Published:Updated:

தேங்காய் ஓட்டில் கலைநயம்... யூடியூபில் கற்று வியாபாரம் செய்யும் ஆட்டோ டிரைவர்!

தேங்காய் ஓடுகள்

கேரளாவில் ஒருத்தர் தேங்காய் ஓடுகளிலிருந்து விதவிதமான அலங்காரப் பொருள்களைத் தயாரிச்சு சந்தைப்படுத்த முடியும்னு வீடியோ போட்டிருந்தார். அதைப் பார்த்த பிறகு நாமும் ஏன், இதை முயற்சி செய்யக் கூடாதுனு எனக்கு தோணுச்சு - ஆட்டோ டிரைவர் வைரமுத்து.

Published:Updated:

தேங்காய் ஓட்டில் கலைநயம்... யூடியூபில் கற்று வியாபாரம் செய்யும் ஆட்டோ டிரைவர்!

கேரளாவில் ஒருத்தர் தேங்காய் ஓடுகளிலிருந்து விதவிதமான அலங்காரப் பொருள்களைத் தயாரிச்சு சந்தைப்படுத்த முடியும்னு வீடியோ போட்டிருந்தார். அதைப் பார்த்த பிறகு நாமும் ஏன், இதை முயற்சி செய்யக் கூடாதுனு எனக்கு தோணுச்சு - ஆட்டோ டிரைவர் வைரமுத்து.

தேங்காய் ஓடுகள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சாலையில் எண்ணற்ற வணிகக் கடைகள்‌ உள்ளன. இரவும் பகலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்தச் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்முக்கு எதிரே ஒரு டேபிளில் தேங்காய்ப்பூ பரப்பி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் வைரமுத்து.

படைப்பு
படைப்பு

டேபிள் முகப்பில் தேங்காய்ப்பூவுடன் சேர்த்து, அழகழகான வடிவங்களில் தேங்காய் ஓடுகளால் செய்யப்பட்ட காபி கப், ஊதுபத்தி ஸ்டாண்ட், மீன், பூ, ஜாடி, ஒயின் கப், உலகக் கோப்பை உள்ளிட்டவையும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒருபுறம் ஆரோக்கியம் காக்கும் தேங்காய்ப்பூ, மறுபுறம் கலைநயத்துடன்‌ கூடிய படைப்புகள் என ஒருங்கே விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தவற்றில் நம் கவனத்தை ஈர்த்தது என்னவோ கலைநயம் தான்.

விஷயம் என்னவென்று அறிய வைரமுத்துவை அணுகியபோது, விளக்கமாகச் சொன்னார். ``நான் சாதாரண ஆட்டோ டிரைவர். சொந்தமாகப் பயணிகள் ஆட்டோ வச்சு பொழப்பு நடத்துறேன். என் மனைவி தங்கமாரியம்மாள். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு. ஆரம்பத்துல, கிடைச்ச எல்லா வேலைக்கும் போயிட்டு இருந்தேன். அப்புறமா, நிலையான வருமானம் வேணும்னு ஸ்பின்னிங் மில்லுக்கு வேலைக்குப் போனேன். அங்க எல்லா டிப்பார்ட்மென்ட்லேயும் வேலை பார்த்துருக்கேன்.

மீன்
மீன்

திருமணம் ஆனதுக்குப் பிறகு மில் வேலையில் கிடைக்குற சம்பளமும் பத்தல. கொஞ்ச நாள் திருப்பூர் டையிங் கம்பெனியில் வேலை பார்த்தேன். அதுவும் எனக்கு செட் ஆகல. சரி, சொந்தத் தொழில்தான்‌ சரிப்பட்டு வரும்னு ஸ்ரீவில்லிபுத்தூருக்கே திரும்பி வந்துட்டேன்.

அலங்கார பொருள்
அலங்கார பொருள்

என் நண்பன் இங்க ஆட்டோ ஓட்டுறான். அவன்தான் முதல்முதல்ல எனக்கு ஆட்டோ ஓட்ட சொல்லித்தந்தான். வேலை இல்லாம சும்மா இருந்த சமயத்துல அவசர தேவை மற்றும் உதவிக்காகத்தான் ஆட்டோ ஓட்டிப் படிச்சேன். அப்புறம், அதுவே தொழிலா மாறிடுச்சு.

