நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ரூ.1 கோடி டேர்ன்ஓவர்... வீடு தேடி வரும் அயர்னிங் சர்வீஸ்... சென்னை இளைஞரின் வெற்றி ரகசியம்!

ரூபேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ரூபேஷ்

‘‘நம் நாட்டுல துணிகளை லாண்டரிக்குத் தர்றவங்களைவிட, அயர்ன் செய்யத் தர்றவங்க அதிகம். 2018-ல் இந்தத் தொழிலை ஆரம்பிச்சேன்.’’

இது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் காலம். மக்களின் தேவையை அறிந்து, புதிது புதிதாக ஆரம்பிக்கப்படும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செயல்பாடுகளும் இதை நன்கு உணர்த்துகின்றன. அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு, ‘அயர்ன் பாக்ஸ்’ (Iron Box). ‘ஆப் மூலமாக புக் செய்தால்போதும், வீடுதேடி வரும் அயர்னிங் சர்வீஸ்...’ - இதுதான் இந்த நிறுவனத்தின் ஒன்லைன் கான்செப்ட்.

இந்தியாவில் முதன்முறையாக ஆப் மூலமாக ஸ்டீம் அயர்னிங் சர்வீஸைக் கையில் எடுத்திருக் கும் இந்த நிறுவனம், எந்தத் துணியாக இருந் தாலும் ஒரே கட்டணம் மட்டுமே வசூலிக்கிறது. சென்னை புரசைவாக்கத்தைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத் தில், அதன் உரிமையாளர் ரூபேஷ் செளத்ரி யைச் சந்தித்தோம். வித்தியாசமான உத்தியுடன் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வரும் தன் நிறுவனத்தின் செயல்பாடுகளை விளக்கினார் ரூபேஷ்.

ரூ.1 கோடி டேர்ன்ஓவர்... வீடு தேடி வரும் அயர்னிங் சர்வீஸ்... சென்னை இளைஞரின் வெற்றி ரகசியம்!

“நான் வளர்ந்ததெல்லாம் சென்னைதான். என் அப்பா, மருந்து நிறுவனம் நடத்தும் பிசினஸ்மேன். எம்.பி.ஏ முடிச்சுட்டு அப்பாவின் கம்பெனியில ஆறு வருஷம் வேலை செஞ்சேன். தனியா தொழில் பண்ணணும்னு நினைச்சப்பதான், அயர்னிங் துறையைத் தேர்ந்தெடுத்தேன். இதுதொடர்பா பலதரப்பட்ட மக்கள்கிட்ட பேசியும், ஆய்வு செஞ்சும் பயனுள்ள தரவுகளைத் திரட்டினேன். இந்தியாவுல பெரும்பாலான மக்கள் தங்கள் துணிகளைத் தாங்களேதான் துவைக்கிறாங்க. துணிகளை லாண்டரிக்குக் கொடுக்கிறவங்களைவிட, அயர்னிங் தேவைக்கு மட்டும் கொடுக்கிறவங்கதான் அதிகம். எனவே, அயர்னிங் சர்வீஸை சரியான முறையில செஞ்சா வெற்றி பெறலாம்னு நினைச்சு, 2018-ல் இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சேன்.

அடுப்புக்கரி மூலமா அயர்னிங் பண்றது காலங்காலமா நடக்கிற செயல்பாடுதான். இந்த முறையில அயர்ன் பாக்ஸ் வெப்பநிலை மாறுபடுவதால, சில நடைமுறைச் சிக்கல் இருக்கிறது தெரிய வந்துச்சு. எனவேதான், ஸ்டீம் அயர்னிங் செயல்பாட்டைக் கையில் எடுத்தேன்.

