
நேட்டிவ் பிராண்ட் - 19
“கட்டட வேலை முதல் கவர்ன்மென்ட் வேலை வரையும், வயல் வெளி வேலை முதல் அண்டவெளியில் பறக்கும் வேலை வரையும் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் செய்கிறார்கள். சாதித்தும் காட்டுகிறார்கள்.
நகர்ப்புறங்கள் மட்டு மல்லாது கிராமப்புறங் களிலும் பெரும்பாலான குடும்பங்களில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். இருந்த போதிலும் சமையல் வேலை பெண்களுக்கான தாகவே இருக்கிறது. அவர் களின் பணிச்சுமையை போக்கவே, இட்லி, தோசை மாவு வியாபாரத்தைத் தொடங்கினேன்” என்கிறார் திண்டுக்கல் கோகுலம் இட்லி, தோசை மாவு நிறுவனம் நடத்திவரும் ஹேமலதா.

உணவுகளின் ராஜா என அழைக்கப்படும் பிரியாணிக்கு அடையாள மாகத் திண்டுக்கல் மாவட்டம் உள்ளது. இட்லி மாவுக்கும் ஸ்பெஷல் திண்டுக்கல்தான் எனக் கூறும் அளவுக்கு பிரபலமாகியுள்ளது கோகுலம் பிராண்ட் மாவு. தங்களுக்கான தனித்த அடையாளத்தை ஏற்படுத்தி வெற்றிகரமாகத் தொழில் செய்துவரும் அவரிடம் பேசினோம்.
“கொடைக்கானலில் என் அம்மா சகுந்தலா ஹோட்டல் நடத்தினார். எனக்கு 2 அண்ணன்களும், ஒரு அக்காவும் உள்ளனர். அவர் களுடன் சேர்ந்து நானும் உதவியாக இருந்தேன். இந்த நிலையில் வாடகை வீடு, கடை மாற்ற வேண்டிய சூழல் இருந்ததால், ஹோட்டலை வேறு இடத்துக்கு மாற்றி னோம். இதனால் எங்களின் வழக்கமான வாடிக்கை யாளர்கள் எங்களுக்கு கிடைக்காமல் போனார்கள். போதிய வருவாய் இன்றி ஹோட்டல் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. இதனால் ஆயில் வியாபாரம் நடத்திக் கொண்டே, இட்லி, தோசை மாவு ஆட்டி வீட்டின் வெளியே வைத்து விற்பனை செய்தோம்.
இந்த நிலையில் எனக்கு திருமணம் முடிந்து திண்டுக் கல்லில் குடியேறினேன். என் கணவர் சந்திரசேகரன் கேபிள் ஆபரேட்டராக இருந்தார். கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு கேபிள் கட்டணம் குறைக்கப்பட்டபோது, கேபிள் தொழில் நலிவடைந்தது. எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். போதிய வருவாய் இல்லாத நிலையில், என் அம்மாவின் வழியைப் பின்பற்றி நாங்களும் இட்லி, தோசை மாவு வியாபாரம் செய்ய திட்டமிட்டோம். அதற்கு என் கணவர் உதவியாக உத்வேகம் அளித்தார்.