இப்பவும் தொழில் சார்ந்து எனக்கு ரொம்ப பெரிய வட்டத்தில் தொடர்புகள் கிடையாது. என் வீட்டை சுற்றி இருக்கிறவங்களை வச்சித்தான் ஆட்டோ தொழிலும் நடக்குது. அவங்க தேவைனு கூப்பிடும்போது சவாரி அழைச்சிட்டு போயிட்டு வருவேன். இதுதவிர, அவங்க மூலமா கிடைக்குற தொடர்புகள்... இப்படித்தான் தினசரி வயிற்றுப்பாடு கழியுது.

ஒயின் கப்
ஒயின் கப்

சரி, இப்படியே போனா ஆட்டோவுக்கு மாதவட்டி கட்டுறதுக்குக்கூட காசு சேராதுனு தெரியவந்துச்சு. அதனால கூடுதலா ஏதாவது செய்யணும்னு யோசிச்சிட்டு இருந்தேன்.

வைரமுத்து
வைரமுத்து

அப்பத்தான் என் மனைவி தங்கமாரியம்மாள் ஆலோசனையின் பேரில் தேங்காய்ப்பூ வியாபாரம் செய்யலாம்னு தோணுச்சு. அதுக்காக இங்க கடைவச்சு என் சக்திக்கு தகுந்த மாதிரி முதலீடு செஞ்சு வியாபாரம் பார்க்குறேன். சவாரி இருக்குற நேரம் என் மனைவி வியாபாரத்தைக் கவனிச்சிப்பாங்க.

ஆட்டோ சவாரி இல்லாத நேரமும், தேங்காய்ப்பூ கடையில் வாடிக்கையாளர் இல்லாத சமயமும் சும்மா உட்கார்ந்து செல்போன் பார்ப்பேன். அப்படி செல்போன் பார்க்கும்போது தேங்காய்ப்பூ, தேங்காய் ஓடு சம்பந்தமா நிறைய வீடியோக்கள் யூடியூப் சமூகவலைதளத்தில் எனக்கு கிடைச்சது. கேரளாவில் ஒருத்தர் தேங்காய் ஓடுகளிலிருந்து விதவிதமான அலங்காரப் பொருள்களைத் தயாரிச்சு சந்தைப்படுத்த முடியும்னு வீடியோ போட்டுருந்தார்.

பூ
பூ

அதைப் பார்த்த பிறகு நாமும் ஏன், இதை முயற்சி செய்யக் கூடாதுனு எனக்கு தோணுச்சு. தரம் பிரிக்கப்பட்ட தேங்காய் ஓடு, கீறல்களை சரியாக வெட்டி எடுப்பதற்கு சில உபகரணங்கள், பெயின்ட், பிரஸ், பசை என நிறைய பொருள்கள் தேவைனு அந்த வீடியோவுல சொல்லிருந்தாரு. எல்லாமே எளிதாகக் கடையில் கிடைக்கக்கூடிய பொருளாக இருந்தாலும், புதுசா முயற்சி செய்றதுக்கு எதுக்கு பணத்தை முடக்கணும்னு தயக்கமா இருந்துச்சு.

அதனால எங்கிட்ட ஏற்கெனவே வீட்ல இருந்த பழைய ஆக்ஸா பிளேடு, பசை, வீட்ல கிடந்த தேங்காய் ஓடு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டேன். பெயின்ட்டும், பசையும் மட்டும் வெளியே வாங்கிக்கிட்டேன். சோதனை முயற்சிக்காக முதல்முதலாக ஒயின் கப் செஞ்சேன். பிடிமானத்துக்காக அடிபாகம் ஒட்டி, வர்ணம் தீட்டி பார்த்தப்போ எனக்கே ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு.

