
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!
நீலகிரி ஒரு வகையான ‘அமைதியான உணர்வு’ என்றால், தூத்துக்குடி வேறு வகையான ‘கொந்தளிப்பான உணர்வு’ எனக்கு. இன்றும் தூத்துக்குடியை நினைக்கும்போதெல்லாம் அந்தி வானத்தின் சிவப்பைக் கறுப்பாக்க எழும் ஸ்டெர்லைட்டின் புகையும், அரச வன்முறையை நோக்கிய ஸ்னோலினின் புன்னகையும் என் கண்களுக்கு முன்னால் விரியும். இன்னும் அந்த மாவட்டம் அந்தத் துப்பாக்கிச்சூட்டின் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்றே நினைக்கிறேன். இந்தக் கரிசனத்திலிருந்தே தூத்துக்குடி தொடர்பான என் கனவுத் திட்டங்கள் முளைத்தன.
வேதிய, கனிமத் தொழிற்சாலைகள் தவிர்த்த தூத்துக்குடிக்கு மிக முக்கியப் பொருளாதார ஆதாரம், கடல்தான். எனவே, கடலை மையமாகவைத்து பெரும்பாலான கனவுத் திட்டங்களை உருவாக்கினேன். அதற்கடுத்து மக்ரூன் இனிப்பும், கொத்தமல்லி விளைச்சலும், ஆடு வளர்ப்பும் இருந்தன. அவற்றைவைத்து மூன்று திட்டங்கள். கடைசியாக, வான் தீவு முதல் ஆதிச்சநல்லூர் வரையிலான சுற்றுலாத்தலங்களை முன்வைத்து நான்கு புதிய திட்டங்கள். ஆக மொத்தம், 12 திட்டங்கள் ‘கனவு தூத்துக்குடி’க்கு!
‘சரக்குப் பெட்டகப் பரிமாற்ற மையம்’ அவசியம்!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே துறைமுக நகரம் தூத்துக்குடி. இங்கிருந்து நாவாய்கள் கிளம்பி கிரேக்க, எகிப்து நாடுகளுக்குச் சென்றதற்கான தகவல்கள் பதிவாகியிருக்கின்றன. அத்தகைய புகழ் வாய்ந்த தூத்துக்குடி துறைமுகம் இன்று பர்மா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வரும் கப்பல்களுக்கு Port of Call-க இருக்கிறது. இந்த நிலையை International Transshipment Hub-ஆக மாற்றி, அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றால், தூத்துக்குடி மாவட்டம் பல மடங்கு பொருளாதார வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் பெறும். ஏற்கெனவே தூத்துக்குடியை International Transshipment Hub-ஆக மாற்றும் அறிவிப்பை 2021-ம் ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்டது. `அதற்காக 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்’ என்றும் அறிவித்தார்கள். ஆனால், அது வெறும் அறிவிப்பாக மட்டுமே தொடர்வதால், மீண்டும் வலுவாகச் சுட்டிக்காட்ட வேண்டுமென நினைத்தேன்.

முதலில், Transshipment Hub என்றால் என்னவென்று சொல்லிவிடுகிறேன். கப்பலில் சரக்குகளை இன்னோர் இடத்துக்கு அனுப்புவதில் `Direct Shipment’, `Transshipment’ ஆகிய இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. Direct Shipment-ல் ஒரு சரக்குக் கப்பல், அது சார்ந்த துறைமுகத்தி லிருந்து கிளம்பி, சரக்கு சென்று சேரவேண்டிய துறைமுகத்துக்கு நேரடியாகச் சென்று இறக்கும். இடையில் வேறு எந்தத் துறைமுகத்துக்கும் செல்லாது. கிட்டத்தட்ட Direct Flight போன்றது. ஆனால், Transshipment-ல், ஒரு சரக்குக் கப்பல் அது சார்ந்த துறைமுகத்திலிருந்து கிளம்பி, நடுவில் இன்னொரு துறைமுகத்தில் நின்று, சரக்குகளைப் பிரித்து சிறிய கப்பல்களில் மற்ற துறைமுகங்களுக்கு அனுப்பும். கிட்டத்தட்ட Connecting Flight போன்றது!
