மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வெற்றித் தலைமுறை - 12: மூன்று தலைமுறைகள்... 75 ஆண்டுகள்... ஜொலிக்கும் தங்கமயில் ஜுவல்லரி!

அருண்
பிரீமியம் ஸ்டோரி
News
அருண்

பாலு ஜுவல்லரி பிறகு எப்படி ‘தங்கமயில்’ எனப் பெயர் மாற்றம் கண்டது...

அடுத்தடுத்த தலைமுறையினர் கூட்டாக முயற்சி செய்து உழைத்தால், ஒரு சிறிய கடையைக்கூட மிகப்பெரிய பிராண்டாக மாற்ற முடியும் என்பதற்குச் சான்று, ‘தங்கமயில் ஜுவல்லரி’. 75 ஆண்டுகளுக்குமுன் 10-க்கு 10 சதுரஅடி பரப்பளவில் தொடங்கப்பட்ட சிறிய நகைக்கடை இன்று 53 கிளைகள், 25 லட்சம் வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது.

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர் பாலுசாமி. தன் குடும்ப வருமானத்துக்காக மதுரையில், ‘பாலு ஜுவல்லரி’ என்ற சிறிய நகைக்கடையை நடத்தி வந்தார். மற்ற நகைக் கடைகள் எல்லாம் மதுரையில் நகைக்கடை வீதியில் இருக்க, அதிக வாடகை கொடுக்க இயலாததால் பாலு ஜுவல்லரி மட்டும் வேறு ஒரு தெருவில் இருந்தது. நகைக்கடை பஜாரில் தன் நகைக் கடையைத் திறக்க வேண்டும் என்பதே பாலுசாமியின் ஆசையாக இருந்தது. அந்தக் கனவைப் பல போராட்டங்களுக்குப்பின் அடுத்த தலைமுறையினர் நிஜமாக்கினார்கள்.

1980-ல் பாலுசாமியின் மகன்களான பலராம கோவிந்த தாஸ், ரமேஷ், குமார் ஆகிய மூவரும் நகைக்கடைத் தொழிலில் இணைந் தனர். அவர்களின் அதிரடி முயற்சியில் ‘பாலு ஜுவல்லரி’ மதுரை நகைக்கடை பஜாரில் உள்ள ஒரு வாடகை கட்டடத்தில் திறக்கப் பட்டது. உள்ளூர் சேனல்களில் விளம்பரங்கள், விளம்பரப் பதாகைகள், நோட்டீஸ், செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுப்பது, வித்தியாசமான ஆஃபர்கள் என பிசினஸை விறுவிறுப்பாக்கினார்கள். அதனால் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது.

அப்படி இருந்த பாலு ஜுவல்லரி பிறகு எப்படி ‘தங்கமயில்’ எனப் பெயர் மாற்றம் கண்டது என்பது உட்பட கடந்த காலத்தில் இந்த நிறுவனம் அடைந்த வளர்ச்சி பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அந்த நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை நிர்வாகிகளில் ஒருவரான அருண்.

அருண்
அருண்

“எங்களுடைய நகைக்கடை எங்கள் குடும்பத்தின் தொழில் என்பதைத் தாண்டி அது எங்களின் அடையாளம். தாத்தா ஆரம்பித்த சிறிய நகைக்கடையை பிராண்டாக மாற்ற இரண்டாவது தலைமுறையினர் எடுத்த முயற்சிகள் ஒவ்வொன்றும் அதிரடி ரகம். முதலில், தரத்தில் கவனம் செலுத்தி, மதுரையிலேயே முதல் முறையாக 916 ஹால்மார்க் பொருள்களை விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். அதை மக்களுக்குத் தெரியப் படுத்த, விளம்பரங்களில் கவனம் செலுத்தினார்கள். இந்த இரு முயற்சியும் ஒன்றாக நடந்ததால், எங்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமானது.

அந்த நேரத்தில்தான் தொழிலை பிராண்டாக மாற்றும் முடிவுக்கு அப்பா மற்றும் சித்தப்பாக்கள் வந்துள்ளனர். ஒரு பிராண்டின் பெயர் தனிப்பட்ட நபரின் பெயராக இருக்கக் கூடாது என்று நாம் இப்போது படிக்கிறோம். ஆனால், என் அப்பா மற்றும் சித்தப்பாக்கள் அதை யோசித்து ‘பாலு ஜுவல்லரி’யை ‘தங்கமயில்’ என மாற்றினார்கள். எப்படித் தெரியுமா? எங்கள் பாட்டியின் பெயர் அன்ன மயில். அதிலிருந்து ‘மயில்’ என்பதை எடுத்து, தங்கத்தை சேர்த்து, ‘தங்கமயில்’ என்கிற பெயரைத் தேர்வு செய்தார்கள்.

