நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

முருங்கை சூப் பொடி ஏற்றுமதி... லட்சத்தில் வருமானம்! - கரூரில் இருந்து அசத்தல் ஏற்றுமதி..!

கண்ணையன் மற்றும் சுப்ரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணையன் மற்றும் சுப்ரமணியன்

வீட்டுக்கு வீடு முருங்கை மரம் இருக்கிறதால, நம் மக்கள் யாருக்கும் முருங்கையோட அருமை தெரியலை..!

ரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஈசநத்தத்தைச் சேர்ந்தவர் கண்ணையனுக்கும், அவரின் உறவுக்காரருமான அரவக்குறிச்சியைச் சேர்ந்தவர் சுப்ரமணியனுக்கும் 55 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இந்த வயதிலும் ஒன்றாக இணைந்து, முருங்கையை மதிப்புக் கூட்டி அமெரிக்காவுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்து வருகிறார்கள். அவர்களைச் சந்தித்தோம். முதலில் நம்மிடம் பேசினார் கண்ணையன்.

மதுரை சொல்லித் தந்த பாடம்...

“ஈசநத்தத்துல சொந்தமா எனக்கு நிலமிருக்கு. இப்போ எனக்கு வயது 60. அந்த நிலத்துல 20 வயதில் இருந்து முருங்கை விவசாயம் பார்த்துக்கிட்டு வந்தேன். பெரிச வருமானம் இல்லை. ஏன்னா, இந்தப் பகுதியே மிகவும் வறண்ட பகுதி. இருந்தாலும், கிடைச்ச சொற்ப வருமானத்துல, என் மகனையும் மகளையும் நல்லாப் படிக்க வச்சேன்.

முருங்கை சூப்  பொடி ஏற்றுமதி... லட்சத்தில் வருமானம்! - கரூரில் இருந்து அசத்தல் ஏற்றுமதி..!

இதற்கிடையில், 10 வருஷத்துக்கு முன்னாடி நண்பர் ஒருவர் மூலமா, மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நடந்த, ‘முருங்கையை மதிப்புக் கூட்டி விற்பனை செய்தல்’ சம்பந்தமான இரண்டு நாள் பயிற்சியில் கலந்துகிட்டேன். பேராசிரியை பார்வதி, முருங்கையை மதிப்புக் கூட்டி விற்பதில் உள்ள பலன்களை அருமையா எடுத்துச் சொன்னாங்க. அதனால ஆர்வமாகி நான் முருங்கை இலை, பூ, காய்களில் சூப் பொடிகளைத் தயாரிச்சு, எனக்குத் தெரிஞ்சவங்க, நண்பர்கள் கிட்ட கொடுத்தேன். அதை அவங்க மதிக்கவே இல்லை. வீட்டுக்கு வீடு முருங்கை இருந்ததால, யாருக்கும் அதோட அருமை தெரியலை. ஆனா, நான் மனம் சோர்ந்துபோகாம, அப்பப்ப சூப் பொடிகள் தயாரிச்சு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகளின்போது, அங்கு வரும் மக்களிடம் இலவசமா கொடுக்க ஆரம்பிச்சேன்.

‘என்ன முருங்கையில சூப்பா? எங்க வீட்டுல முருங்கை மரம் இருக்கு. அதைப் பறிச்சு சமைச்சு சாப்பிடவே நான் விரும்பமாட்டேன்’னு சில பேரு சொல்வாங்க. ‘முருங்கையை வச்சவன் வெறுங்கையோட போவான்’னு ஒரு பழமொழி சொல்வாங்க. முருங்கையைத் தொடர்ந்து சாப்பிடுபவன், 100 வயசானாலும் கையில் தடியில்லாமல் சுயமா நடந்து போவான்ங்கிற அர்த்தத்தில்தான் அந்தப் பழமொழி சொல்லியிருக்காங்க நம்ம முன்னோர். ஆனா, அது பலருக்கும் புரியலை. இருந்தாலும் விடாம முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன்.

சூப் தயாரிக்க ஆரம்பிச்சேன்...

