நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 4.5 சதவிகிதமாக குறைந்திருப்பது இந்தியப் பொருளாதாரம் படிப்படியாக சரிந்துகொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி எனப் பொருளாதார வல்லுநர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். தற்போதை இந்தச் சரிவு கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவாகப் பார்க்கப்படுகிறது. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு, ஜிடிபி வளர்ச்சி இந்த அளவுக்கு குறைந்திருப்பது இதுவே முதல் முறை.
இந்தியா பொருளாதாரம் சீராவதற்கான நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் மேற்கொண்டு வந்தாலும், இந்தப் பொருளாதாரச் சரிவு இப்போதைக்கு மீள்வதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், கிரிசில், எடெல்வைஸ் மாதிரியான பிரபல ரேட்டிங் நிறுவனங்கள் கணித்திருந்த இந்தியாவின் முழு ஆண்டு ஜிடிபி வளர்ச்சிக்கான இலக்கு விகிதத்தை, தற்போது குறைத்திருக்கின்றன. கிரிசில் நிறுவனம் 2019-20-ம் நிதி ஆண்டுக்கான ஜிடிபி விகிதம் 6.3 சதவிகிதத்திலிருந்து 5.1 சதவிகிதமாக குறைத்திருக்கிறது. எடெல்வைஸ் 5.7 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைத்திருக்கிறது. கேர் ரேட்டிங்ஸ் தனது இலக்கு நிர்ணயத்தை 6.1-6.2 சதவிகிதத்திலிருந்து 5.5-5.6 சதவிகிதமாக குறைத்திருக்கிறது. எஸ்.பி.ஐ 6.8 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறது.

பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள், நிதி ஆண்டின் முதல் அரையாண்டை விடவும், இரண்டாவது அரையாண்டில் ஜிடிபி. வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இருப்பினும் முழு ஆண்டின் அடிப்படையில் மொத்த ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் என அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.