மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மும்பைத் தமிழ் மக்களின் மனம் கவர்ந்த மணீஷ் லஞ்ச் ஹோம்!

ராஜாமணி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜாமணி

நேட்டிவ் பிராண்ட்- 22

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே மும்பைக்குப் புலம்பெயர ஆரம்பித்துவிட்டார் கள் தமிழர்கள். இன்றைக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் மும்பை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் வசிக்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர்கள் மும்பைக்குச் சென்றிருந்தாலும், தங்கள் கலாசாரத்தை மட்டும் மாற்றிக்கொள்ளவே இல்லை. உணவு விஷயத்தில் மும்பைத் தமிழர்கள் கொஞ்சம்கூட மாறவில்லை என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, மும்பையில் உள்ள மணீஷ் லஞ்ச் ஹோம்தான்.

மும்பையில் தமிழர்கள் அனைத்துப் பகுதியிலும் வாழ்ந்தாலும் பாரம்பர்ய தமிழக உணவுகள் கிடைப்பது மிகவும் அபூர்வமாகவே இருக்கிறது. அந்த வரிசையில் சுவை, சுத்தம் மற்றும் தரத்துடன் கொடுக்கும் உணவகமாக மணீஷ் லஞ்ச் ஹோம் இருக்கிறது. இந்த உணவகத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா சுவையில் உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவகத்தைத் தொடங்கியவர், கேரளா மாநிலம், பாலக்காடு பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட வி.எஸ்.மணி.

ராஜாமணி
ராஜாமணி

இந்த உணவு விடுதியில் இலையில் சாப்பாடு பரிமாறுவதோடு தமிழகத்து உணவகங்களில் கிடைக்கும் அனைத்து வகை சைவ உணவுகளும் கிடைக்கின்றன. தயிர் வடை, ரச வடை இங்கே பிரபலம். இது தவிர வழக்கமாகக் கிடைக்கும் அனைத்து வகை தோசைகள், பொங்கல், பூரி போன்ற இதர உணவுகளும் இங்கு கிடைக்கின்றன. தமிழகத்தி லிருந்து ஏதாவது வேலையாக மும்பை வருபவர்கள் மும்பையில் எங்கு தங்கி யிருந்தாலும், தமிழ்நாட்டு சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று நாடி வருவது மணீஷ் லஞ்ச் ஹோம் என்றால் அது மிகையாகாது.

தற்போது இந்த மணீஷ் லஞ்ச் ஹோமை வி.எஸ்.மணியின் மகன் ராஜாமணியும் அவருடைய சகோதரர்களும் நிர்வகித்து வருகின்றனர். மணிஷ் லஞ்ச் ஹோம் வளர்ந்த கதையை ராஜாமணி நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

பாலக்காடு டு மும்பை...

‘‘என் தந்தை ஏழு வயதாக இருந்தபோதே சிக்கன் பாக்ஸ் என்ற கொடிய நோய்க்குப் பெற்றோரை இழந்தார். அதன் பிறகு சகோதரி லட்சுமி அம்மாளின் பராமரிப்பில் சில காலம் இருந்துவிட்டு தனக்கு தெரிந்த சமையல் தொழிலுடன், பிழைப்பு தேடி வட இந்தியாவுக்குச் சென்றார்.

வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சமையல் வேலைகளில் ஈடுபட்டார். இறுதியாக நீதிபதி ஒருவரது வீட்டில் வேலை செய்வதற்காக மும்பை வந்தார். மும்பையில் வீட்டுவேலை செய்து கொண்டிருக்கும்போது தனக்குத் தெரிந்த சமையல் வேலையை மனதிருப்தியுடன் செய்ய ஹோட்டல் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது. இதற்காக அவர் ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1937-ம் ஆண்டு மாட்டுங்காவில் சரியான இடத்தைத் தேடினார். தற்போதய ரூயா கல்லூரி அருகில் இடம் பார்த்து சேமித்து வைத்த தொகையில் 99 ரூபாய் முன்பணமும் தந்துவிட்டார். மணீஷ் லஞ்ச் ஹோம் எனப் பெயரும் வைத்துவிட்டார். அவர் திட்டமிட்ட நாளில் இருந்து மூன்று நாள்கள் கழித்துதான் ஹோட்டல் தொடங்க முடியும் என்ற சூழ்நிலை இருந்தது.

வியாபாரமும் விளம்பரமும்...

