மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 70 - நீலகிரி - வளமும் வாய்ப்பும்

காளான்
பிரீமியம் ஸ்டோரி
News
காளான்

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

தென்னிந்தியாவின் புதிய காளான் தலைநகரம்!

ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை. ஆனால், நீலகிரியின் மிக முக்கியமான வளமாக, பொருளாதாரப் பட்டியலை ஆக்கிரமித்தது காளான் வளர்ப்பு. கடல்மட்டத்தைத் தாண்டிய 2,300 - 2,500 அடி உயரமான நில அமைப்பும், 10 - 25 டிகிரி செல்சியஸை ஒட்டிய குளிர்ந்த பருவநிலையும் காளான்கள் அங்கு செறிவாக வளர்வதற்குக் காரணமாக இருக்கின்றன. இப்போது பட்டன் மஷ்ரூம், ஆயிஸ்டர் மஷ்ரூம், பேடிஸ்ட்ரா மஷ்ரூம், மில்கி வொயிட் ஆகிய நான்கு வகைகளை நீலகிரி காளான் வளர்ப்பாளர்கள் விளைவித்துவருகிறார்கள். இவற்றை அதிகமாக உள்ளூர்ச் சந்தையில் விற்கிறார்கள். பெரும்பாலும் முகவர்களிடம் (Agents) கொடுத்து, அவர்கள் மூலமாக கடைகளுக்குச் சேர்ப்பிக்கிறார்கள். இன்னும் சில காளான் வளர்ப்பாளர்கள் அவர்களாகவே கடைகளுக்குக் கொண்டுசென்றும் கொடுக்கிறார்கள். ஆனால், இவையெல்லாமே உள்ளூர் நிறுவனங்கள் (Local Brands). இனி நீலகிரியின் காளானை, தமிழ்நாடு தாண்டி இந்தியன் Brand-ஆக நாம் வளர்க்க வேண்டும். அதற்கு முக்கியமாக நீலகிரியின் காளானை இந்தியச் சந்தையில் சரியாக நிலைநிறுத்த (Positioning) வேண்டும்.

எப்படி நிலைநிறுத்துவது... சொல்கிறேன். இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், ‘சோலன்’ என்றொரு மாவட்டம் இருக்கிறது. நீலகிரியைப்போலவே மலை மாவட்டம் அது. அந்த மாவட்டத்தில் 1960-ம் ஆண்டு முதன்முதலில் காளான் வளர்ப்பு செய்யத் தொடங்கினார்கள். அடுத்த சில தசாப்தங்களில் இந்தியாவின் காளான் நகரமாக (Mushroom City of India) மாறியது சோலன். இன்று சோலனைப்போல பல மாவட்டங்கள் காளான் வளர்ப்பு நகரங்களாக இமாச்சலில் மாறிவிட்டன. இதன் கூட்டு விளைவாக, ஒட்டுமொத்த இமாச்சலப் பிரதேசத்தையும் இந்தியாவின் காளான் தலைநகரமாக (Mushroom Capital of India) உருவாக்க முயன்றுவருகிறது இமாச்சலப் பிரதேச அரசு. கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், அந்த மாநிலத்தின் ஏழு இடங்களில் புதிய காளான் மையங்களைத் திறக்கும் அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள். ஆக, இன்னும் சில வருடங்களில் இந்தியாவின் வடக்குப் பகுதியில் அசைக்க முடியாத காளான் உற்பத்தி மற்றும் விநியோகிப்பாளராக இமாச்சலப் பிரதேசம் மாறிவிடும். இந்த நேரத்தில், நாம் சரியாகத் திட்டமிட்டால், நீலகிரியைத் தென்னிந்தியாவின் காளான் தலைநகரமாக உருவாக்கலாம்.

காளான்
காளான்

அடிப்படையில், காளான் எளிதில் கெட்டுப்போகக்கூடிய உணவுப்பொருள். பெரும்பாலும் 1-லிருந்து 2 நாள்கள் வரைதான் அதன் ஆயுட்காலம். இந்த இரண்டு நாள்களுக்குள் இமாச்சலப் பிரதேசத்தின் காளான் முகவர்களால் நம் தென்னிந்தியாவுக்குக் காளானைக் கொண்டுவந்து சேர்க்க முடியாது. அப்படியே கொண்டுவந்து சேர்க்க வேண்டுமென்றாலும், பதப்படுத்தித்தான் எடுத்துவர முடியும். பதப்படுத்த வேண்டுமென்றால், பல லட்சங்கள் வரை செலவாகும். இது காளான்களின் விலையில் எதிரொலித்து, வாடிக்கையாளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, இத்தகைய ‘தொலை தூர’ சாதகத்தைப் பயன்படுத்தி, நாம் நீலகிரியைத் தென்னிந்தியாவின் காளான் தலைநகரமாக உருவாக்கும் நடவடிக்கையைத் தொடங்கலாம். தற்போதைக்கு, தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களிலெல்லாம் அந்தந்த ஊர்களில் மிகச்சில காளான் வளர்ப்பாளர்கள் அளிக்கும் மலிவான காளான்களையே பயன்படுத்திவருகிறார்கள். அவர்களுக்கு நீலகிரி காளான் சரியான, ஒரே தேர்வாக இருக்கும்.

