2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி... இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான நாள் அன்று. அந்தத் தினத்தையும், அதன்பிறகு 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்த சிரமப்பட்டதையும் எவருமே மறந்திருக்க வாய்ப்பில்லை.
கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, உயர் மதிப்பு கொண்ட 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியான அறிவிப்பை அப்போது வெளியிட்டது. மேலும், புதிதாக 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டதுடன், புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது பெரும் விமர்சனத்துக்கு வித்திட்டது.

`இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கறுப்புப் பணப் பதுக்கலைக் கட்டுப்படுத்த உதவவில்லை' என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தின. குறிப்பாக, 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 6.73 லட்சம் கோடியாக இருந்தது.
இதுவே, கடந்த மார்ச் மாதத்தில் 3.62 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. பெரும்பாலான 2000 ரூபாய் நோட்டுகள் கறுப்புப் பணமாகப் பதுக்கப்பட்டிருப்பதால், அவை வங்கிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
பதுக்கப்பட்டிருக்கும் 2000 நோட்டுகளை வங்கிக்கு வரவழைக்கும் நோக்கிலும், கறுப்புப் பணப் பதுக்கலைத் தடுக்கும் விதமாகவும், புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக, நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.
வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை எந்த ஒரு வங்கிக் கிளையிலும் ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சம் ரூ.20,000 மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, அதற்கு இணையாக வேறு ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு, பொருளாதார ரீதியாக நாடு முழுக்கப் பெரும் தாக்கத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்றதுமே, விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான `பிச்சைக்காரன்' திரைப்படம்தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.
`உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதே, கறுப்புப் பணத்தை ஒழிக்க வழிவகை செய்யும்' என்று அந்தப் படத்தில் கூறப்பட்டிருந்த கருத்து பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றது. இப்போது 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கும் மத்திய அரசின் அறிவிப்பு குறித்து, `பிச்சைக்காரன்' படத்தின் இயக்குநர் சசியிடம் பேசினோம்.
``என் உதவி இயக்குநர் பால் ஆண்டனி, பொருளாதார விஷயங்களை மையப்படுத்தி கதை உருவாக்கிறதுல கில்லாடி. `உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளைத் தகுதி நீக்கம் செஞ்சாலே கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தலாம்'னு சுவாரஸ்யமான கதையை அவர்தான் சொன்னார். ஒரு பிச்சைக்காரர் இந்த விஷயத்தைச் சொன்னா நல்லாயிருக்கும்னு திரைக்கதை நகர்வுல சில மாற்றங்களைச் செஞ்சதுதான் என் வேலை. 500 மற்றும் 2000 ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணத்தை, ஒரு சூட்கேஸ்லகூட பெருமளவுல பதிக்கிட முடியும்.

இந்த விஷயத்தையும் `பிச்சைக்காரன்' படத்துல சொல்லியிருந்தோம். அந்தப் படம் வெளியான கொஞ்ச காலத்துலயே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால நாங்க சொன்ன கருத்து மக்கள்கிட்ட போய் சேர்ந்துச்சு. 1000 ரூபாய் நோட்டுகளைத் தகுதி நீக்கம் செய்யணும்னு அந்தப் படத்துல சொல்லியிருந்தோம். அதேபோல 1000 ரூபாய் நோட்டுகளைத் தகுதி நீக்கம் செஞ்சுட்டு, அதுக்குப் பதிலா 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது பெரிய முரண்.
கறுப்புப் பணத்தைப் பதுக்கிற பலரும், சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அதிக அளவுல சேமிச்சு வைக்கிறது கஷ்டம். அதனால, 500, 2000 மாதிரியான உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளைத்தான் பதுக்கி வைப்பாங்க. தாமதமான அறிவிப்பா இருந்தாலும் 2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறும் மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதுதான்" என்றவர், கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த ஆலோசனை ஒன்றையும் முன்வைத்தார்.

``ஆன்லைன் பணப்பரிமாற்றம் அதிகமா நடக்க ஆரம்பிச்சுட்ட இன்றைய காலத்துல, பலரும் ரூபாய் நோட்டுக்களைச் சேமிச்சு வைக்கிறதைக் குறைச்சுட்டாங்க. சில்லறை வர்த்தகர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையிலும் எல்லா இடத்திலும் ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை இன்னும் எளிமைப்படுத்த அரசு வழிவகை செய்யலாம். ஆன்லைன் வாயிலா பணப்பரிமாற்றம் நடந்தா, ஒருத்தர்கிட்டேருந்து இன்னொருத்தருக்குப் போகும் கொடுக்கல், வாங்கல் எல்லாமே பதிவாகும். இதனால, கறுப்புப் பணத்தையும் பெருமளவில் கட்டுப்படுத்தலாம்" என்று முடித்தார்.