Published:Updated:

புதிய கடன் மோசடி, நிர்வாகச் சிக்கல்... சிக்கலில் பஞ்சாப் வங்கி மற்றும் தனலட்சுமி வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் பேங்க், சிண்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கும் 1,203.26 கோடி ரூபாயை ‘Borrowing Fraud' என அறிவித்து இருக்கிறது.

நீரவ் மோடியின் மிகப்பெரிய கடன் மோசடியான 11,350 கோடி மோசடியிலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில், அதற்குள் மற்றொரு பெரிய கம்பெனியின் கடனை, மோசடி என அறிவித்திருக்கிறது பஞ்சாப் நேஷனல் பேங்க்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் பஞ்சாப் நேஷனல் பேங்க், சிண்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Sintex Industries Limited) என்கிற கம்பெனிக்கு கொடுத்திருக்கும் 1,203.26 கோடி ரூபாயை ‘Borrowing Fraud' என அறிவித்து இருக்கிறது. சிண்டெக்ஸ் கம்பெனியின் கடனை மோசடி என அறிவித்தது குறித்து மத்திய ரிசர்வ் வங்கிக்கும் விவரங்களைச் சொல்லி இருக்கிறார்களாம்.

Vikatan

இந்நிறுவனம், பஞ்சாப் நேஷனல் பேங்க் மட்டுமன்றி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா பேங்க், பஞ்சாப் & சிந்த் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளிலும் கடன் வாங்கி இருக்கிறதாம். 31 மார்ச் 2020 நிலவரப்படி சிண்டெக்ஸ் கம்பெனியின் மொத்த கடன் தொகை 7,157.9 கோடியாக இருக்கிறதாம்.

அதேபோல, தனலட்சுமி வங்கியிலும் சலசலப்பும் பரபரப்புமாக பிரச்னைகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. சமீபத்தில் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் ஏழு இயக்குநர்கள் நியமனத்துக்கு எதிராக, பங்குதாரர்கள் வாக்களித்தது போல, தற்போது தனலட்சுமி வங்கியில் சுனில் குருபக்‌ஷானி (Sunil Gurubaxani) நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு எதிராக, பங்குதாரர்கள், ஆண்டு பொதுக் கூட்டத்தில் வாக்களித்து இருக்கிறார்கள். இவருக்கு எதிராகப் பதிவான வாக்குகள் 90%.

Lakshmi Vilas Bank
Lakshmi Vilas Bank

ஏனெனில், சுனில் குருபக்‌ஷானி, கடந்த பிப்ரவரி 2020-ல்தான் தனலட்சுமி வங்கியின் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றபோது, ஒரு preferential issue-வை வெளியிட யோசனை சொன்னாராம். Preferential issue கொண்டு வந்தால், தற்போது தனலட்சுமி வங்கியில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் கைவசம் வைத்திருக்கும் பங்குகள் (shareholders' stake) குறைந்துவிடும். இதனால் பங்குதாரர்கள் சுனிலின் நியமனத்துக்கு எதிராக வாக்களித்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதோடு, சுனில் குருபக்‌ஷானி, வட இந்தியாவில் 25 வங்கிக் கிளைகளை நிறுவவும் யோசனை சொன்னாராம். இதுவும் பங்குதாரர்கள், சுனிலுக்கு எதிராக வாக்களிக்க ஒரு காரணம் என்பது வங்கி வட்டாரத் தகவல்.

அடுத்த கட்டுரைக்கு