மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 69 - நீலகிரி - வளமும் வாய்ப்பும்

நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
News
நீலகிரி

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

பணம்

நீலகிரி, தொழிற்சாலை மாவட்டம் அல்ல. ஆங்கிலேயர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிய காலத்துக்குப் பிறகுகூட அங்கே தொழிற்சாலைகள் பெரிதாக உருவானதில்லை. அவர்கள் பெரும்பாலும் ஓய்வுப் பகுதியாகவே நீலகிரியைப் பயன்படுத்தினார்கள். இப்போது உருவாகியிருக்கும் தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் நிலைக்கு வந்துவிட்டன. எனவே, நீலகிரிக்கான பொருளாதாரத் திட்டங்களை ஆராயும்போது, தொழிற்சாலைகள் சார்ந்த எந்தத் தொழில் முனைவையும் சொல்லிவிடக் கூடாது என்று நானும் அணியினரும் கவனமாக இருந்தோம். கூடவே, பழங்குடியினர் நிறைந்த நிலம் என்பதால் ‘கலாசாரச் சுற்றுலா’ போன்ற பண்பாட்டைச் சுரண்டும் நடவடிக்கையையும் முன்னிறுத்திவிடக் கூடாது என்றும் அக்கறை காட்டினோம். ஆனாலும், நீலகிரிக்கு நிச்சயம் பொருளாதார முன்னேற்றம் தேவை என்ற எண்ணம் மட்டும் என் மனதின் அடியாழத்தில் விழித்திருந்தது.

நீலகிரி
நீலகிரி

நிறைய யோசித்தோம். தேயிலை, ஏற்கெனவே பட்டியலில் இருந்தது. அடுத்து என்னவென்று தேடியபோது, கேரட் எங்களுக்குப் பிரதானமாகத் தெரிந்தது. தமிழ்நாட்டிலேயே நீலகிரியில்தான் அதிக விளைச்சல் என்று தரவுகள் சொல்கின்றன. கூடுதலாக, இப்போது பூண்டும் நீலகிரியில் அதிகம். இதுபோக, பிளம், ஸ்ட்ராபெரி, பேரிக்காய் போன்ற கனிகளும் பல இடங்களில் பயிரிடப்படுகின்றன. ஆனால், இவையெல்லாமே ஏதோவொரு மதிப்புக்கூட்டுப் பொருளிலும், அது சார்ந்த தொழிற்சாலைகளிலுமே கொண்டுநிறுத்தின. என்ன செய்வதென்று சோர்ந்து அமர்ந்தபோது, காளான் வளர்ப்பு எங்கள் கண்களில் பட்டது. அடுத்த சில நாள்களில், நீலகிரியை இந்தியாவின் மிகச்சிறந்த வேலைச் சுற்றுலா (Workcation) இலக்குகளில் ஒன்றாக மாற்ற முடியும் என்றும் தோன்றியது. எனவே, தேயிலை, காளான், வேலைச்சுற்றுலா என மூன்று திட்டங்களில் மாவட்டத்தின் பொருளாதாரத்தை மாற்றிக்காட்ட முடியும் என்று நம்பிக்கைகொண்டோம். கண்டிப்பாக, மூன்று திட்டங்களுமே நீலகிரியின் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தப்போவதில்லை என்று நூறு சதவிகிதம் உறுதியாகச் சொல்வேன்! (I am sure it’s 100% ‘Eco’-nomy!)

நீலகிரி
நீலகிரி

INDCOSERVE & TANTEA-ஐ இணைக்க வேண்டும்!

