Published:Updated:

ரூ.1,000 கோடி ஜி.எஸ்.டி வரி தந்த 10 படங்கள்... சினிமா பற்றி உதயநிதியும் மணிரத்னமும் சொன்னது என்ன?

சிஐஐ தக்‌ஷின் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தென்னிந்திய சினிமாவில் கடந்த 2022-ல் வெளியான ஆர்.ஆர்.ஆர்', 'கே.ஜி.எஃப் 2', காந்தாரா, பொன்னியின் செல்வன் 1, விக்ரம் உள்ளிட்ட 10 திரைப்படங்கள் மட்டுமே அரசுக்கு ரூ.1,000 கோடி ஜிஎஸ்டி வருவாயாகக் கொடுத்திருக்கிறது.

Published:Updated:

ரூ.1,000 கோடி ஜி.எஸ்.டி வரி தந்த 10 படங்கள்... சினிமா பற்றி உதயநிதியும் மணிரத்னமும் சொன்னது என்ன?

தென்னிந்திய சினிமாவில் கடந்த 2022-ல் வெளியான ஆர்.ஆர்.ஆர்', 'கே.ஜி.எஃப் 2', காந்தாரா, பொன்னியின் செல்வன் 1, விக்ரம் உள்ளிட்ட 10 திரைப்படங்கள் மட்டுமே அரசுக்கு ரூ.1,000 கோடி ஜிஎஸ்டி வருவாயாகக் கொடுத்திருக்கிறது.

சிஐஐ தக்‌ஷின் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பாலிவுட் சினிமாக்கள் மட்டுமே இந்தியா முழுவதும் ஆக்கிரமித்திருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது பிராந்திய மொழி சினிமாக்கள் `பான் - இந்தியா' சினிமாக்கள் என்ற அந்தஸ்தைப் பெற ஆரம்பித்துவிட்டன. அதற்கு சமீபத்திய உதாரணங்கள் `ஆர்.ஆர்.ஆர்', `கே.ஜி.எஃப் 2', காந்தாரா, பொன்னியின் செல்வன் 1 ஆகியவை. இந்த நான்கு திரைப்படங்கள் மட்டுமே 2022-ம் ஆண்டில் 3.57 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி சாதனை படைத்திருக்கின்றன.

இந்தியாவின் ஒட்டுமொத்த சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறையின் உற்பத்தி மற்றும் வருவாயில் 50% பங்களிப்பை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்து வழங்கிவருகின்றன. இதை மேலும் வளர்த்தெடுக்கும் முயற்சியில் தென்னிந்திய சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறையின் அடுத்தகட்ட சவால்கள் என்ன, வாய்ப்புகள் என்ன, இலக்குகள் என்ன என்பது பற்றி விவாதிக்க மாபெரும் மாநாட்டை சிஐஐ தக்‌ஷின் சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் தலைவர் சத்ய ஜோதி ஃப்ளிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், டாக்டர் ஆர்.நந்தினி, சிஐஐ தக்‌ஷின் உறுப்பினர்கள் சுஹாசினி மணிரத்னம், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட பலரின் முயற்சியில் இந்த மாநாடு இரண்டாம் வருடமாகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

சிஐஐ தக்‌ஷின் மாநாடு
சிஐஐ தக்‌ஷின் மாநாடு

சிஐஐ தக்‌ஷின் இரண்டாம் ஆண்டு மாநாடு கடந்த வாரம் இரண்டு நாள்கள் நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.சாமிநாதன் மற்றும் நடிகர்கள் தனுஷ், கார்த்திக், ரிஷப்ஷெட்டி, கார்த்தி சிவகுமார், மஞ்சு வாரியர், ஐஸ்வர்யா ராஜேஷ், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு, அமலா அக்கினேனி, ரம்யா சுப்ரமணியன், நதியா, ஐஸ்வர்ய லஷ்மி மற்றும் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், ஆர்.பால்கி, அனுராக் காஷ்யப், பாசில் ஜோசப், ஏ.எல்.விஜய், மோகன் ராஜா, புஷ்கர்-காயத்ரி, ஶ்ரீராம் ராகவன், ரமேஷ் அரவிந்த் தயாரிப்பாளர்கள் டி.ஜி.தியாகாராஜன், ரவி கொட்டாரகரா, ஜி.தனஞ்செயன், தி.இ.ஞானவேல்ராஜா, எஸ்.எஸ்.லலித்குமார், சாலுவே கவ்டா, ஆர்.கே.செல்வமணி ஆகிய துறை ஜாம்பவான்களின் பட்டாளமே திரண்டு மாநாட்டை சிறப்பித்தது. பல தலைப்புகளில் பல அமர்வுகளில் இவர்கள் கலந்துகொண்டு பல விஷயங்களை விவாதித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் பல திட்டங்களைச் செயல்படுத்த காத்திருக்கிறார்..!

தொடக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ``திரைத்துறையில் 15 ஆண்டுகளாகத் தயாரிப்பாளராக, விநியோகஸ்தரராக, நடிகனாகப் பயணித்துக்கொண்டிருக்கிறேன். தற்போது முழுமையாக அரசியலில் இருப்பதால் திரைத்துறை குடும்பத்தினரில் ஒருவராக அல்லாமல், தமிழ்நாட்டின் அமைச்சராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருக்கிறேன்.

