மற்ற எபிசோடுகள்
Published:Updated:

100 ஆண்டுகள்... 5 தலைமுறைகள்... பட்டையைக் கிளப்பும் ‘பெரீஸ்’ பிஸ்கட்! - வெற்றித் தலைமுறை 17

பாலசுப்பிரமணியன், பரத் 
பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
பாலசுப்பிரமணியன், பரத் பாண்டியன்

விலங்குகள், எண்கள் என வித்தியாச மான வடிவில் பிஸ்கட் தயாரித்து மக்கள் கவனத்தை ஈர்த்தது மதுரையில் இருக்கும் பெரீஸ் பிஸ்கட்...

போட்டியாளர்களைப் பற்றி கவலை கொள்ளாமல், தரத்தில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்தினால், தொழிலில் தலைமுறை தாண்டிய சாதனை படைக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் மதுரை ‘பெரீஸ்’ பிஸ்கட் நிறுவனம். உசிலம்பட்டியில் சிறிய அளவில் தொடங்கிய கடை இன்று 100 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்ட நிறுவன மாக உருவெடுத்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த நண்பர்கள் பழனிக்குமார் மற்றும் பெரியசாமி. 1917-ம் ஆண்டு தங்கள் பகுதியில் கிடைக்கும் மூலப்பொருள்களை வைத்து ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். உசிலம்பட்டி பகுதியில் மாடு வளர்ப்பும், விவசாயமும் பிரதான தொழிலாக இருந்துள்ளது. பால், தயிர், நெய் போன்றவற்றைப் பலரும் தொழிலாகச் செய்ய, வித்தியாசமாகவும் புதுமையாகவும் ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்பது அந்த நண்பர்களின் திட்டமாக இருந்தது.

வெள்ளையர்கள் நம் நாட்டை ஆண்டுவந்த அந்தக் காலத்தில் டீ, பிஸ்கட் போன்றவை புதிதாக அறிமுகமானது. அதைப் பார்த்து பிஸ்கட் தயாரிக்கும் எண்ணம் பழனிக்குமார் மற்றும் பெரியசாமிக்கு வந்துள்ளது. வீட்டிலேயே பிஸ்கட் மற்றும் ரொட்டி தயாரிப்பைத் தொடங்கி, சிறிய அளவில் பேக்கரி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அந்த பேக்கரி மக்களிடம் பிரபலமாக மாறியது. பிசினஸ் வளர்ச்சி அடைய ஆரம்பித்த சூழலில் இரண்டாம் தலைமுறையாக தங்கையா 1930-ம் ஆண்டு பிசினஸில் ஈடுபட ஆரம்பித்தார். அதன்பின் பிசினஸ் பல மாறுதல்களைச் சந்தித்தது. அடுத்தடுத்து பெரீஸ் நிறுவனம் வளர்ந்த கதையைப் பகிர்கிறார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன்.

பாலசுப்பிரமணியன், பரத் 
பாண்டியன்
பாலசுப்பிரமணியன், பரத் பாண்டியன்

“பெரீஸ் நிறுவனத்தில் நான் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவன். மற்ற பிஸ்கட்களைவிட எங்கள் பிஸ்கட் சற்று விலை அதிகம்தான். மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு விலையைக் குறைத்தால், தரத்தில் சமரசம் செய்யவேண்டிய நிலை வரும். அதை செய்யாமல் இருந்ததால்தான், பிஸ்கட் தயாரிப்பில் 100 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது எங்கள் நிறுவனம்.

ஆரம்ப காலத்தில் கொள்ளுத் தாத்தாவும் அவரின் நண்பர் பெரியசாமியும் இணைந்து கையில் இருந்த தொகையை வைத்து வீட்டின் முன்பகுதியில் ஆரம்பித்ததுதான் பேக்கரி பிசினஸ். அப்போது எங்கள் பகுதியில் பெரிய தொழிற் சாலைகள் எதுவும் கிடையாது. அதனால் வேலை இல்லாமல் நிறைய பேர் அவதிப்பட்டு வந்துள்ளனர். பேக்கரி பெரிய அளவுக்கு வந்ததும் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு தரவேண்டும் என்பதை தாத்தா இலக்காகக் கொண்டிருந்தாராம்.