நாங்கள் ஒரு வரைபடத்தை உருவாக்கிப் பார்த்தோம். நீலகிரியிலிருந்து சென்னைக்கும் மதுரைக்கும், முறையே 570, 300 கிலோமீட்டர் தூரம். இந்த இரண்டு நகரங்களுக்கும் நீலகிரியின் காளான்களை 7-11 மணி நேரப் பயணத்தில் கொண்டு சேர்க்க முடியும். அடுத்தது, கொச்சினும் திருவனந்தபுரமும் முறையே 480, 290 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றன. இங்கு, 8-12 மணி நேரத்தில் நீலகிரி காளான்களைக் கொண்டு சேர்க்க முடியும். மூன்றாவதாக, கர்நாடகத்தின் மைசூர், பெங்களூர். இவை நீலகிரியிலிருந்து முறையே 120, 280 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றன. இங்கு 3-7 மணி நேரத்தில் நீலகிரியின் காளான்களைக் கொண்டு சேர்க்க முடியும். கடைசியாக, ஹைதராபாத், விசாகப்பட்டினம். இவற்றின் தூரம் முறையே 1,010, 1,200 கிலோமீட்டர். இந்த இடங்களுக்கு 16-24 மணி நேரத்தில் நீலகிரியின் காளான்களைக் கொண்டு சேர்க்க முடியும். மொத்தம் எட்டு பெரிய நகரங்கள். 4 கோடி மக்கள். எப்படி கணக்கு போட்டாலும், ஆண்டொன்றுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தைக் காளானை வைத்தே நீலகிரி கைப்பற்ற முடியும்.

நீலகிரி
நீலகிரி

ஓர் அடிக்குறிப்பு. குடில்களின் மூலம் காளான் வளர்ப்பதா அல்லது பண்ணைகளின் மூலம் வளர்ப்பதா, பழைய வகைகளை மட்டும் வளர்ப்பதா அல்லது புதிய வகைகளை வளர்ப்பதா என்பதையெல்லாம், நீலகிரியின் காளான் வளர்ப்பாளர்களிடமே விட்டுவிடுகிறேன். சந்தைச் சாத்தியத்தைக் காட்டுவது மட்டுமே காளானைப் பொறுத்தவரை என் குறிக்கோள். அதைச் செய்துவிட்டதாக நம்புகிறேன்!

இனி சீஸன் இல்லாத மாதங்களிலும் வருமானம்!

21-ம் நூற்றாண்டு விநோதமான, வித்தியாசமான முயற்சிகளின் காலம். 2002-ம் ஆண்டுக்கு முன்புவரை ராக்கெட்டை அரசு மட்டுமே தயாரித்து விண்ணுக்கு ஏவ முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், எலான் மஸ்க்கின் SpaceX அந்த நிலையை மாற்றியது. 2005-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒரு வீடியோ தளம், 50 மில்லியன் சுய தொழிலாளர்களை உருவாக்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், இன்று Youtube அதைச் சாதித்துக்காட்டியிருக்கிறது. அதே போன்றதொரு வித்தியாச, விநோத முயற்சிதான் வேலைச் சுற்றுலா (Workcation). அதாவது, சுற்றுலா சென்று வேலை பார்ப்பது அல்லது வேலை பார்ப்பதற்காகச் சுற்றுலா செல்வது. இந்தியாவின் டார்ஜிலிங், கூர்க், ஷில்லாங் போன்ற சுற்றுலாத்தலங்கள் இன்று வேலைச் சுற்றுலாவை வைத்தே பல நூறு கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டும் அளவுக்கு முன்னேறியிருக்கின்றன. நீலகிரியையும் அந்தப் பட்டியலுக்குள் வரும் ஆண்டுகளில் நம்மால் கொண்டுவர முடியும்.