ஊதுபத்தி ஸ்டாண்ட்
ஊதுபத்தி ஸ்டாண்ட்

என் மனைவிகிட்ட அதைக் காமிச்சப்போ... நிஜமாவே நீங்கதான் செஞ்சிங்களானு என்கிட்ட பிரமிப்பா கேட்டா. அப்ப என் மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை பொறந்துச்சு. சரி, இதை கொஞ்ச, கொஞ்சமா வளர்க்கணும்னு முடிவுசெஞ்சேன். அதற்கடுத்து, கலைப்பொருள்கள் செய்யணும்னு முடிவுசெஞ்சு நிஜமாவே இதுக்கு எப்படிப்பட்ட தேங்காய் ஓடுகள் வாங்கணும், எப்படி கீறல்களை சரியா எடுக்கணும்னு எல்லாத்தையும் சமூகவலைதள வீடியோவைப் பார்த்து வாங்கிட்டு வந்தேன்.

தொடர்ந்து ஜாடி, ஊதுப்பத்தி ஸ்டாண்டு, பூ, அலங்காரப் பொருள்கள், மீன் உலகக் கோப்பை இப்படி எல்லாம் செஞ்சு பார்த்தேன். அத்தனையும் நான் எதிர்பார்த்து போலவே ரொம்ப அருமையா வந்துச்சு.

கிலுக்கு
கிலுக்கு

அடுத்தகட்ட முயற்சியாக படைப்புகளை சந்தைப்படுத்த நினைச்சேன். இதுக்காக ஸ்ரீவில்லிப்புத்தூர்ல இருக்குற ஒவ்வொரு ஃபேன்ஸி கடைக்கும் போயி மார்க்கெட்டிங் செஞ்சேன். ஆனா, சொல்லிவச்சதுபோல எல்லாரும் ஒரே மாதிரி அதிகப்பட்சம் ஒரு பொருளை 70 ரூபாய்க்குதான் கேட்டாங்க. எங்கிட்ட 70 ரூபாய்க்கு வாங்கி வாடிக்கையாளர்களிடம் 120 முதல் 150 வரை வியாபாரம் செய்றாங்க. அதனால கடைக்காரங்க விலை எனக்கு கட்டுப்படியாகாதுனு வந்துட்டேன்.

சாதாரணமாக, குறைந்தபட்ச கூலி கூட இன்றைக்கு 300 ரூபாய்க்கு குறைச்சு யாரும் தர்றதில்லை. அப்படியிருக்க, இந்த படைப்புகளை உருவாக்க நான் என்னோட நேரம், உழைப்பை முதலீடா போட்டுருக்கேன். இதுதவிர, பொருள்களின் அடக்க விலை, எனக்கான கூலினு ஒரு குறிப்பிட்ட லிஸ்ட் இருக்கு. அதை நிவர்த்தி செய்ற நஷ்டமில்லாத விலையைக்கூட யாரும் தர தயாரா இல்ல. அதுக்காக நான் மனசுவிட்டு போயிடல. என்னோட பொருளுக்கு நியாயமான விலை கிடைச்சா போதும்னு நினைக்கிறேன். அதனால என்னோட படைப்புகளுக்கு அதிகப்பட்ச விலை 200 ரூபாய்னு நிர்ணயம் செஞ்சு தேங்காய்ப்பூ கடையிலேயே ஒரு ஓரத்துல வியாபாரத்துக்காக எல்லாத்தையும் அடுக்கி வச்சிட்டேன்.

உலகக்கோப்பை
உலகக்கோப்பை

ஆண்டாள் கோயிலுக்கு சாமி கும்பிட வர்றவங்க, சுற்றுலா பயணிகள் இப்படி ஒருசில பேர் என்னோட பொருள்களை வாங்கிட்டு போயிருக்காங்க. சிவகாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், என்னோட கலைப்படைப்புகளைப் பார்த்து ரொம்ப ரசிச்சு 3 பொருளை 500 ரூபாய்க்கு தாங்க அண்ணானு கேட்டுச்சு. சரி, படிக்கிற பிள்ளை ஆசைப்பட்டு கேட்குறப்போ இல்லைனு சொல்ல மனசுவராம அந்தப்பொண்ணு கேட்ட விலைக்கே கொடுத்துட்டேன். கிறிஸ்துமஸ்காக ஒருசிலர் இயேசுநாதர் சிலை பதிக்கப்பட்ட கலைப்பொருள்களை செஞ்சு தரமுடியுமானு கேட்டுருக்காங்க. இப்போ அவங்களுக்காகத்தான் வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்" என்றார் ஆர்வம் நிறைந்த அந்த ஆட்டோ டிரைவர்.