
தற்போதைய நிலவரப்படி, தனிநபர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, ஒரே வருமான வரி விகிதங்களுக்கு உட்பட்டவர்கள்தான்
வேலைக்குப் போக முடியாத சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் பலர் சுயமாகச் சம்பாதிக்க நினைக்கிறார்கள். சம்பாதிக்கவும் செய்கிறார்கள். உதாரணமாக, அக்கம்பக்கத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கிறார்கள். தையற்கலை தெரிந்தவர்கள் ஆடைகள் தைத்துக் கொடுக்கிறார்கள். மணப்பெண்களுக்கு மேக்கப் போடுகிறார்கள். சிறிய அளவில் கேட்டரிங் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஊறுகாய், அப்பளம், வத்தல், வடாம் போட்டு விற்பனை செய்பவர்களும் உண்டு.

இந்த நிலையில், சமீபத்தில் நமக்கு வந்த தொலைபேசி அழைப்பில் வாசகி ஒருவர், ``நான் சில வருடங்களாக வீட்டிலேயே ஊறுகாய் தயாரித்து, தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்கி றேன். நல்ல வருமானம் வருது. இப்போ கேட்டரிங் தொழிலில் ஈடுபட நினைக் கிறேன். இப்படி வீட்டிலேயே சுய தொழில் செய்து சம்பாதிக்கும் பணத் துக்கு வருமான வரி கட்ட வேண்டுமா, ஏன் கட்ட வேண்டும், எவ்வளவு தொகைக்கு மேல் சம்பாதித்தால் கட்ட வேண்டும், அதற்கான கணக்கை எப்படிப் பராமரிக்க வேண்டும்'’ என பல கேள்விகளைக் கேட்டிருந்தார்.
வாசகியின் இந்தக் கேள்விகளுக்கு விளக்க மாகவே பதில் அளித்தார் சென்னையைச் சேர்ந்த சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் ரேவதி ரகுநாதன். “குடிமக்களாகிய நாம் செலுத்தும் வரிப்பணம்தான் நம் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவுகிறது. அது நேரடி வரியாக - இன்கம் டாக்ஸ் மூலமாகவும், மறைமுக வரியாக - பொருள்கள் வாங்கும்போது ஜிஎஸ்டி மூலமாகவும் வசூலிக்கப்படுகிறது. இப்படி அரசாங்கம் மக்களிடம் வசூலிக்கும் தொகையில் பல பிரிவுகள் இருந்தாலும் இவை இரண்டும் பிரதானமாக உள்ளன. இன்றைய நிலையில், சுமார் 140 கோடி பேர் உள்ள இந் தியாவில் 4 சதவிகிதத்தினர் மட்டுமே நேரடி யாக வரி செலுத்துகின்றனர்.
இந்திய வருமான வரிச் சட்டம், 1961, ‘வியாபாரம் அல்லது தொழிலில் இருந்து லாபம் மற்றும் ஆதாயம்’ என்ற தலைப்பின்கீழ் சுய தொழில் செய்பவர்களின் வருமானத்துக்கு வரி விதிக்கிறது. 2,50,000 ரூபாய்க் குக் குறைவாக சம்பாதிப்பவர்கள் வருமான வரி கட்ட வேண்டிய தில்லை. ரூ.2,50,001 – ரூ.5,00,000 சம்பாதிப்பவர்கள் 5% தொகையை வருமான வரியாகக் கட்ட வேண்டும் என்று வரு மானத்துக்கு ஏற்ற வகையில் வரி செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கும்.
வீட்டிலிருந்து சம்பாதிக்கும் பெண்கள், அவர்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். மேக்கப் போடுபவர்கள் அதற்கான அழகுசாதனப் பொருள் களை வாங்கியாக வேண்டும். ஊறுகாய் போடுபவர்கள் மாங்காய், எலுமிச்சை, எண்ணெய் போன்ற பொருள்களை வாங்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் ஒரு கணக்கு உண்டு. சிலர் வாய்க் கணக்காகவும், ஒரு நோட்டிலும் எழுதி வைத்திருப்பார்கள். இந்தப் பொருள்களுக்கான செலவுகள் போக உடலுழைப்பும் உண்டு. இதெல்லாம் போக மீதி வரும் தொகைதான் வருமானம். இந்த முறையில் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் கணக்குகளை பட்டயக் கணக்காளர் (ஆடிட்டர்) மூலம் தணிக்கை செய்து, அவர்களின் வரித் தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம்” என்றவர் எப்படி வருமான வரியைத் தாக்கல் செய்வது என்பது குறித்தும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விவரித்தார்...