இப்போது தூத்துக்குடியை ஏன் Transshipment Hub ஆக்க வேண்டும் என்பதற்கான காரணத்தைச் சொல்கிறேன்.
முதல் காரணம், தூத்துக்குடியில் இருப்பது இயற்கையாக உருவான துறைமுகம். தூத்துக்குடி கடலின் ஆழம் 1,335 மீட்டர். அதேபோல தூத்துக்குடி துறைமுகத்தின் பரப்பும் 3,270 ஏக்கர். இதனால் சுனாமி, புயல் போன்ற பேரழிவுகள் தூத்துக்குடியைப் பெருமளவு தாக்காது. 2004-ம் ஆண்டில் சுனாமியின்போதும் சரி, 1964 தனுஷ்கோடி புயலின்போதும் சரி... தூத்துக்குடி பெரிதாக பாதிக்கப்படவில்லை. 2021-ல்கூட, 93,000 டன் நிலக்கரியைச் சுமந்துவந்த சரக்குக் கப்பலைக் கையாண்டு சாதனை படைத்தது தூத்துக்குடி துறைமுகம். எனவே, Transshipment Hub-ஆக தரம் உயர்வதற்கான ஆற்றல் வளம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு உண்டு.
இரண்டாம் காரணம், தூத்துக்குடியில் Transshipment Hub எதுவும் இல்லை என்பதால் இந்தியக் கப்பல்களுக்கு, கொழும்பு துறைமுகமே ஒரே Transshipment வாய்ப்பாக இருக்கிறது.
DT Next வெளியிட்ட செய்திகளின்படி, 60% இந்தியச் சரக்குக் கப்பல்கள் Transshipment-காக கொழும்பு துறைமுகம் நோக்கிச் செல்கின்றன. இப்படி 60% கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்குச் செல்வதால் மட்டும், நமக்கு ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தூத்துக்குடிக்கு Transshipment Hub வந்தால், இந்த 700 கோடி ரூபாயை வீணாக இலங்கைக்குத் தாரை வார்க்கவேண்டிய நிலை இருக்காது.
மூன்றாவது காரணம், இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிநிலை, அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவை. அதே DT Next செய்தியின்படி, கொழும்பு துறைமுகம் எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி கையிருப்பு இழப்பு ஆகிய காரணங்களால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அத்தகைய ஒரு துறைமுகத்துக்கு 280 கிலோ மீட்டர் தூரத்தில் இன்னொரு Transshipment Hub அமைவது Southeast Asia, Australia, New Zealand உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களுக்கும் நல்லதொரு வாய்ப்பு. நம்மிடம் பொருளாதார நெருக்கடி இல்லை. அரசியல் நிலையற்ற தன்மை இல்லை. அந்நியச் செலாவணியைக் கையாளும் திறனும் இருக்கிறது. எனவே, தூத்துக்குடியை தாராளமாக Transshipment Hub-ஆக உருவாக்கலாம்.

