நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கோவில்பட்டி... கடலை மிட்டாயின் தலைநகரம்..!

கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணன்

1940-ல் கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்னம்பல நாடார்தான் முதலில் வெல்லப்பாகுடன் சேர்த்து கடலை மிட்டாயைத் தயார் செய்தார்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என்றாலே ‘கடலை மிட்டாய்’தான் சட்டென நினைவுக்கு வரும். பொதுவாகவே, கடலை மிட்டாய் தயாரிப்பும் விற்ப னையும் கோவில்பட்டியில் எப்போதும் சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருக்கும். ஆனால், 2020-ல் புவிசார் குறியீடு கிடைத்த பிறகு, கடலை மிட்டாய் விற்பனை ஏகத்துக்கும் அதிகரித்து, அந்தத் தொழிலில் புழங்கும் பணமும் வெகுவாக அதிகரித் திருக்கிறது.

கடலை மிட்டாய் விற்பனை குறித்து கோவில் பட்டி வட்டார கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளரும் கே.என்.ஆர் கடலை மிட்டாய் கம்பெனியின் உரிமையாளருமான கண்ணனிடம் பேசினோம்.

கண்ணன்
கண்ணன்

5,000 குடும்பங்களுக்கு வேலை...

‘‘கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் கரிசல்காட்டு நிலக் கடலையும், தேனி, மதுரை, சேலம் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் கரும்பு வெல்லமும்தான் கடலை மிட்டாயின் சுவைக்கு முக்கியமான காரணம். கடலை மிட்டாய்த் தயாரிப் புத் தொழிலில் 300-க்கும் மேற்பட்ட சிறு கம்பெனி களில் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடி யாகவும், 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகிறார்கள்.

1940-ம் ஆண்டு முதலே கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தயாரிக்கப்பட்டு வருகிறது. கோவில் பட்டி யைச் சேர்ந்த பொன்னம்பல நாடார்தான் கரும்பு வெல்லப் பாகுடன் உடைத்த கடலை யைச் சேர்த்து முதலில் கடலை மிட்டாயாகத் தயார் செய்தார். அவருக்குக் குழந்தைகள் கிடையாது. அவரிடம் கடலை மிட்டாய் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த சிலர், அவரவர் பிராண்டு களில் கடலை மிட்டாய் உற்பத்தியைத் தொடங்கி செய்து வந்தார்கள்.

புவிசார் குறியீட்டால் கூடுதல் உற்பத்தி...

நாள் ஒன்றுக்கு கோவில் பட்டி சுற்று வட்டாரப் பகுதி களில் 20,000 முதல் 30,000 கிலோ கடலை மிட்டாய் உற்பத்தி செய்யப்படுகிறது. 200 கிராம், 250 கிராம், 500 கிராம், 1 கிலோ பாக்கெட்டுகளாக விற்பனை செய்கிறோம். ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.160 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தவிர, 5 ரூபாய் முதல் 50 ரூபாய் பாக்கெட்டுகளாகவும் விற்பனை செய்கிறோம்.

நீண்டநாள் இருப்பு வைக்கப்பட்ட நிலக்கடலை, கழிவு வெல்லப்பாகு என தரமற்ற பொருள்களைப் பயன்படுத்தி சிலர் ‘கோவில்பட்டி கடலைமிட்டாய்’ என்ற பெயரில் போலிகளை விற்பனை செய்து வந்தார்கள். இந்த போலிகளைத் தடுக்கவும், எங்கள் வியாபாரத்தின் பாதுகாப்புக்காகவும் கோவில் பட்டியிலுள்ள கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் ஒன்றிணைந்து புவிசார் குறியீட்டுக்காக விண்ணப்பித்தோம்.

2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. கடலை மிட்டாய்க்குப் புவிசார் குறியீடு கிடைத்த பிறகு படித்த, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும் கடலை மிட்டாய் உற்பத்தியை முறையாகத் தெரிந்து கொண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகரித்து உள்ளது.

கோவில்பட்டி... கடலை மிட்டாயின்
தலைநகரம்..!

திருமண விழாவில் கடலை மிட்டாய்...

தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்கும் திருமணங் களின் தாம்பூலப் பைகளில் இனிப்புக்காக கடலை மிட்டாய்தான் போட்டுக் கொடுப்பார்கள். இந்தப் பகுதியில் திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும் மகளுக்கு புதுப் பானையில் சீனி, பூந்தி, லட்டு போன்ற இனிப்பு பண்டங்களுக்குப் பதிலாக கடலை மிட்டாயைத்தான் போட்டு அனுப்பி வைக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டாகப் பிறந்தநாள் கொண்டாடும் பள்ளி மாணவர்களும் சாக்லேட், கேக் போன்ற இனிப்புகளுக்குப் பதிலாகக் கடலை மிட்டாயைக் கொடுத்து மகிழ்வதைப் பார்க்கும்போது எங்களைப் போன்ற கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

கடலை மிட்டாய்க்குத் தலைநகரமாக விளங்கும் கோவில்பட்டிக்கு அடுத்தமுறை சென்றால், கடலை மிட்டாயை வாங்க மறக்காதீர்கள்!

படங்கள்: வே.அரவிந்த்குமார்