தன்னிடமிருந்த பணம் செலவாகிவிடக் கூடாது, ஹோட்டல் ஆரம்பிக்க வைத்திருந்த தொகை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக மூன்று நாள்களாக சாப்பிடாமல் இருந்து ஹோட்டலைத் தொடங்கினார். அந்தக் காலத்தில் மும்பையில், இட்லி, தோசை மற்றும் வடை உணவுகள் கிடையாது. அந்த தென் இந்திய உணவை மராத்தியர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

அத்துடன் அருகில் இருந்த சிவாஜி பார்க் பகுதிக்கு சைக்கிளில் இட்லி, தோசை, வடையை எடுத்துச் சென்று விற்பனை செய்வார். இந்த உணவுகள் எங்கு கிடைக்கும் என்று வாடிக்கை யாளர்கள் கேட்டால் தனது ஹோட்டல் இருக்கும் இடத்தைச் சொல்லி அங்கு வரலாம் என்று தனது ஹோட்டலுக்கு விளம்பரமும் செய்தார்’’ என்ற ராஜாமணியிடம், “எங்கெல்லாம் கிளைகள் தொடங்கி இருக்கிறீர்கள்” என்று கேட்டோம்.

முக்கிய இடங்களில் கிளைகள்...

‘‘சயான் ரயில் நிலையத்துக்கு அருகில், மாட்டுங்கா தெலாங் சாலையில் எனக் கிளைகளைத் தொடங் கினோம். தெலாங் சாலையில் தொடங்கப்பட்ட கிளைக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. சாப்பிடுவதற்கு மக்கள் வரிசையில் நிற்பார்கள். ஆனால், சில ஆண்டுகளுக்குமுன் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டும் திட்டத்தால் அந்த ஹோட்டலை மூடவேண்டிய நிலை. ஆனாலும், அதே பகுதியில் மீண்டும் ஹோட்டலைத் தொடங்க வேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டு வருதால் மீண்டும் தொடங்க இடம் பார்த்துக் கொண்டிருக் கிறோம்.

இப்போது செம்பூர் ரயில் நிலையத்துக்கு அருகில் புதிதாக கிளை தொடங்கியிருக்கிறோம். எங்களது ஹோட்டலில் தயாரிக்கப்படும் ரசத்துக் காகவே வட இந்தியர்கள் எங்களது ஹோட்டலுக்கு வருகின்றனர்.

எங்கள் உணவகத்தில் சாப்பாடு, டிபன் வகை உணவுகள் தவிர, சுத்தமான நெய்யில் தயாரிக்கப் படும் மைசூர்பாக், ஜாங்கிரி, பூந்தி லட்டு, ரவை லட்டு, பாதுஷா, கேரட், கோதுமை அல்வாவும் கிடைக்கின்றன.

மும்பைத் தமிழ் மக்களின் மனம் கவர்ந்த மணீஷ் லஞ்ச் ஹோம்!

விஜயகாந்த், தேவா உள்ளிட்ட வி.ஐ.பி-க்கள்...

சாப்பாட்டை நல்ல தரத்துடன் தர வேண்டும் என்று நினைப்பார் என் தந்தை. நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று அவர் நினைத்ததே இல்லை. எனவே, சாப்பாட்டைக் குறைந்த கட்டணத்தில்தான் நாங்கள் வழங்கி வந்தோம். இதனால் தொழிலில் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. அத்துடன், அதிகப்படியான ஹோட்டல்களைத் திறந்தால், தரத்தைத் தொடர்ந்து பராமரிக்க முடியாது என்பதால், அதிக அளவில் கிளைகளைத் திறக்க வில்லை.

என் தந்தை இறந்த பிறகு ஹோட்டல் நிர்வாகத்தை எங்கள் மூத்த அண்ணன் நாராயணன் நடத்தி வந்தார். அவரின் மரணத்துக்குப் பிறகு இப்போது நானும், என் சகோதரரும் சேர்ந்து நிர்வகித்து வருகிறோம்.

எங்களது ஹோட்டலுக்கு வி.ஐ.பி-க்கள் எப்போதும் அதிக அளவில் வருவதுண்டு. தமிழகத் திலிருந்து மும்பை வரும் நடிகர் கள் எப்போதும் எங்களது ஹோட்டலுக்கு வராமல் செல்ல மாட்டார்கள்.

குறிப்பாக, நடிகர் விஜயகாந்த், இசையமைப்பாளர் தேவா எப்போது மும்பைக்கு வந்தாலும் எங்கள் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடாமல் போக மாட்டார்கள். பாடகர் ஹரிகரன், சங்கர் மகாதேவன் ஆகியோரும் எங்கள் வாடிக்கையாளர்கள் ஆவர். தவிர, கிரிக்கெட் வீரர் சந்தீப் பட்டேல் மற்றும் மராத்தி நடிகர்கள் பலரும் எங்களின் வாடிக்கையாளர்கள்’’ என்று தெரிவித்தார்.

முக்கால் நூற்றாண்டைத் தாண்டி வெற்றிகரமாக இயங்கி வரும் மணீஷ் லஞ்ச் ஹோம் தென்னிந்தியர்களின் அடையாளமாகவும் திகழ்கிறது!

படங்கள்: ரவி சாலமன்