸ்’ கான்செப்டை ஈஸியாகக் கொண்டுபோனோம். நாலே மாசத்துல லாபம் சம்பாதிக்க ஆரம்பிச்சோம்.

1,000 பைக், 350 கார், 750 ஆட்டோ...
எங்க ‘ஃப்ளையர் ஈட்ஸ் ஃபுட் டெலிவரி ஆப் சர்வீஸ்’ செயல்பாட்டில் இருக்கும் 100 லொகேஷன்களில் ஃப்ளையர் வீல்ஸைத் தொடங்கியிருக்கோம். தமிழ்நாடு முழுக்க 1,000 பைக், 350 கார், 750 ஆட்டோ, 100 கனரக வாகனங்கள் எங்களோட டைஅப்பில் இருக்கு. அதிகபட்சம் 10 கிலோ மீட்டர் வரை கஸ்டமர்களை கொண்டுபோய் டிராப் பண்ண வைக்கிறோம். கார், பைக், ஆட்டோன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி கட்டணம் ஃபிக்ஸ் பண்ணியிருக்கோம். நாங்க வாங்குற கட்டணம் குறைவா இருக்கிறதால, மக்கள்கிட்ட தொடர்ந்து ஆதரவு கிடைக்குது. தவிர, திருவாரூர், சீர்காழி, அரியலூர்னு பல ஊர்கள்ல 13 பேர் ஃப்ரான்சைஸி எடுத்திருக்காங்க. ஃப்ரான்சைஸி எடுக்க ரூ.10,000 தந்தா போதும். லாபத்துல 45 சதவிகிதமும், மார்க்கெட்டிங் செய்ய 50 சதவிகிதமும் ஃப்ரான்சைஸி எடுத்தவங்களுக்குத் தர்றோம்.
இந்தியா முழுக்க எங்க ‘ஃப்ளையர் வீல்ஸ்’ சர்வீஸைக் கொண்டு போகணும்னு ஆசை. இப்ப ரூ.15 லட்சம் வரை டேர்ன்ஓவர் செய்றோம். இதைப் பார்க்குறவங்க, ‘பரவாயில்லையே, ஊர்க்குருவியா இருந்த நீங்க பருந்தாகிட் டீங்களே’னு பாராட்டுறாங்க.
புதுசா தொழில் தொடங்க நினைக்கிற இளைஞர்கள், வெறும் டெக்னாலஜியை மட்டும் முழுமையாக நம்பக் கூடாது. முதல்ல, தேர்ந்தெடுக்கும் தொழிலோட மார்க்கெட்டையும், அடுத்து அதற்கான கஸ்டமர்களையும் பத்தி ஆழமா புரிஞ்சுக்கணும். டெக்னாலஜியைத் தாமரை இலைத் தண்ணீர் மாதிரி பயன்படுத்தணும். தவிர, காலம் நேரம் பார்க்காத கடின உழைப்பு, விடா முயற்சி உள்ளிட்ட அம்சங்கள் இருந்தா, நிச்சயம் ஜெயிக்கலாம்’’ என்று பேசி முடித்தார் குமார்.
தோல்வி என்பது நிரந்தரமில்லை என்பதைப் புரிந்து கொண்ட இந்த இளைஞர்களுக்கு வெற்றி தொடரட்டும்!