ஆரம்பத்துல போன்கால் மூலமா, நண்பர்கள், உறவினர்கள்னு தெரிஞ்ச வட்டாரத்தினர் மூலமா ஆர்டர்கள் எடுத்தோம். மெதுவா தான் வரவேற்பு கிடைச்சது. அயர்னிங் தேவைக்காக வாடிக்கை யாளர்கள் காத்திருக்காம, நினைச்ச நேரத்துல நினைச்ச இடத்துல இருந்தே ஆர்டர் கொடுக்கலாம்ங்கிற யோசனையுடன், ‘IRON BOX - VACUUM STEAM IRONING’ ஆப்பை அறிமுகப்படுத்தினோம். இந்த ஆப்பை எப்படி பயன்படுத்துறதுன்னு பலருக்கும் சொல்லிக்கொடுத்தோம். ஆர்வம் உள்ளவங்க எங்க ஆப்பை டவுன்ட்லோடு பண்ணி, அது மூலமாகவே ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் கோவிட் பிரச்னை வந்துச்சு. முதல் லாக்டெளன் நேரத்துல ஆர்டர்ஸ் ரொம்பவே குறைஞ்சது. லாக்டெளன்ல வீட்டைவிட்டு வெளிய போகப் பலரும் அச்சப்பட்ட நேரத்துல, எங்க ஆப் பயன்பாட்டுக்கு வாடிக்கையாளர்கள் கிட்ட வரவேற்பு அதிகரிச்சது” என்று சொன்ன ரூபேஷ், ‘எந்தத் துணியாக இருந்தாலும் ஒரே கட்டணம்’ என்ற திட்டத்தையும் விளக்கினார்.

ரூ.1 கோடி டேர்ன்ஓவர்... வீடு தேடி வரும் அயர்னிங் சர்வீஸ்... சென்னை இளைஞரின் வெற்றி ரகசியம்!

“ஆப் மூலமாதான் அதிக அளவிலான ஆர்டர்கள் எங்களுக்கு வருது. இந்த முறையில முன்பணம் (Prepaid) கட்டி, தேவைக்கேற்ப துணிகளை அயர்னிங் பண்ண கொடுக்கலாம். ரூ.350-க்கு 25 துணிகள், ரூ.650 ரூபாய்க்கு 50 துணிகள், ரூ.1,200 ரூபாய்க்கு 100 துணிகள் வீதம் கட்டணம் நிர்ணயிக்கிறோம். இந்த வகையில சட்டை, பேன்ட், வேஷ்டி, புடவை, சுடிதார்னு எந்தத் துணியா இருந்தாலும் ஒரே கட்டணம்தான் வாங்குறோம். இதே கட்டண முறையில, ஆப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள்கிட்ட போன்கால் மூலமா ஆர்டர் எடுக்கிறோம். வாடிக்கையாளர் கிட்ட இருந்து புக்கிங் வந்ததும், எங்களோட வேலை நேரத்தைப் பொறுத்து அரை மணி நேரத்துல எங்க நிறுவன ஊழியர் நேர்ல போய் துணிகளை ஆர்டர் வாங்கிடுவார். அடுத்த 36 மணி நேரத்துல துணிகளை அயர்ன் பண்ணி வீட்டுக்கே கொண்டு போய் தந்திடுவோம். டெலிவரி கட்டணம் எதுவும் நாங்க வாங்குறதில்லை.

ஆரம்பத்துல ஒரு நாளைக்கு 200 – 300 துணிகள் மட்டுமே ஆர்டர் வந்த நிலையில, இப்ப தினமும் 3,000 துணிகளுக்கு மேல ஆர்டர் வருது. பலதரப்பட்ட வாடிக்கையாளர்களும் எங்களுக் குக் கிடைச்சிருக்காங்க. வருஷத் துக்கு ஒரு கோடி டேர்ன் ஓவர் பண்றோம். அடுத்த வருஷத் துக்குள் 5 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யணும்னு இலக்கு நிர்ணயிச் சிருக்கோம்.

தமிழ்நாட்டுல மற்ற ஊர் கள்லயும், வெளி மாநிலங்கள்லயும் எங்க நிறுவனத்தை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கோம். தவிர, ஆர்வமுள்ளவங்களுக்கு 30 நாள் வரை கட்டணம் வாங்காம அயர்னிங் வேலைக்கான பயிற்சி தர்றோம். பிறகு, விருப்பமுள்ளவங் களுக்கு எங்க நிறுவனத்துலயே வேலையும் கொடுக்கிறோம்” என்றார். தற்போது சென்னையில் 14 இடங்களில் இவரது நிறுவனத் தின் கிளைகள் உள்ளன.

மக்களின் பிரச்னைக்குத் தீர்வு சொன்னால் என்றும் வெற்றிதான்!

படங்கள்: ச.பரத்வாஜ்