நான், அண்ணன்கள், தம்பி என மூன்றாவது தலைமுறையில் நாங்கள் ஐந்து பேர். சிறுவயதில் இருந்தே கடைக்கு வருவது, அங்கு நடக்கும் செயல்பாடுகளைப் பார்ப்பது, விற்பனை, மார்க் கெட்டிங் போன்ற பிரிவுகளில் வேலை பார்ப்பது என பிசினஸை செயல்முறை யாகக் கற்றுக்கொண்டோம். அதனால் சிறு வயதில் இருந்தே பிசினஸில் என்ன நடக்கிறது என்பதில் நாங்கள் ஐந்து பேருமே அப்டேட்டாக இருந்தோம்” என்ற அருண், அடுத்தடுத்து கிளைகள் தொடங்கியதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

“வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமானதால், பெரிய கடை தேவைப்பட்டது. 12,000 சதுர அடி பரப்பளவில் மதுரை நேதாஜி ரோட்டில் 2001-ம் ஆண்டு எங்கள் நிறுவனத்துக்கென பிரமாண்ட மான ஒரு ஷோரூமைத் திறந்தோம். மதுரையைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்களுக்கு எங்களின் நகைக் கடை பற்றித் தெரிந்திருந்தது. ஆனாலும், வாடிக்கையாளர் களைத் தக்கவைக்க ‘காரட் மீட்டர்’ என்கிற ஒன்றை அறிமுகம் செய்தோம். அதாவது, நகையின் தரத்தை வாடிக்கை யாளர்கள் நேரடியாக சோதித் துப் பார்க்க முடியும். இப்படி தரத்திலும் விளம்பரத்திலும் ஒரே நேரத்தில் கவனத்தைச் செலுத்தியதால், எங்களுடைய பிராண்ட் வேகமாக வளர ஆரம்பித்தது.

2001-ல் மூன்றாவது தலை முறையில் இருந்து எங்களுடைய அண்ணன் பிசினஸில் இணைந் தார். அடுத்தடுத்த கிளைகள் தொடங்கி, பிசினஸை விரிவு படுத்துவதே எங்கள் தலைமுறை யினரின் திட்டமாக இருந்தது. கிளைகள் தொடங்க வேண்டும் என்றதும், எங்களுடைய பிராண்ட் எந்தெந்த ஊர் மக்களுக்கு சென்றடைந்துள்ளது, எங்கிருந்து நிறைய மக்கள் தங்கம் வாங்க மதுரைக்கு வருகிறார்கள் என்பது போன்ற தகவல்களை எடுத்தோம். அதை அடிப்படை யாக வைத்து, 2008-ல் ராஜபாளை யத்தில் எங்களுடைய இரண்டாவது கிளையைத் தொடங்கினோம்.

2012-ல் நானும் என் இன்னொரு அண்ணன் கோகுலும் பிசினஸில் இணைந்தோம். இரண்டு வருடங்கள் மதுரையில் உள்ள ஷோரூமில் பயிற்சியில் இருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண் டோம். அதன்பின் என் தம்பியும் இணைந்தார். என் அப்பா பலராம கோவிந்த் தாஸ் விற்பனையாளர் களைத் தேர்வு செய்வது, நகைகளை எங்கு வாங்குவது என்பதில் நிபுணர். ரமேஷ் சித்தப்பா வாடிக்கையாளர்கள் பற்றியும், நிறுவனத்தின் பணியாளர்கள் தேர்விலும் எக்ஸ்பர்ட். குமார் சித்தப்பா, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைக் கணிப்பதில் கில்லாடி. அதனால் மூவரிடம் இருந்தும் கற்றுக்கொள்வதுதான் மூன்றாவது தலைமுறையினருக் கான முதல் பாடமாக இருந்தது.

சொந்தத் தொழிலாக இருந் தாலும், உறவுமுறையெல்லாம் பிசினஸுக்கு வெளியேதான். பிசினஸுக்குள் வர வேண்டும் எனில், மதுரைக் கிளையில் குறைந் தது ஒரு வருடமாவது பயிற்சி எடுக்க வேண்டும். விற்பனை மேலாளர் முதல் மற்ற எல்லாப் பிரிவிலும் வேலை செய்த அனுபவங்கள் எங்கள் எல்லோருக் குமே இருக்கிறது. மேலும், எந்த முடிவை எடுக்கும் முன்பும் முந்தைய தலைமுறையினரின் வழிகாட்டுதலைப் பெறுவோம். ஏதேனும் மாற்றங்களைச் செய்யும் முன் முந்தைய தலைமுறையினருக்கு டேட்டாவுடன் அறிக்கை தர வேண்டும் எனப் பல நடைமுறை களைத் தவறாமல் பின்பற்றுகிறோம்.

