
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!
முந்திரிச் சக்கையிலிருந்து மாலிக் அமிலம்!
தேனியில் நிர்மாணிக்கப்படும் முந்திரி சிரப் தொழிற்சாலையின் கழிவாக எஞ்சும் முந்திரிச் சக்கையிலிருந்து, மாலிக் அமிலத்தைத் தயாரிக்க வேண்டும். மருந்து மற்றும் உணவுப்பொருள்கள் கெட்டுப்போகாமலிருக்க உதவும் ஒரு பொருளே மாலிக் அமிலம். தின்பண்டங்கள், குளிர்பானங்கள், பழச்சாறுகள், இனிப்புகள், பேக்கரி உணவுப்பொருள்கள் உள்ளிட்டவற்றில் அதன் சுவையூட்டியாகவும் இதைப் பயன்படுத்த முடியும் என்பதால் இதற்கான தொழிற்சாலையை, தேனி மாவட்டத்தில் நிறுவலாம்.
தேனி மாவட்டத்தில் சுமார் 13,500 ஏக்கர் பரப்பளவில் முந்திரி பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு 1,600 கிலோ வீதம் ஆண்டொன்றுக்கு 21,500 டன் விளைச்சல் கிடைக்கிறது. மாலிக் அமிலம் மற்றும் இதர பொருள்களைத் தயாரிக்கும் பயோவன் (Bioven) எனும் நிறுவனம், சந்தையில் 125 கிராம் அளவுள்ள மாலிக் அமில பவுடரைத் தோராயமாக 500 ரூபாய்க்கு விற்கிறது. இந்தச் சந்தையில் 10 சதவிகிதத்தைக் கைப்பற்றினாலே ஆண்டுக்குச் சுமார் 2.5 கோடி ரூபாய்க்கு வருமானம் பெறுவதோடு, பலருக்கு வேலைவாய்ப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்க முடியும். இதனால் தேனி மாவட்ட மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்; வாழ்க்கைத்தரம் உயரும்.


வாழைப்பூ இட்லிப்பொடி!
தேனி மாவட்டத்தின் முக்கிய வளங்களில் ஒன்று வாழை. வாழையிலிருந்து கிடைக்கும் வாழைப்பூவைப் பயன்படுத்தி இட்லிப்பொடி தயாரிக்கலாம். இது, சர்க்கரைக் குறைபாடு, ரத்தசோகை, செரிமானப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு ஓர் அருமருந்தாகப் பயன்படுவதாக, சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இதைக் கருத்தில்கொண்டு, தேனி மாவட்டத்தில் வாழைப்பூ இட்லிப்பொடி தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் வாழைச் சாகுபடி நடக்கிறது. ஏக்கர் ஒன்றுக்குத் தோராயமாக 1,200 வீதம், ஏறக்குறைய 1,82,25,000 வாழை மரங்கள் பயிரிடப்படுகின்றன. சந்தையில் 100 கிராம் இட்லிப்பொடியை 40 ரூபாய்க்கு விற்கிறார்கள். வாழைப்பூ இட்லிப்பொடியை 50 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால், ஆண்டுக்குப் பல கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டுவதோடு, பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும்.

ஆக்டிவேட்டடு கார்பன்!
தேனியின் முக்கிய வளங்களில் ஒன்று தென்னை. சுமார் 37,000 ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிரிடப்படு கிறது. அதை ஆக்டிவேட்டடு கார்பனாக (Activated Carbon) மதிப்புக் கூட்டும்போது தேங்காய் சிரட்டையிலிருந்தும் கோடிகளில் வருமானம் ஈட்டலாம். ஆக்டிவேட்டடு கார்பன், வழக்கமான கரியைவிட ஐந்து மடங்கு அதிகமாக எரியும் தன்மைகொண்டது. அதுமட்டுமன்றி அதிக புகையை உருவாக்காது. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், விலை குறைவானதாகவும் இருக்கும். ஆக்டிவேட்டடு கார்பனைக்கொண்டு நீரைச் சுத்திகரிக்க முடியும். அதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட வாட்டர் ப்யூரிஃபையர்களில் (Water Purifier) ஆக்டிவேட்டடு கார்பனைத்தான் கார்பன் கார்ட்ரிட்ஜுகளாகப் (Carbon Cartridge) பயன்படுத்துகிறார்கள். மேலும், ஆக்டிவேட்டடு கார்பனை ஃபில்டர் மாஸ்க்காவும் (Activated Carbon Filter Mask) பயன்படுத்தலாம். இது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் சுவாசப் பாதுகாப்புக்கு உதவுகிறது.

