Published:Updated:

``தொழில்துறைக்கு மட்டுமல்ல... தமிழ், கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கும் பாடுபட்டவர் கருமுத்து கண்ணன்!"

கருமுத்து கண்ணன்

``சி.ஐ.ஐ போன்ற தொழில் கூட்டமைப்பு தென் மண்டலத்தில் சிறப்பாக செயல்பட காரணமானவர். புதிய தொழில் முனைவோர் உருவாகவும், தொழில்துறை மாநாடுகள் பல மதுரையில் நடைபெறவும் முயற்சி எடுத்தவர். டெக்ஸ்டைல் தொழிலில் பல சாதனைகளை செய்தவர்" - கருமுத்து கண்ணன் மறைவால் கலங்கும் மதுரை!

Published:Updated:

``தொழில்துறைக்கு மட்டுமல்ல... தமிழ், கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கும் பாடுபட்டவர் கருமுத்து கண்ணன்!"

``சி.ஐ.ஐ போன்ற தொழில் கூட்டமைப்பு தென் மண்டலத்தில் சிறப்பாக செயல்பட காரணமானவர். புதிய தொழில் முனைவோர் உருவாகவும், தொழில்துறை மாநாடுகள் பல மதுரையில் நடைபெறவும் முயற்சி எடுத்தவர். டெக்ஸ்டைல் தொழிலில் பல சாதனைகளை செய்தவர்" - கருமுத்து கண்ணன் மறைவால் கலங்கும் மதுரை!

கருமுத்து கண்ணன்

தென் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வந்தவருமான தியாகராஜர் மில்ஸ் தலைவர் கருமுத்து கண்ணனின் திடீர் மரணம் பல துறைகளைச் சேர்ந்தவர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உதயநிதி அஞ்சலி செலுத்தியபோது
உதயநிதி அஞ்சலி செலுத்தியபோது

மீனாட்சியம்மன் கோயில், நாயக்கர் மஹால், நான்காம் தமிழ்ச்சங்கம், தெப்பக்குளம், மதுரமல்லி போல தியாகராஜர் என்ற பெயரும் மதுரை மாநகரின் ஒரு அடையாளமாக மக்கள் மனதில் நிறுத்தியதில் கருமுத்து கண்ணனுக்கு முக்கியமான பங்குண்டு.

திடீரென அவருடைய மறைவுச்செய்தி கேட்டு பல தரப்பினரும் கவலை அடைந்துள்ளனர். மதுரையிலுள்ள தொழில் துறையினர் சிலரிடம் பேசினோம்...

கருமுத்து கண்ணன்
கருமுத்து கண்ணன்

``1953-ல் பிறந்த கருமுத்து கண்ணன், நன்றாகப் படித்து இளம் வயதிலேயே பாரம்பர்ய பஞ்சாலைத் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தைக் கவனிக்கத் தொடங்கினார். இந்தியாவிலயே சிறந்த கல்வி நிறுவனமான தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தியாகராஜர் கலைக்கல்லூரி, தியாகராஜர் மில்ஸ் தலைவராகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். அவர், 2006 முதல் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்காராக செயல்பட்டு வந்தார். இத்தனை ஆண்டுகள் யாரும் தக்காராக இருந்ததில்லை.

அதோடு மதுரை நகரின் தொழில் வளர்ச்சிக்கும் பல உதவிகளைச் செய்தார். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், அனைத்து சமூக மக்களுக்கும் பிடித்தமானவராக இருந்தார். சி.ஐ.ஐ போன்ற தொழில் கூட்டமைப்பு தென் மண்டலத்தில் சிறப்பாகச் செயல்பட காரணமானவர். புதிய தொழில் முனைவோர் உருவாகவும், தொழில்துறை மாநாடுகள் பல மதுரையில் நடைபெறவும் முயற்சி எடுத்தவர். டெக்ஸ்டைல் தொழிலில் பல சாதனைகளை செய்தவர், அதனால்தான் மத்திய அரசு இவருக்கு மத்திய ஜவுளிக்குழு தலைவராகப் பொறுப்பு கொடுத்தது. இடைப்பட்ட காலத்தில் விமான நிறுவனத்தையும் தொடங்கி நடத்தினார்.