சிறிய அளவில் தொடங்கிய பேக்கரி நிச்சயம் ஒரு நிறுவனமாக வளரும் என்பதில் தாத்தா உறுதி யாக இருந்திருக்கிறார். அப்போதே நிறுவனத்துக்கு பெயர் வைக்க வேண்டும் எனத் தெளிவாக யோசித்து ‘பெரீஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர். தாத்தாவின் நண்பர் பெரியசாமியின் பெயரை சுருக்கி உருவானதுதான் ‘பெரீஸ்.’

கொள்ளுத் தாத்தா காலத்தில் குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டும் இருந்த எங்கள் பிசினஸை இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தங்கையா தாத்தாதான் அடுத்த இடத்துக்கு நகர்த்தியுள்ளார்.

பழனிக்குமார் தாத்தாவின் மருமகன்தான் தங்கையா தாத்தா. 1930-ம் ஆண்டு தங்கையா தாத்தா பிசினஸுக்குள் வந்ததும், பேக்கரியை நிறுவனமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். தயாரிப்புப் பணிகளுக்கு இயந்திரங்களை அறிமுகப்படுத்தி, புதிய தொழிற் சாலை ஒன்றையும் தொடங்கி யுள்ளார். அதனால் பிஸ்கட் உற்பத்தி அளவு அதிகரித்துள்ளது.

உற்பத்தி அதிகரித்ததால், விற்பனையை அதிகரிக்க வேண்டிய தேவை வந்துள்ளது. அதனால் பிஸ்கட்களை வண்டி களில் ஏற்றிக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் பல இடங்களுக்குப் பயணம் செய்து அவரே மார்க் கெட்டிங் செய்து விற்பனை செய்துள்ளார்.

வட்டம் மற்றும் சதுர வடிவ பிஸ்கட்கள் மட்டும் இருந்த காலகட்டத்தில், விலங்குகளின் வடிவங்கள் கொண்ட பிஸ்கட், எண்களின் வடிவங்கள் கொண்ட பிஸ்கட்கள், பொத் தான் வடிவ பிஸ்கட்கள் போன்ற வற்றை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளார்.

அரசுப் பொருள் காட்சிகளில் கடைகள் அமைத்து பிஸ்கட்களை விற்பனை செய்துள்ளார். அதனால் எங்கள் பிராண்ட் பல பகுதியில் இருந்த மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது.

அடுத்தபடியாக, எல்லா ஊர்களிலும் டீலர்களை நியமனம் செய்து விற்பனையைத் தொடங்கியுள்ளார். போக்கு வரத்து வசதிகள் பெரிய அளவு இல்லாத அந்தக் காலத்தில், பிசினஸில் தாத்தா செய்த ஒவ்வொரு விஷயமும் அடுத் தடுத்த தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

100 ஆண்டுகள்... 5 தலைமுறைகள்...
பட்டையைக் கிளப்பும் ‘பெரீஸ்’ பிஸ்கட்! - வெற்றித் தலைமுறை 17

எங்கள் பிசினஸுக்கு மிகப் பெரிய ஒரு வாய்ப்பாக இந்திய ராணுவத்துக்கு பிஸ்கட் விநியோகம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததுதான். ஒரு காலகட்டத் தில் பெரியசாமி தாத்தாவின் குடும்பம் தயாரிப்புப் பணிகளில் இருந்து விலக, பழனிக்குமார் தாத்தா வழிவந்த எங்கள் குடும்பத் தினர் பிசினஸை முழுவதுமாகக் கவனிக்கத் தொடங்கினார்கள்.

1960-ம் ஆண்டு இறுதியில் மூன்றாம் தலைமுறையிலிருந்து என் அப்பா பாண்டியன் பிசினஸில் இணைந்தார். அப்பா பிசினஸில் நுழைந்ததும் வாடிக்கையாளர் களின் தேவைக்கேற்ப சிறிய அளவு பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் டின்கள், மூடியுடன்கூடிய ஜார்கள் போன்றவற்றை அறிமுகம் செய் தார். பிஸ்கட் காலியான பின்பு, அதை சமையலறையில் பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதால், மூடியுடன் கூடிய ஜார் கான்செப்ட் பல பெண்களுக்கும் பிடித்துப் போனது. அதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமானது.

அப்பா காலத்தில் பிசினஸில் பெரிய அளவு மாற்றம் ஏதும் நிகழ வில்லை என்றாலும், காலத்துக்கேற்ப பிசினஸ் டெக்னிக்கை மாற்ற வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டோம்” என்ற பாலசுப்பி ரமணியன் நான்காம் தலைமுறை யினர் செய்த மாற்றம் பற்றி பேசத் தொடங்கினார்.