சுயதொழில் செய்பவர்கள் வருமான வரியை எப்படி தாக்கல் செய்யலாம்?
``அனுமான வரிவிதிப்பு... (Presumptive taxation) கணக்குப் புத்தகங்களைப் பராமரித்தல் மற்றும் கணக்குப் புத்தகங்களைத் தணிக்கை செய்வதில் இருந்து விடுபட வருமான வரிச் சட்டம் இந்த அனுமான வரி விதிப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதில் விலக்குகள் அல்லது செலவுகள் எதுவும் கணக்கிடப்படாது. இதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாக சம் பாதிக்கும் நிலையில், பணமாகச் செலுத்தும்போது (Cash Transactions) 8% வரியாகச் செலுத்த வேண்டும். வங்கி மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூல மாகவோ பரிவர்த்தனை செய்யப்படும் (Online Transactions) கணக்குக்கு 6% வரியாகச் செலுத்த வேண்டும். அடுத்தது, உண்மையான லாபத்தின் அடிப் படையில் கணக்கிடப்படும் வரி விதிப்பு... வணிகத்தின் வழக்க மான போக்கில் ஏற்படும் செலவு கள் அல்லது கோரக்கூடிய ஏதேனும் விலக்குகள் ஆகிய வற்றைக் கணக்கிடும் உண்மையான லாபத்தின் அடிப்படையில் நீங்கள் வரியைக் கணக்கிட்டு வரி செலுத்துவது.
இப்படி வரி செலுத்துபவர்கள் வீட்டுக் கடன், கார் கடன், பிள்ளைகளின் மேற்படிப்புக் கான கல்விக் கடன் மற்றும் இதர கடன்களுக் காக விண்ணப்பிக்கும்போது வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ததற்கான விவரங்களை யும் அளித்தால், அது வங்கிக்கு உதவும். மேலும், வேலைக்காக வெளிநாடுகளுக்குக் குடியேற விரும்பினால், நீங்கள் செலுத்தியுள்ள வருமான வரி தாக்கல் படிவம் உதவும்” என்கிறார்.

பெண்களுக்கு சிறப்பு வருமான வரி விலக்குகள், சலுகைகள் ஏதேனும் உள்ளனவா?
“தற்போதைய நிலவரப்படி, தனிநபர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, ஒரே வருமான வரி விகி தங்களுக்கு உட்பட்டவர்கள்தான். வரிச் சலுகை என்பது தனி நபர்களின் வயதைப் பொறுத்தது, பாலினத்தைப் பொறுத்து அல்ல என்கிறது அரசு.
சில பெண்கள் என் கணவர்தான் வருமான வரி செலுத்துகிறாரே... நான் சுயமாக சம்பாதிப்பது என் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும், என் குழந்தைகளின் விருப்பத்தை நிறை வேற்றவும்தான். இதற்கு நான் ஏன் வரி செலுத்த வேண்டும் என்று கேட்பார்கள். உண்மை அதுவாக இருந்தாலும், வருமானம் என்று வரும்போது அதற்கான வரி செலுத்தியாக வேண்டும்.
வாசகி கேட்டிருந்த படி ஒரு தொழிலைத் தொடங்குபவர்கள் முதலில் கொஞ்சம் வருமானத்தையும் லாபத்தையும் பார்ப் பார்கள். லாபம் அதி கரிக்கும்போது, அதோடு அவர்கள் நின்றுவிட மாட்டார்கள். தங்கள் தொழிலை மேலும் மேலும் விரிவுப்படுத்தி வருமானத்தைப் பெருக்குவார்கள். அப்போது வருமான வரியைக் கட்டாமல் இருக்க முடியாது.
இப்படிப்பட்ட நிலையில் ஆரம்பத்திலேயே செலவுக்கும் வருமானத்துக்கும் கணக்கு வைத்துக்கொண்டு வருமான வரி கட்டி வந்தால், அது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இன்னும் புதிது புதிதாகத் தொழில் தொடங்கி வருமானத்தைப் பெருக்கும் தைரியத்தைத் தரும்.
வங்கியில் கடன் கேட்டுச் செல்லும்போது, உங்களுக்குக் கடன் தர வேண்டுமெனில், உங்கள் வருமான வரிக் கணக்கைத்தான் முதலில் கேட்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றைய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உங்கள் வரவு - செலவு கணக்குகள் அனைத்தும் கண் காணிக்கப்படுவதால் - கணக்கைச் சரியாக வைத்திருக்கும்பட்சத்தில் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. துணிவாக உங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொண்டே செல்லலாம்” என்றார் நிறைவாக.