அடுத்தடுத்த தலைமுறையினர் இணைந்ததால் அடுத்தடுத்த கிளைகளை எங்களால் எளிதாகத் தொடங்க முடிந்தது. இப்போது எங்களுக்கு 53 கிளைகள் உள்ளன. ஒரு கிளையைத் தொடங்கும்முன், ஒவ்வொருவரும் நிறைய இடங்களுக்குச் செல்வோம். எந்த ஊரில் எங்கள் நகைக் கடைக்கான தேவை இருக்கிறது, எவ்வளவு பெரிய ஷோரூம் அங்கு தேவை, என்ன மாதிரியான நகை வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானித்து சர்வே எடுத்த பின்புதான், கிளைகளைத் தொடங்குவோம். ஒவ்வொரு கிளைக்கும் அங்குள்ள மக்களைப் பொறுத்து டிசைன்களில் வேறுபாடு காட்டுவோம். அதே நேரம், வெரைட்டியான நகைகளை மக்களுக்குக் காட்டுவது அவசியம் என்பதால், எங்களுடைய கிளைகளில் உள்ள நகைகளை ஆன்லைன் மூலம் பார்த்து தேர்வு செய்யலாம். அதை நாங்கள் ‘ஹோம் டெலிவரி’ செய்யும் திட்டத்தையும் அறிமுகப் படுத்தி இருக்கிறோம்’’ என்ற அருண், ஒரு முக்கியமான விஷயத்தையும் சொன்னார்.

வெற்றித் தலைமுறை - 12: மூன்று தலைமுறைகள்... 75 ஆண்டுகள்... ஜொலிக்கும் தங்கமயில் ஜுவல்லரி!

“2013-ம் ஆண்டு நாங்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வைத்திருந்தோம். ஆனால், மக்களின் வாங்கும் சக்தி குறைந்து. பிசினஸ் இறக்கத்தை சந்தித்தது. அப்போது எங்களிடம் 30 கிளைகள் இருந்தன. பிசினஸை மீட்டெடுக்க குடும்பமாக களம் இறங்கினோம். கிளைகள் தொடங்குவதை அடுத்த ஐந்து வருடத்துக்கு நிறுத்திவைத்து விட்டு, எல்லாக் கிளைகளிலும் விற்பனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினோம். அதே போல, எங்கு, எந்த நகை, எப்போது விற்பனையாகும் என்பதை எல்லாம் கணிக்க டேட்டா அடிப்படையிலான சாஃப்ட்வேரை உருவாக்கினோம். ஸ்டாக், நகைத் தேர்வு, மார்க்கெட்டிங், சேல்ஸ் என எல்லாவற்றையும் கண்காணிக்க ஒரு குழுவை உருவாக்கினோம். எல்லாம் டிஜிட்டலாக மாற்றியதால், பாஸ்ட் மூவிங் நகைகள் எவை, ஸ்லோ மூவிங் நகைகள் எவை என்பதை எங்களால் எளிதாகக் கணிக்க முடிந்தது. அதன் அடிப்படையில்தான், நகைகள் தேர்வு செய்கிறோம்.

தற்போது வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருமே தனித்துவமான நகைகளைத்தான் விரும்புகிறார்கள். அதனால் தனித்துவமான டிசைன்களில் கவனம் செலுத்து கிறோம். இந்தியா முழுவதும் உள்ள தயாரிப்பாளர்களிடம் இருந்து நகைகளைத் தேர்வு செய்து வாங்குகிறோம்.

எங்கள் பிசினஸ் 2017-ல் பழைய நிலையை எட்டியது. அடுத்தடுத்து கிளைகளைத் தொடங்க ஆரம்பித்தோம். கொரோனா நேரத்தில் மீண்டும் சறுக்கல் இருந்தாலும், சமாளித்து மீண்டு எழுந்தோம். இப்போது எங்களுக்கு 53 கிளைகள் உள்ளன. 1,750 பணியாளர்கள் இருக்கிறார்கள். நாங்கள் ஐந்து பேரும் ஆளுக்கொரு துறையில் கவனம் செலுத்துகிறோம். சென்னையைச் சேர்த்து 75 கிளைகள் தொடங்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. அதை நோக்கி பயணிக்கிறோம்” என்றார் அருண்.

தங்கமயில் மேலும் மேலும் ஜொலிக்கட்டும்!