நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் ராமா ராசி தையல் மெஷின்!

கோபால்
பிரீமியம் ஸ்டோரி
News
கோபால்

‘‘எதிர்காலத்துல ஹைடெக் பவர் மெஷின்கள் அதிகரிக்கும்; அதற்கு ஏற்றாற்போல் தயாரிப்பை மாற்ற வேண்டும்...’’

‘‘சதர்ன் சூயிங்ஸ் நிறுவனத்தைத் தெரியுமா?’’ என்று கேட்டால், நம்மில் பலருக்குத் தெரியாது. அதே நேரம், “ராமா ராசி தையல் மெஷின் தெரியுமா?” என்று கேட்டால், தெரியும். அந்தளவுக்கு பிரபல மானது ராமா ராசி தையல் மெஷின்கள். தென் தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஓர் உறுப்பினர் போல இருந்து வருகிறது இந்த தையல் மெஷின். இன்று பல்வேறு பிராண்டு களில் நவீன ரக தையல் மெஷின்கள் வந்து விட்டாலும், பெரிய விளம்பரம் இல்லாமலேயே அவர்களுடன் போட்டிபோட்டு மூன்றாவது தலைமுறையாக நிலைத்து நிற்கிறது ராமா ராசி தையல் மெஷின். இந்த மெஷின்களைத் தயாரித்து விற்பனை செய்யும் ‘சதர்ன் சூயிங்ஸ்’ நிறுவனத்தின் முக்கியஸ்தரான கோபாலிடம் பேசினோம். இந்த நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்...

கோபால்
கோபால்

“ஆரம்பத்தில் மேலமாசி வீதியில் பாலசண்முகானந்தா என்கிற பெயரில் பால் வியாபாரம் செய்துகொண்டிருந்தார் தாத்தா ராமச்சந்திரன். பால் வியாபாரம் சிறப்பாக நடந்துகொண்டிருந்த போதே வேறு தொழில்களிலும் ஈடுபட வேண்டுமென்று திட்டமிட ஆரம்பித்தார். ஆரம்பிக்கிற தொழில், புதிதாகவும்... மக்களுக்குத் தேவையுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்து, 1967-ல் தையல் மெஷின் தயாரிப்பில் இறங்கினார்.

அப்போதெல்லாம் தையல் மெஷின் தயாரிப்பு... டெல்லி, லூதியானாவில்தான் நடந்து வந்தது. அங்கிருந்து வாங்கி வந்து மதுரையில விற்பனை செய்து வந்தார் என் தாத்தா. சில ஆண்டுகளுக்குப் பிறகு, ‘நாமளே ஏன் தையல் மெஷினை அசெம்பிள் பண்ணி விற்கக்கூடாது’ என்கிற யோசனை அவருக்கு வந்தது. தையல் மெஷினைப் பொறுத்துவரை, அதிலுள்ள பொருள்கள் அனைத்தையும் ஒரே நிறுவனம் தயாரிக்காது. தையல் இயந்திரங் களுக்கு உதிரிபாகங்களை பல இடங்களில் வாங்கி, அசெம்பிள் செய்து தருவார்கள். அப்படித்தான் ஆரம்பத்தில் தேவையான அளவில், நல்ல தரத்தில் உதிரிபாகங்களை வாங்கி, அதை அசெம்பிள் செய்து ‘ராமா ராசி’ என்கிற பெயரில் விற்பனை செய்து வந்தார் தாத்தா.

அவருக்குப் பின் அப்பா பாலசுப்பிரமணியன் இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டு வந்தார். நான் படிக்கின்ற காலத்திலேயே இந்த நிறுவனத்தில் பணியாற்றினேன். பின்பு சட்டம் படித்து வழக்கறிஞராகத் தொழில் செய்து வருகிறேன். இந்த நிறுவனத்தை எங்கள் குடும்ப உறுப்பினர்கள்தான் கவனித்து வருகிறார்கள். இந்த நிறுவனத்துக்கு சட்ட ஆலோசகராக உதவி செய்து வருகிறேன்.