தேனி மாவட்டத்தில், ஏக்கர் ஒன்றுக்குச் சுமார் 6,300 தேங்காய் ஆண்டுதோறும் விளைச்சல் கிடைக்கிறது. இவற்றிலிருந்து ஆண்டுதோறும் ஏறக்குறைய 46 கோடி தேங்காய்ச் சிரட்டைகள் கிடைக்கும். பொதுவாக, ஒரு தேங்காய்ச் சிரட்டையின் எடை 50 கிராம் அளவுக்கு இருக்கும். இந்தக் கணக்கீட்டின்படி ஆண்டுக்கு 23,000 டன் தேங்காய்ச் சிரட்டைகள் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து சுமார் 30 சதவிகிதம் அளவை எடுத்துக்கொண்டால், தோராயமாக 7,000 டன் சிரட்டைகளிலிருந்து ஏறக்குறைய 700 டன் ஆக்டிவேட்டடு கார்பன் கிடைக்கலாம். ஒரு டன் ஆக்டிவேட்டடு கார்பனிலிருந்து 10,000 கார்பன் கார்ட்ரிட்ஜுகளைத் தயாரிக்க முடியும் எனில், ஆண்டொன்றுக்கு 70 லட்சம் கார்ட்ரிட்ஜுகளை உருவாக்கலாம். ஒரு கார்பன் கார்ட்ரிட்ஜின் விலையை 200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து மார்க்கெட்டில் விற்பனை செய்தால், ஆண்டுக்குச் சுமார் 140 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். மேலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கப்பெறும். இதனால் தேனி மாவட்ட மக்களின் பொருளாதாரம் மேம்படும்.

பயோ டீசல்!
தேனி மாவட்டத்தில் இலவம் மரங்கள் சுமார் 11,500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகின்றன. இலவம் விதையில் 27 சதவிகிதம் அளவுக்கு பயோ டீசல் தயாரிக்க முடியுமென்பதால், தேனி மாவட்டத்தில் இதற்கான தொழிற்சாலையை உருவாக்குவது அவசியம்.
உலக அளவில் வாகனங்களுக்கான எரிபொருளைப் பயன்படுத்துவதில் 5-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. ஒன்றிய அரசு, ஆண்டுதோறும் 80 சதவிகிதம் அளவுக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. எரிபொருளின் தேவை கூடிக்கொண்டே செல்வது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவற்றின் விலையும் அதிகரித்தபடியே இருக்கிறது. விளைவு, விலைவாசி உயர்வுக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் சிக்கல்களும் எழுகின்றன. இதையெல்லாம் சரிசெய்யும் நோக்கில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன. அவற்றில் ஒன்றுதான் மாற்று எரிபொருளான பயோ டீசலைப் (Bio-Diesel) பயன்படுத்துவது. இயற்கைக்கு ஆதரவான இந்த பயோ டீசலை காட்டாமணக்கு, இலவம், இலுப்பை, புண்ணை, வேப்பம் உள்ளிட்ட விதைகளிலிருந்தும், மாமிசக் கொழுப்பிலிருந்தும், சமைக்கப்பட்ட எண்ணெயிலிருந்தும் தயாரிக்கலாம்.

இலவம் விதையிலிருந்து பயோ டீசலைத் தயாரிக்கும் முறை எளிதானது. இளவம் விதையை எண்ணெயாகப் பிழிந்து எடுத்த பிறகு, அதைச் சுத்திகரிக்க வேண்டும். பின்னர் அதிலிருக்கும் டிரைகிளைசரைட்ஸ் (Triglycerides) என்கிற வேதிப்பொருளை நீக்கிவிட்டு, டிரான்ஸ்சஸ்டெரிஃபிகேஷன் (Transesterification) செய்வதன் வழியே பயோ டீசல் தயாரிக்கலாம். வழக்கமாக டீசல் பச்சை நிறத்தில் காணப்படும். பயோ டீசல் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேலும், வாகனங்களில் நேரடியாகவும் அல்லது டீசலுடன் கலந்தும் பயோ டீசலைப் பயன்படுத்தலாம். இதனால், வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் பயோ டீசல் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
அடுத்து வரும் பத்தாண்டுகளில், எலெக்ட்ரிக் கார்கள் சுமார் 35 சதவிகிதம் அளவுக்குச் சந்தையைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன. ஆயினும், டீசலின் தேவை இருந்துகொண்டே இருக்கும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பயோ டீசலை பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் கொள்முதல் செய்ய ஏற்கெனவே திட்டமிட்டிருக்கின்றன. அதனடிப்படையில் முதல் ஆண்டில் பயோ டீசல் லிட்டர் ஒன்று 51 ரூபாய்க்கும் அடுத்து, வரும் இரண்டு ஆண்டுகளில் அது 54 ரூபாயாக அதிகரிக்கப்படுவதாகவும் அவை உறுதியளித்திருக் கின்றன. இதைப் பயன்படுத்திக்கொண்டு, தேனியில் உற்பத்தி செய்யப்படும் பயோ டீசலை மேற்கண்ட நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். இதனால் ஆண்டுதோறும் பயோ டீசல் உற்பத்தியிலிருந்து பல கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடிவதோடு, பல நூறு பேருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இதனால் தேனி மாவட்ட மக்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமும் உயரும். இயற்கையும் நேசக்கரம் நீட்டும்!
(இன்னும் காண்போம்)
நம் அடுத்தக் கனவு ‘கன்னியாகுமரி’