‘‘சிறு வயதில் இருந்தே நானும் என் அண்ணன் மகேந்திரவேலும் பிஸ்கட் தயாரிக்கும் தொழிற் சாலைக்கு வருவோம். அண்ணன் மார்க்கெட்டிங் சார்ந்த விஷயங் களில் கவனம் செலுத்துவார். நான் தயாரிப்புப் பணிகளில் கவனம் செலுத்துவேன். அண்ணன் இப்போது பெரீஸ் நிறுவனத்தின் சேர்மனாக இருக்கிறார். நாங்கள் இருவரும் 1980-ம் ஆண்டு அதிகாரப் பூர்வமாக பிசினஸுக்குள் வந்தோம். அப்போது போட்டி அதிகம் இருந்தது. பல வெளிநாட்டு நிறுவனங்களின் பிஸ்கட்கள் இங்கு அறிமுகமாகியிருந்தது. இருந்தாலும், நாம் பொருளின் தரத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பது எங்கள் தலைமுறைப் பாடம். மார்க்கெட்டிங் டெக்னிக்குகளை மாற்றியது, ரேடியோ டி.வி.களில் விளம்பரம் கொடுத்தது, புதுமையான பிஸ்கட் வகைகளை அறிமுகம் செய்தது என பிசினஸை முழுவதுமாக மாற்றினோம்.

கிட்டத்தட்ட ஒரு புதுத் தொழில் தொடங்குவது போல பல சவால்களை சந்தித்தோம். 20 ஆண்டு கால உழைப்பில் நிறுவனத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தினோம். அதுவரை டின்கள் ஜார்களில், பாக்கெட்டுகள் மூலம்தான் பிஸ்கட் விற்பனை நடந்து வந்தது. நிறைய வாடிக்கையாளர் களைக் கொண்டுவர 10 பைசா பிஸ்கட்களை அறிமுகம் செய்தோம். 10 பைசா பிஸ்கட் எல்லா மக்களாலும் எளிமையாக வாங்க முடிந்தது. எதிர்பார்த்ததுபோலவே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமானது. அடுத்த படியாக 25 பைசா பிஸ்கட்கள், 2 ரூபாய் பாக்கெட்கள் போன்றவற்றை அறிமுகம் செய்தோம். செலவைக் குறைக்க விளம்பரங்களைக் குறைத்து, நாங்களே நேரடி யாகக் கடைகளில் விநியோகம் செய்வது, இலவசமாக பிஸ்கட் பாக்கெட்டுகள் கொடுப்பது போன்ற வியாபார உத்திகளைப் பின்பற்றினோம்.

2008-ம் ஆண்டு நவீன இயந்திரங்களுடன்கூடிய புதிய தொழிற்சாலையைத் தொடங்கினோம். அதில் தினமும் 10 டன் அளவுக்கு பிஸ்கட்களை உற்பத்தி செய்ய முடிந்தது. பிஸ்கட்டுகளுக்கு தரச்சான்றிதழ் வாங்கினோம். பலவகை யான சுவைகளில் 50 வகையான பிஸ்கட்களை அறிமுகம் செய்தோம். குக்கீஸ்கள், ரஸ்க்குகளை அறிமுகம் செய்தோம். எண்ணெய் சேர்க்காமல் வெண்ணெய் மட்டும் சேர்த்து செய்யும் பிஸ்கட் மக்களிடம் கூடுதல் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளுக்கு பிஸ்கட்கள் விநியோகம் செய்கிறோம். பிரபலமான ஐஸ்க்ரீம் மற்றும் பால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நாங்கள் பிஸ்கட் உற்பத்தி செய்து கொடுக்கிறோம். மக்கள் சிறுதானியங்களை மக்கள் விரும்புவதால், சிறுதானிய பிஸ்கட்கள் அறிமுகம் செய்யும் திட்டமும் எங்களிடம் இருக்கிறது.

இப்போது ஐந்தாம் தலைமுறையிலிருந்து என் மகன் பரத் பாண்டியன் பிசினஸுக்கு வந்திருக்கிறார். ஆன்லைன் விற்பனை சார்ந்தும், புதிய ரகங்கள், பேக்கிங்குகள் சார்ந்து இயங்கத் தொடங்கியிருக்கிறார். அவர் இந்த பிசினஸை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வார்’’ என்று உற்சாகமாகப் பேசி முடித்தார் பாலசுப்பிரமணியன்.

தொடரட்டும் இந்த நிறுவனத்தின் வேகமான வளர்ச்சி!