பொதுவாகவே, சினிமா துறையில் ஒற்றுமை என்பது இருக்காது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாகத் திரைத்துறையினர் இணைந்து சிறப்பாக சிஐஐ தக்‌ஷின் நிகழ்ச்சியை நடத்திவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய சினிமாத் துறையில் பெரும்பங்கு வகிக்கும் தென்னிந்திய சினிமாவை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் சிஐஐ தக்‌ஷின் செயல்பட்டுவருகிறது. திரைத்துறை தொடர்பாக ஜி.தனஞ்செயன், ஆர்.கே.செல்வமணி போன்றவர்கள் பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் திரைத்துறைக்குப் பல திட்டங்களைச் செயல்படுத்த காத்திருக்கிறார். திரைத்துறையின் வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவை அரசு நிச்சயம் வழங்கும்" என்று பேசினார்.

ரூ.1,000 கோடி ஜி.எஸ்.டி வரி தந்த 10 படங்கள்... சினிமா பற்றி உதயநிதியும் மணிரத்னமும் சொன்னது என்ன?

``ஒவ்வொரு கலைக்கும் ஒரு மொழி, கலாசாரம், எல்லை இருக்கிறது'' - வெற்றி மாறன்

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ``கலைகளுக்கு எல்லைகள் இல்லை என்பார்கள். ஆனால், ஒவ்வொரு கலைக்கும் ஒரு மொழி, கலாசாரம், எல்லை ஆகியவை இருக்கிறது. ஆனால், கலையை நுகர்பவர்களுக்கு அந்த எல்லைகள் இல்லை. எல்லைகளைக் கடந்து கலை பயணிக்கும். எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்று ஒரு கதையை உருவாக்காமல், ஒரு கதையை அதன் உண்மைக்கு நெருக்கமாக எடுக்கும்போது உணர்வு ரீதியாக அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதனால்தான் பாலிவுட் சினிமாக்களால் முடியாத சாதனைகளை கே.ஜி.எஃப், காந்தாரா போன்ற பிராந்திய சினிமாக்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன" என்றார்.

சிஐஐ தக்‌ஷின் மாநாடு
சிஐஐ தக்‌ஷின் மாநாடு

``அந்தக் காலத்திலேயே `பான் இந்தியா' சினிமாவை உருவாக்கினார் எஸ்.எஸ்.வாசன்...''

நடிகர் கார்த்தி பேசும்போது, ``பான் இந்தியா இன்று அல்ல எப்போதோ இருந்திருக்கிறது. எஸ்.எஸ்.வாசன் உருவாக்கிய `சந்திரலேகா' அப்போதே தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு எல்லைகளைக் கடந்து சாதனை படைத்தது. வைஜெயந்திமாலா உட்பட பலர் மொழிகளைக் கடந்து ஆதிக்கம் செலுத்தினர். நடிகர்கள் மட்டுமல்ல, தொழில்நுட்ப கலைஞர்களும் மொழிகளைக் கடந்து இயங்கியிருக்கின்றனர். கதை சொல்வதிலும், சினிமா உருவாக்கத்திலும் புதிய முயற்சிகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுவருகின்றன. இந்தத் துறையில் பங்காற்றுவது மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று அவர் பேசினார்.

`more regional' என்பதுதான் `more universal' - ரிஷப் ஷெட்டி...

காந்தாரா புகழ் இயக்குநர் மற்றும் நடிகருமான ரிஷப் ஷெட்டி பேசுகையில், ``more regional என்பதுதான் more universal. இதில் எனக்கு எப்போதுமே ஆழமான நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை என்னைக் கைவிடவில்லை. நம் ஊர் கதைகளும் உலகம் முழுவதும் சென்றடையும் என்பதை காந்தாரா நிரூபித்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.

ஆனால், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என்றாலே பல காலமாக சமூகத்தில் மரியாதை குறைவாகவே நடத்துவார்கள். வீடு வாடகைக்குத் தரமாட்டார்கள், திருமணத்துக்குப் பெண் தரமாட்டார்கள். இவையெல்லாம் மாற வேண்டுமெனில், மற்ற துறைகளைப் போலவே சினிமா துறையையும் அங்கீகரிக்க வேண்டும்" என்று பேசினார்.

சிஐஐ தக்‌ஷின் மாநாட்டில் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், ரிஷப் ஷெட்டி, பாசில் ஜோசப்
சிஐஐ தக்‌ஷின் மாநாட்டில் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், ரிஷப் ஷெட்டி, பாசில் ஜோசப்

``சினிமாவுக்கு துறை அந்தஸ்து வேண்டும்'' -   ஆர்.கே.செல்வமணி...

தொடர்ந்து பேசிய ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். ``தென்னிந்திய சினிமாவில் கடந்த 2022-ல் வெளியான `ஆர்.ஆர்.ஆர்', `கே.ஜி.எஃப் 2', காந்தாரா, பொன்னியின் செல்வன் 1, விக்ரம் உள்ளிட்ட 10 திரைப்படங்கள் மட்டுமே அரசுக்கு ரூ.1,000 கோடி ஜிஎஸ்டி வருவாயாகக் கொடுத்திருக்கிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் கலைத்துறை இது.

ஆனால், சினிமாவுக்கு துறை அந்தஸ்து இதுவரை இல்லை என்பது வருத்தமான உண்மை. ஃபெஃப்சி உறுப்பினர்கள் இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட திரைப்ப்டங்களில் வேலை பார்த்திருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட சினிமாவுக்கு துறை அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் பல முறை இதுதொடர்பாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடக்கவில்லை. இந்தக் கோரிக்கை அரசு நிறைவேற்றித் தந்தால் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் பலன் அடைவார்கள். மேலும், மத்திய திரைப்படத்துறை மேம்பாட்டு சங்கத்தைப் போல, தமிழ்நாட்டிலும் தமிழ் சினிமா துறை மேம்பாட்டு கழகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

சி.ஐ.ஐ தக்‌ஷின் கருத்தரங்கம் சினிமா துறையை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்வதாக அமைந்திருந்தது!