இரண்டு வருஷத்துக்கு முன்னாடி, கரூர் கலெக்டர் ஆபீஸூக்கு வந்த மக்கள்கிட்ட சூப் பொடிகளைக் கொடுத்தேன். அதைப் பலரும் ஆர்வமாக வாங்கினாங்க. அதில் ஒருவர், ‘இதை ஏன் நீங்க இலவசமா தர்றீங்க?’ என்று கேட்டார். அப்பதான், எனக்கு நம்பிக்கை வந்தது. உடனே, ஆண்டிப்பட்டிக் கோட்டை அருகில், அஞ்சு ஏக்கர் முருங்கைத் தோட்டத்தை குத்தகைக்குப் புடிச்சேன். அங்கேயே சிறிய கடை மாதிரி வச்சு, அதில் சூப் தயார் செஞ்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். தேசிய நெடுஞ்சாலை என்கிறதால, பலரும் இந்த வழியா வருவாங்க.

கண்ணையன் மற்றும் சுப்ரமணியன்
கண்ணையன் மற்றும் சுப்ரமணியன்

அப்ப எங்க கடையில் வந்து சூப் குடிச்சாங்க. இப்படியே கூட்டம் அதிகரிக்க ஆரம்பிச்சது. பலரும் சூப் குடிக்கிறதோட, சூப் பொடி பாக்கெட்டுகளையும் கேட்டு வாங்கிட்டுப் போக ஆரம்பிச்சாங்க. இதனால இந்தத் தொழிலை விரிவுபடுத்த நினைச்சேன். ஆனா, என்கிட்ட அதற்கான பொருளாதாரம் இல்லை. பொருளாதார ரீதியா சப்போர்ட் பண்ண என் பெரியப்பா மகனின் மருமகனான சுப்ரமணியன் வந்தார்.

உற்பத்திக்கு நான், மார்க்கெட்டிங்குக்கு அவர்...

தொழிற்சாலைக்கு ஷெட் போட்டது, எந்திரங்கள் வாங்கியது என்று ரூ.20 லட்சம் வரை செலவு பண்ணினார். பிறகு, இந்தத் தொழிலில் ஆர்வமாகி, அவரும் பார்ட்னரா சேர்ந்துகிட்டார். நான் இங்க தொழிற்சாலையில் சூப் பொடிகள் தயாரிக்கும் வேலையைக் கவனிச்சுக்கிட்டேன். அவர் மார்க்கெட்டிங் பண்ற வேலையைப் பார்த்துக்கிட்டார். முதல்ல, முருங்கை இலை, ஆவாரம்பூ, கொள்ளு, மிளகுத் தக்காளி கீரை, தூதுவளை, வல்லாரை என்று பல கீரை, இலைகளில் சூப் மட்டும் தயாரிச்சோம். பிறகு, வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து, விதவிதமான சாதப் பொடிகளையும் செய்ய ஆரம்பிச்சோம். முருங்கை இலை சாதப்பொடி, வல்லாரை சாதப்பொடி, முருங்கை இலை சாம்பார் தூள், முடக்கத்தான் தோசைப்பொடி, நெல்லி சாதப்பொடி, கொள்ளு சாதப்பொடி என்று தயாரிக்க ஆரம்பிச்சோம்.

முருங்கை சூப்  பொடி ஏற்றுமதி... லட்சத்தில் வருமானம்! - கரூரில் இருந்து அசத்தல் ஏற்றுமதி..!

நான் குத்தகைக்கு எடுத்திருக்கும் ஐந்து ஏக்கர் முருங்கை தோட்டத்தில் வருஷத்துக்கு 20 டன் வரை கிடைக்கும். ஆனா, எங்களுக்குத் தேவை வெறும் ஆறு டன் முருங்கைதான். மீதமுள்ள, 14 டன் முருங்கை சம்பந்தப்பட்ட பொருள்களை, தனியாக விற்பனை செய்றோம். அதுல கிடைக்கிற வருமானம் தனி. தூதுவளையை மதுரையில் இருந்து வாங்குறோம். வல்லாரையை கொல்லிமலையில் பறிச்சுக்குறோம். அதேபோல், ஆவாரம்பூவை அருகில் உள்ள ரெங்கமலையில் சேகரிக்குறோம். மீதியை இங்கே லோக்கல் பகுதிகளில் இருந்தே எடுத்துக்குறோம்” என்றார்.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி...