எங்கள் பிராண்டுக்கு ‘ராமா ராசி’ என்று தாத்தா பெயர் வைக்கக் காரணம், அவருக்குப் பிடித்த கடவுள் பெருமாள். எங்கள் தயாரிப்பு ராசியானது என்பதைக் குறிக்க ‘ராமா ராசி’ என்று பெயர் வைத்தார். அந்தப் பெயர் மக்கள் மத்தியில் மறக்க முடியாதபடி ஆனதுடன், சென்டி மென்டாகவும் ஆனது.

இப்போது எங்கள் நிறுவனம் பேசிக் மாடலான பெடல் மெஷினிலிருந்து ஹைடெக் பவர் மெஷின் வரைக்கும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அது மட்டுமன்றி, கார்மென்ட்ஸ் கம்பெனிக்குத் தேவையான அனைத்து வகையான மெஷின்களும் தயாரித்து தருகிறோம். காலால் இயக்கும் மேனுவல் பெடல் மெஷினுக்கு இன்னும் கிராக்கி இருந்து கொண்டுதான் இருக்கிறது. யாராக இருந்தாலும் முதலில் அதில்தான் தொழிலைக் கற்றுக்கொள்ள முடியும். அதன்பிறகு பவர் மெஷினில் சுலபமாக தைக்க முடியும். அது மட்டுமன்றி, அதற்கான முதலீடும் குறைவு. பவர் மெஷின் ஒன்றின் விலை ரூ.25,000. பெரிய அளவில் தொழில் செய்கிறவர் களுக்கு அது பயன்படும். வீட்டுப் பயன்பாட்டுக்கு எனில், மேனுவல் மெஷினே போதும். இப்போதும், மெஷின் தயாரிப்பதற்கான மெட்டீரியல்கள் அனைத்தையும் டெல்லியில் இருந்துதான் வாங்குகிறோம். எல்லாமே டெல்லியைச் சுற்றி உள்ள பகுதிகளில் கிடைக்கிறது.

மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்
ராமா ராசி தையல் மெஷின்!

தையல் மெஷினில் மேலே உள்ள பகுதி, காஸ்ட் அயனில் தயாரிக்கப்படுகிறது. மெஷினு டைய ஸ்டாண்டு வெயிட் குறைந்த உருக்கு இரும்பில் தயாரிக்கப்படுகிறது. இதெல்லாம் அங்குதான் அதிகம் கிடைக்கிறது. நம் ஆர்டருக்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு பொருளையும் செய்து தருகிறார்கள். நாங்கள் தரத்துக்கு அதிகம் மதிப்பளிப் போம். குறைந்த விலையில் தர வேண்டும் என்பதற்காக தரத்தைக் குறைக்க மாட்டோம். அதேசமயம், குறைந்த விலையில் தையல் மெஷின் வாங்க விரும்புகிறவர்களுக்கு ரெமி என்கிற பெயரில் குறைந்த விலையில் தையல் மெஷின் களைத் தயாரித்து விற்கிறோம். இன்று வரை இதை சிறுதொழி லாகத்தான் செய்து வருகிறோம்.

எதிர்காலத்தில் ஹைடெக் பவர் மெஷின்கள் அதிகரிக்கும்; அதற்கு ஏற்றாற்போல் தயாரிப்பை மாற்ற வேண்டும். ஆனால், மேனுவல் மெஷின் தயாரிப்பை எப்போதும் விட மாட்டோம். ஏனென்றால் கரன்ட் இருந்தால்தான் பவர் மெஷினை இயக்க முடியும்.

தாத்தா காலத்தில் ரூ.150-க்கு விற்கப்பட்ட எங்கள் தையல் மெஷின், இன்று ரூ.12,000 வரைக் கும் விற்கப்படுகிறது. பாரம்பர்யத் தொழில் என்பதால்தான் பெரிய அளவில் கொண்டு செல்லாமல், நிதானமாக மக்கள் நம்பிக்கை யைப் பெற்று செயல்பட்டு வருகிறோம்” என்றார்.

காலத்தின் தேவைக்கேற்ப தொழில்நுட்பத்தை மாற்றிவரும் இந்த நிறுவனம் நிலைத்து நிற்கட்டும்!