நீலகிரியில் தேயிலை விளையும் என்பது, சன் டி.வி பட்டிமன்றம் என்றாலே சாலமன் பாப்பையா இருப்பார் என்பதைப்போல தமிழர்கள் எல்லோருக்கும் தெரிந்த தகவல். அந்த அளவுக்கு நீலகிரியும் தேயிலையும் தமிழர்கள் மனதில் ஆழப்பதிந்திருக்கின்றன. நீலகிரி மாவட்டம் முழுவதும் 1,35,000 ஏக்கர் அளவுக்குத் தேயிலைத் தோட்டங்கள் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த 1,35,000 ஏக்கரிலிருந்து 1,50,000 டன் அளவு தேயிலை ஆண்டுதோறும் நமக்குக் கிடைக்கிறது. இதில் பெரும்பகுதியைக் கையாள்வது தமிழ்நாடு அரசின் கீழ் வரும் தேயிலை அமைப்புகளான INDCOSERVE-ம் TANTEA-யும்தான். எனவே, அந்த அமைப்புகளை மையப்படுத்தியே எங்களின் பொருளாதாரத் திட்ட ஆய்வைக் கொண்டு சென்றோம். மேலும், நீலகிரியின் தனியார் தேயிலைத் தோட்டங்களும், தொழிற்சாலைகளும் நன்றாகவே வணிகம் செய்கிறார்கள்.

நீலகிரி
நீலகிரி

INDCOSERVE, 1965-ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பு, தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் கீழ் செயல்படுகிறது. இது சொந்தமாகத் தேயிலைத் தோட்டங்களை நடத்தாமல், சிறிய தேயிலை முதலாளிகளை இணைத்துக்கொண்டு கூட்டுறவு மாடலில் செயல்படுகிறது. TANTEA 1968-ம் ஆண்டு அன்றைய தி.மு.க அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இது, தமிழ்நாடு வனத்துறையின்கீழ் செயல்படுகிறது. இது சொந்தமாகத் தேயிலைத் தோட்டங்களை நடத்திக்கொண்டு, தேயிலைத் தொழிலாளர்களின் நலனைப் பேணும் கம்பெனி மாடலாகச் செயல்படுகிறது. இங்கே நாம் கருத்தில்கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த இரண்டு அமைப்புகளுமே தனியாகத் தேயிலைத் தொழிற்சாலைகள் நடத்துகின்றன. மேலும், தனித் தனிப் பெயர்களில் தேயிலைத் தயாரிப்புப் பொருள்களை உருவாக்கி, சந்தைக்குக் கொண்டுவந்து விற்கின்றன. உங்களால் TANTEA, INDCOSERVE ஆகிய இரண்டு பெயர்களில் தமிழ்நாடு அரசின் தேயிலைப் பொருள்களைத் தற்போது வாங்க முடியும். இந்த இடத்தில், பெரிய பூனை செல்வதற்குப் பெரிய ஓட்டையும், சிறிய பூனை செல்வதற்குச் சிறிய ஓட்டையும் போட்ட ஐன்ஸ்டீனின் கதைதான் என் நினைவுக்கு வந்தது.

நீலகிரி
நீலகிரி

என் ஆலோசனைகள் மொத்தம் மூன்று. ஒன்று, INDCOSERVE, TANTEA இரண்டையும் இணைத்து ஒரே அமைப்பாக்க வேண்டும். இந்திய ஒன்றியம் எப்படி ‘இந்திய தேயிலைக் கழகம்’ (Tea Board India) என்ற ஒரே பெயரில் தேயிலைக்கான அமைப்பை நிர்வகிக்கிறதோ, அதேபோல, தமிழ்நாடும் ‘தமிழ்நாடு தேயிலைக் கழகம் (Tamilnadu Tea Board) என்ற ஒரே அமைப்பை நிர்வகிக்க வேண்டும். இந்த ஒரே அமைப்பின் கீழேயே INDCOSERVE-ன் சிறிய தேயிலைத் தோட்ட முதலாளிகளையும், TANTEA-ன் தேயிலைத் தொழிலாளர்களையும் கொண்டுவந்துவிடலாம். என் இடதுசாரி நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார், “இந்தியாவில் இடதுசாரிகள் இரண்டு அமைப்புகளாகப் பிரிந்து செயல்படத் தொடங்கி, சமத்துவச் சமுதாயம் எனும் நெருக்கமான இலக்கை, தொலைதூரமாக்கிவிட்டார்கள்” என்று. அதேபோல, தேயிலைக்கு நாம் வைத்திருக்கும் வருமான இலக்கையும், அதன் வழியே தேயிலை முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்குக் கொடுக்க நினைக்கும் மாற்றத்தையும் இரண்டு தனித்தனி அமைப்புகளால் தொலைதூரமாக்க வேண்டாம்.

சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

இரண்டு, INDCOSERVE, TANTEA இரண்டும் இணைத்து உருவாகும் தமிழ்நாடு தேயிலைக் கழகத்தின் Brand பிரிவை ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கு பதிலாக, தொழில்முனை வாளர்கள் (Entrepreneurs) மற்றும் துறைசார் மேலாண்மையாளர்கள் (Professional Managers) கொண்ட அணியிடம் ஒப்படைக்க வேண்டும். எனக்கு ஆட்சிப்பணி அதிகாரிகளின் திறமைமீதும், உழைப்பின்மீதும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்கள் அரசு நிர்வாகிகள் மட்டுமே. தொழில்முனைவு என்பது அரசு நிர்வாகமல்ல. ஒரு விவரம் சொல்கிறேன். தொழில்முனைவில் Startup, Grow, Scale என மூன்று படிநிலைகள் இருக்கின்றன. எங்கள் தொழில்முனைவாளர்களின் மொழியில் 0-1, 1-10, 10-100 என்று அதைச் சொல்வோம். இதில் 0-1 வரையான Startup படிநிலையையும் 1-10 வரையான Grow படிநிலையையும் தொழில்முனைவாளரே நன்றாக வழிநடத்த இயலும். அதற்கு அடுத்த 10-100 வரையான Scale படிநிலையை, தொழில்முனைவாளர் மற்றும் துறைசார் மேலாண்மையாளர்கள் இணைந்த அணியே நன்றாக வழிநடத்த இயலும். எனவே, கண்டிப்பாக ஒரு தொழில்முனைவாளரும் துறைசார் மேலாண்மையாளர்களும் இணைந்த அணி தமிழ்நாடு தேயிலைக் கழகத்துக்குத் தேவை.

மூன்று, தமிழ்நாடு தேயிலைக் கழகம் Commodity மாடலிலிருந்து Product மாடலுக்கு மாற வேண்டும். தமிழ்நாடு அரசின் தேயிலைத்தூள் உற்பத்தியில் 80 சதவிகிதம், Commodity (Raw Material)-யாக தனியாருக்கு விற்கப்பட்டுவிடுகிறது. இதை ஏலத்தின் மூலம் செய்கிறார்கள். இதற்காக குன்னூர், கோயம்புத்தூர், கொச்சின் ஆகிய மூன்று இடங்களில் ஏல மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்குப் பெரிய லாபம் எதுவும் இல்லை. ஆனால், அரசிடம் Commodity-யாக தேயிலைத்தூளைப் பெறும் தனியார்கள் நிறைய லாபம் ஈட்டுகிறார்கள். ஆகவே, Commodity மாடலை முற்றிலும் உதறிவிட்டு, மொத்த தேயிலைத்தூளையும் நேரடியாக வாடிக்கையாளரின் கைகளுக்குக் கொண்டுசேர்க்கும் Product மாடலை Tamilnadu Tea Board ஏற்க வேண்டும். இங்கு Teabox, Blue Tokai ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஒன்று டீக்கானது, இன்னொன்று காபிக்கானது.

இந்த இரண்டு நிறுவனங்களுமே டீத்தூள், காபித்தூளை நல்ல தரத்துடன், புதுமையான வடிவங்களில் வாடிக்கையாளர்களின் கைகளுக்குக் கொண்டு சேர்க்கின்றன. இதேபோல தமிழ்நாடு தேயிலைக் கழகமும் செயல்பட்டால் நன்றாக இருக்கும்!

(இன்னும் காண்போம்)