நிறைய பேருக்குத் தெரியாதது, நீலகிரியின் சுற்றுலா பெரும்பாலும் சீஸனல் சுற்றுலா. அங்கே மே, ஜூன் மாதங்களில் மட்டுமே உச்சகட்ட சுற்றுலா நடக்கும். ஏனென்றால், அப்போதுதான் பள்ளிகளுக்கான விடுமுறை, மலர்க் கண்காட்சி ஆகிய நடவடிக்கைகள் இருக்கும். இதைக் கடந்து பார்த்தால், மே மாதத்துக்கு முந்தைய ஏப்ரல் மாதத்திலும், ஜூனுக்குப் பிந்தைய ஜூலை மாதத்திலும் ஓரளவுக்குச் சுற்றுலாப்பயணிகள் குவிவார்கள். ஆக மொத்தம் எப்படிப் பார்த்தாலும், வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே நீலகிரியில் சுற்றுலா முழு வருமானம் ஈட்டித்தரும் துறையாக இருக்கிறது. மற்ற எட்டு மாதங்களில் தங்கும் விடுதிகள், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற சுற்றுலா இடங்களும் 10-20 சதவிகிதம் வரையான சுற்றுலாப்பயணிகளுடன் காற்றுதான் வாங்குகின்றன. நேரடியாகச் சொன்னால், நீலகிரி நான்கு மாதங்கள் அரசன், எட்டு மாதங்கள் ஆண்டி!

சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர் 
கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

இத்தகைய சூழலில்தான் நீலகிரிக்கான 12 மாத வருமான வாய்ப்பாக வேலைச் சுற்றுலாவை நான் முன்னிறுத்துகிறேன். வேலைச் சுற்றுலா வருவோருக்கு சீஸன் ஒரு பொருட்டு அல்ல. உண்மையைச் சொன்னால், சீஸன் இல்லாத மக்கள் நடமாட்டம் குறைந்த நாள்களையே அவர்கள் விரும்புவார்கள். அடுத்து முக்கியமாக கொரோனாவுக்குப் பிறகான தொழில் உலகம் பெரிய அளவில் Remote Workstyle-ஐ நோக்கித் திரும்பிவிட்டது. கடந்த ஜனவரி மாதம் நான் வாசித்த Times of India செய்தி ஒன்றின்படி, இந்தியாவின் 82% பணியாளர்கள் தற்போது Work From Home மாடலை விரும்பும் நிலைக்கு வந்து விட்டார்கள். இவர்களில் தென்னிந்தியாவில் மட்டும் எப்படியும் 50 சதவிகிதம் பேர் இருப்பார்கள். காளானுக்குப் போட்டதைப்போல இதற்கும் ஒரு வரைபடத்தைப் போட்டோ மென்றால், தென்னிந்தியாவின் மிக முக்கிய நகரங்களிலிருந்து பல லட்சம் பேரை நீலகிரியின் வேலைச் சுற்றுலா நோக்கி ஈர்க்க முடியும்.

இங்கேயும் ஓர் அடிக்குறிப்பு. அதாவது, வேலைச் சுற்றுலாவுக்குப் புதிதாக நாம் எந்த முதலீடும் செய்யவேண்டியதில்லை. இருக்கும் கட்டமைப்பை அப்படியே பயன்படுத்தினால் போதும். சில இடங்களில் மட்டும் சற்றே Customize செய்யவேண்டியிருக்கும்.

இத்துடன் கனவு நீலகிரியின் முடிவுக்கு வந்துவிட்டோம் நண்பர்களே! நான் முதல் பத்தியிலேயே சொன்னதைப்போல, நீலகிரி என்னை முற்றிலும் மறு ஆய்வு செய்துகொள்ளும் மாவட்டமாக அமைந்தது. அதிகாலை நேரத்தில், குளிர் உறைந்த அருவியொன்றில் குளியல் போட்டு மீண்ட மனிதனின் புத்துணர்ச்சியை என் மனதில் இப்போது உணர்கிறேன். கண்டிப்பாக இந்தத் தாக்கம் என் தனி வாழ்வில் நெடுநாள்களுக்கு இருக்கும்.

கடமையின் பக்கம் வந்தால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இனி சுற்றுச்சூழலுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் நீலகிரியின் வாயிலாக நான் உணர்ந்துகொண்டேன். அடுத்து, தூத்துக்குடியைக் கையில் எடுத்திருக்கிறார்கள் என் அணியினர். அவர்களிடம் நான் சொன்ன முதல் ஆலோசனையே, “அங்கிருக்கும் வேதிப்பொருள் தொழிற்சாலைகளின் விளைவுகளை ஆராயுங்கள்” என்பதுதான்.

நீலகிரி மக்களுக்கு என் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

(இன்னும் காண்போம்)

அடுத்த கனவு தூத்துக்குடி...