கருமுத்து கண்ணன்
கருமுத்து கண்ணன்

ஏழை எளிய மக்களின் கல்விக்காக உதவி செய்து வந்தவர், கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை உருவாக்கிக் கொடுத்தார். அரசுக்கு கொரோனா நிவாரணமாக 1 கோடி ரூபாய் வழங்கினார். இவருடைய மறைவு மதுரையிலுள்ள தொழிற்சாலை அதிபர்களுக்கு பேரிழப்பு'' என்றனர்.

கருமுத்து கண்ணன் - உமா தம்பதியருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். வெளிநாட்டில் இரண்டு மகள்களும் வசித்துவர, மகன் ஹரி தியாகராஜன் கல்லூரி மற்றும் மில்களின் நிர்வாகத்தை சிறப்பாகச் செய்துவருகிறார்.

எப்போதும் உற்சாகமாகவும், எளிமையாகவும் மதுரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் கருமுத்து கண்ணன் கடந்த சில மாதங்களாகத்தான் உடல்நலமில்லாமல் மதுரை கோச்சடையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார்.

கருமுத்து கண்ணன்
கருமுத்து கண்ணன்

முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, கனிமொழி, எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், வேணு சீனிவாசன் உள்ளிட்ட தொழிலதிபர்கள் நேரிலும், அறிக்கை மூலமும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக தொழிலதிபர்களுடன் கம்யூனிஸ்ட் கட்சியினர் நெருங்கிப் பழக மாட்டார்கள் என்ற பேச்சுண்டு. அதற்கு மாறாக, மதுரை எம்.பி சு.வெங்கடேசடனுடன் இணைந்து மதுரைக்குப் பல பணிகளைச் செய்திருக்கிறார் கருமுத்து கண்ணன்.

இது குறித்து சு.வெங்கடேசனிடம் கேட்டோம். ``ஆம், உண்மைதான். அவர் தொழிலதிபராக இருந்தாலும் மிகவும் எளிமையானவர், எந்த நேரமும் போனில் பேசக்கூடியவர், மதுரை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மட்டுமல்ல;

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

தமிழ் மொழி வளர்ச்சி, கலை இலக்கியம், பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் ஆர்வமாக இருந்தவர். தொழிலதிபராக தன்னை சுருக்கிக்கொள்ளாமல் மதுரை மண்ணின் கலாசாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டினார்.

10 வருடங்களுக்குமுன் மதுரையில் `மாமதுரை போற்றுதும்' நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்தினோம். அந்த நிகழ்ச்சிக்கு தலைவராக அவரும் துணைத் தலைவராக நானும் இருந்து பணியாற்றினோம். அப்போது அதற்காக முழு நேரமும் உழைத்தார். பல நிகழ்வுகளை சிறப்பாக நடத்தினோம்.

தமிழகத்தில் நடைபெறும் பல கலை பண்பாட்டுத் திருவிழாக்களுக்கு மாமதுரை போற்றுதும் நிகழ்ச்சிதான் இன்றுவரை முன்னுதராணமாக உள்ளது. அவர் கோயில் தக்காராக இருந்து சிறப்பாக ஆன்மிகப் பணியைச் செய்தார். அனைவருக்கும் பிடித்தமானவர், என் மீது மிகுந்த பாசம் கொண்டவர், அவர் இழப்பு பேரிழப்பு" என்றார்.

தொழிலதிபர், கலாசார காவலர் கருமுத்து கண்ணனை இழந்து மதுரையே வாடுகிறது என்றால், அது மிகையில்லை!