தொடக்கத்தில் 2 லிட்டர் மாவு அளவு அரைக்கும் 2 கிரைண்டர்கள் வாங்கி தொழிலைத் தொடங்கினோம். அக்கம்பக்கத்தினர், உறவினர்ள், நண்பர்களுக்கு மாவு விற்பனை செய்தோம். ஒரு கிலோ மாவு 17 ரூபாய்க்கு கொடுத்தோம். உதவிக்கு ஒரு நபரை மட்டுமே வைத்துக்கொண்டு இரவு பகலாக வேலை செய்தோம். அந்தக் காலத்தில் மின்வெட்டு அதிகமாக இருந்தது. இதனால் நள்ளிரவு வரை காத்திருந்து மாவு அரைப்போம். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே தூங்கினோம்.
இவ்வாறு தொடர்ந்து 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்தோம். படிப்படியாக வளர்ந்தோம். தற்போது திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கோகுலம் இட்லி, தோசை மாவு பிரபலம் ஆகிவிட்டது. ஒரு நபர் உதவியுடன் மட்டும் தொடங்கிய எங்கள் பயணத்தில் 5 ஆண்டுகளில் 10 ஊழியர்களைக் கொண்டு 2,000 பாக்கெட்கள் வரை கொடுத்தோம். தற்போது எங்களிடம் 40 லிட்டர் மாவு அரைக்கும் கிரைண்டர்கள் 15 உள்ளன. இதன்மூலம் தினம்தோறும் 6,000 கிலோ மாவு அரைத்து வியாபாரம் செய்கிறோம்.
ஒரு கிலோ பாக்கெட் 35 ரூபாய்க்கு கொடுக்கிறோம். ஒரு பாக்கெட் மாவைக் கொண்டு 16 இட்லி, 12 தோசை வரை சுடலாம். கடின தன்மையில்லாமல் மென்மையான இட்லி, தோசை சுடலாம். எக்ஸ்பியரி டேட் ஒரு நாள் மட்டுமே கொடுக்கிறோம். வெளியே வைத்தால் ஒரு நாளில் புளித்துவிடும், பிரிட்ஜில் வைத்தால் 3 நாள்கள் வரை பயன்படுத்தலாம்.
சிலர் வேகமாகப் புளிக்காது எனக் கூறி மாவு வியாபாரம் செய்கிறார்கள். புளிக்காமல் இருக்க சோடா, ஆமணக்கு மற்றும் ரசாயனம் கலக்கப் படுவதால்தான் விரைவில் புளிக்காமல் இருக்கிறது என்கிறார்கள். எங்களுடைய தயாரிப்பில் எவ்வித கலப்படமும் இல்லை. அரிசி, உளுந்து, உப்பு மொத்தமாகவும் தரமானதாகவும் பார்த்துப் பார்த்து கொள்முதல் செய்கிறோம். அதை அரைப்பதற்கு முன்பாக மெஷின்களில் கொடுத்து தண்ணீரில் 4 முறை அலசி சுத்தம் செய்கிறோம். அதன் பிறகு குறிப்பிட்ட நேரம் வரை ஊற வைத்து அரைக்கிறோம்.
இங்கு 40 பெண்கள் உட்பட 60 பேர் பணியாற்றுகிறார்கள். அனைவரும் கைகளில் உறைகள் அணிந்து வேலை செய்கின்றனர். பெரும்பாலும் இயந்திரங்களில் இருந்து நேரடியாக பாக்கெட் போடப்படுகிறது. இதனால் மிகவும் சுத்தமாக மாவு கிடைக்கிறது. எல்லா நாள்களும் 6,000 கிலோ அரைப்பது இல்லை.
ஒவ்வொரு நாளின் தேவையறிந்து வாடிக்கை யாளர்கள், கடைக்காரர்கள், ஹோட்டல்களில் கேட்டு அதற்கேற்ப அரைக்கிறோம். சில முக்கிய நாள்களில் 6,000 கிலோவுக்கு அதிகமாக அரைக் கிறோம். அரிசி, உளுந்து மற்றும் தேவைப்படும் உப்பு, தண்ணீர் சரிவிகிதத்தில் கலப்பதிலும், இட்லி, தோசை ஊற்றுவதற்குத் தேவையான பதத்தில் அரைப்பதிலும்தான் கவனம் செலுத்துகிறோம்.

உணவு தரக்கட்டுபாட்டுச் சான்றுகள் முறையாகப் பெற்றுள்ளோம். உணவுப் பாதுகாப்புத் துறையினரும் அவ்வப்போது ஆய்வு செய் கின் றனர். எவ்வித குறையும் இன்றி இருப்பதால் வாடிக்கையாளர் கள் மட்டத்தில் மட்டுமல்லாது அதிகாரிகள் மட்டத்திலும் நல்ல பெயர் எடுத்துள்ளோம்.
தினமும் காலை 7 மணிக்கு வேலையைத் தொடங்கி இரவு 7 மணிக்கு வேலையை முடித்து விடுவோம். தினமும் 6,000 கிலோ மாவு அரைப்பதற்கு 2 டன் அரிசி, 400 கிலோ உளுந்து தேவைப்படுகிறது. இதுமட்டு மல்லாது உப்பு, சுத்திகரிக்கப் பட்ட தண்ணீர், மின்சாரம், டெலிவரிக்கான வாகன வாடகை, பேக்கிங், ஊழியர் களுக்கான சம்பளம், கிரைண்டர்கள், மெஷின்கள் பராமரிப்பு எனத் தோராயமாகக் கணக்கிட்டால் 1.80 லட்சம் வரை செலவாகிறது. உற்பத்தி மற்றும் விற்பனையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். எல்லா செலவுகளும் போக சில ஆயிரங்கள் மட்டுமே லாபம் கிடைக்கிறது.
நல்ல உணவுக்கான மாவை வழங்குகிறோம். பெண்களின் பணிச்சுமையைக் குறைக்கிறோம் என்ற எண்ணம் எங்களுக்கு சோர்வை கொடுப்பது இல்லை. இதுதான் எங்களின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது. அடுத்த கட்டமான சப்பாத்தி மாவு கொடுக்கும் திட்டமும் வைத் துள்ளோம். அதற்கான முயற்சி களில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
புதிய முயற்சிகள் வெற்றிகரமாகத் தொடரட்டும்!