அடுத்து பேசிய சுப்ரமணியன், “எங்க கம்பெனிக்கு ‘யுவாஸ் நேச்சுரல் ஃபுட்ஸ்’ என்று பெயர் வச்சோம். ஆரம்பத்துல தமிழ்நாட்டுல மட்டும் அங்கங்கே கஸ்டமர்களும் டீலர்களும் கிடைச்சாங்க. இயற்கை முறையில் நாங்க தயாரிச்ச பொருள்களோட தரம், எங்க விற்பனை எல்லையை விரிவுபடுத்துச்சு. அமெரிக்காவில் உள்ள ‘நேச்சுரல் மில்ஸ்’ங்கிற கம்பெனி மாதம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்களை எங்ககிட்ட வாங்க ஆரம்பிச் சாங்க. சென்னையைச் சேர்ந்த சுரேஷ், வாரம் தோறும் ரூ.15,000 மதிப்புள்ள பொருள்களை வாங்குவார். இப்படி, எங்களோட கம்பெனி வளர்ந்துச்சு.

முருங்கை சூப்  பொடி ஏற்றுமதி... லட்சத்தில் வருமானம்! - கரூரில் இருந்து அசத்தல் ஏற்றுமதி..!

தொடர்ந்து, ரெடிமிக்ஸ் தோசை மாவுகளை தயாரிக்க ஆரம்பிச்சோம். அதாவது, தோசையை பவுடர் வடிவில் மாற்றிக் கொடுக்க ஆரம்பிச்சோம். அதேபோல், தூதுவளை ரசம் பவுடர், முருங்கைக்காய் பால் பவுடர் என்று பலவற்றைத் தயாரிச்சு, விற்க ஆரம்பிச்சோம். இலை, கீரைகளை உலர வைக்க, சூரிய உலர்த்தியை அரசின் மானியத்துடன் வாங்கினோம். அதேபோல், அரசின் மானிய உதவியோடு மாவு அரைக்கும் எந்திரம், கலவை எந்திரம், பேக்கிங் செய்யுற எந்திரம் என்று வாங்கி, தொழிற்சாலையை விரிவுபடுத்தினோம்.

முருங்கை பவுடர் கிலோ ரூ.800...

சாதப்பொடிகளை ஒரு கிலோவுக்கு ரூ.400-க்கு விற்கிறோம். சூப் வகைகளை கிலோ ரூ.650-க்கு விற்கிறோம். முருங்கைக்காய் பால் பவுடரை கிலோ ரூ.800-க்கு விற்கிறோம். வல்லாரை சாதப்பொடியை மட்டும் ரூ.600-க்கு விற்கிறோம்.

மாதம் மூன்று டன் அளவுக்கு பொருள்களை விற்பனை செய்கிறோம். இப்போதைக்கு, எல்லா செலவுகளும் போக மாதம் ரூ.3 லட்சம் வருமானம் வருது. அதைத் தொழிலை இன்னும் விருத்தி செய்றதுக்காக செலவிடுகிறோம். இப்ப சிறுதானியங்களில் இருந்து லட்டு உள்ளிட்ட இனிப்புகளை செய்யும் பயிற்சிக்குப் போயிட்டு வந்திருக்கோம். அடுத்து, அதை சந்தைப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கோம்.

தொழிற்சாலையை இன்னும் பெரிசாக்கி, எங்கள் பிராண்ட் பொருள்களை உலகம் முழுக்க அனுப்பனும்ங்கிறதுதான் எங்களோட லட்சியம். கடின உழைப்பு, புது உத்திகள் மூலம் அதையும் சாதிப்போம். எங்க ரெண்டு பேருக்குமே 55 வயசுக்கு மேல ஆயிடுச்சு. ஆனா, சாதிக்க வயசு ஒரு தடையே இல்லை’’ என்று சொல்லி, உற்சாகமாகப் பேசி முடித்தார்.

உறவினர்கள் பார்ட்னர்களாகச் சேர்ந்து செயல்பட்டு, வெற்றி காணட்டும்!