என்ன திட்டம் என்பதைச் சொல்லிவிட்டேன், அதை ஏன் கொண்டு வர வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டேன். இனி அந்த Transshipment Hub வந்தால் தூத்துக்குடிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பட்டியலிடுகிறேன். முக்கியமாக வருமானம்தான் பெரிய பலன். ஒரு கப்பல் 100 கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு, Transshipment-காக தூத்துக்குடிக்கு வருகிறதென்றால், ஒரு கன்டெய்னருக்கு 150 அமெரிக்க டாலர் என, 100 கன்டெய்னர்களுக்கு 15,000 அமெரிக்க டாலர் வருமானத்தைப் பெறலாம். தூத்துக்குடி துறைமுகத்தின் சரக்குக் கையாளும் திறனான 4,50,000 TEU-வைக் கணக்கிட்டால், பல லட்சம் கோடிகளில் தூத்துக்குடி Transshipment Hub வருமானம் ஈட்டும். இதைக் கடந்து, Transshipment Hub-க்குப் பின்னணியில் சரக்குப் பரிமாற்றப் போக்குவரத்து (Freight Transport), சரக்குப் பெட்டகத் தயாரிப்பு (Container Manufacturing) எனப் புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகும். இதன் மூலமாகக் கூடுதல் வருமானத்தையும் பெற முடியும். எப்படிப் பார்த்தாலும், தூத்துக்குடியில் Transshipment Hub வருவது, மாவட்டப் பொருளாதாரத்தின் Dynamics-ஸையே மாற்றியமைக்கக்கூடிய வல்லமைகொண்டது.
இதுவுமில்லாமல் தென்கிழக்கு ஆசியாவில் 2.19 கோடி அளவு மக்கள்தொகைகொண்ட சிறிய நாடு இலங்கை. 57 லட்சம் அளவே மக்கள்தொகை கொண்ட மிகச்சிறிய நாடு சிங்கப்பூர். இந்த இரண்டு நாடுகளுமே Transshipment Hub வைத்திருக்கிறார்கள் எனும்போது, இந்தியாவில் அப்படியொன்று இல்லாதது மிகப்பெரிய கௌரவப் பிரச்னை. தூத்துக்குடியில் Transshipment Hub கொண்டுவந்தால், அந்த கௌரவப் பிரச்னை கண நேரத்தில் தீரும்.

வியக்கவைக்கும் தொழில்முனைவு வாய்ப்பு!
துறைமுகத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடிக்கு அடையாளம் அளிப்பது, மீன்பிடிப்பு. 2014-ம் ஆண்டு ENVIS (Environmental Information System) வெளியிட்ட தரவுகளின்படி, தூத்துக்குடியில் சாளை, ட்யூனா, சீலா உட்பட 2,000 வகையிலான மீன்கள் கிடைக்கின்றன. இந்த மீன்பிடிப்பின் மொத்த அளவு மட்டும் ஆண்டுக்கு 45,000 டன். இந்த மீன்களைக்கொண்டு எந்தப் புதிய திட்டத்தையும் நான் சொல்லப் போவதில்லை. ஏனென்றால், ஏற்கெனவே வெளிநாட்டு ஏற்றுமதி, உள்ளூர் வணிகம் எனத் தூத்துக்குடி மீனவர்கள் கலக்கிவருகிறார்கள். எனவே, நான் சொல்லப்போகும் ஆலோசனை மீன்கழிவுகளைப் பற்றியது.
தூத்துக்குடியில் பிடிபடும் 45,000 டன் மீன்களிலிருந்து தோராயமாக, 10 சதவிகிதம் அதாவது 4,500 டன் அளவுக்கு மீன்கழிவுகள் கிடைக்கும். இவையெல்லாமே இப்போது சூழலைக் கெடுக்கும் வகையில் குப்பைக் கிடங்குகளுக்குத்தான் அனுப்பப்பட்டு வருகின்றன. அல்லது படகுகளில் ஏற்றி கடல் பரப்பில் கொட்டப்பட்டுவருகின்றன. இவையெல்லாமே மற்றவர்கள் பார்வைக்கு Trash. ஆனால், என் பார்வைக்கு Cash!
இந்த மீன்கழிவுகளிலிருந்து விவசாய நிலத்துக்குப் பயன்படுத்தக்கூடிய இயற்கை உரத்தை நாம் உருவாக்கி, வருமானத்தை ஈட்ட முடியும். இந்த இயற்கை உரம் செயற்கையான யூரியா போன்ற உரங்களைவிடப் பல மடங்கு மேலானது.
மீன்கழிவு இயற்கை உரத்தில் திடம், திரவம் என இரண்டு வகைகள் இருக்கின்றன. இவற்றில், திட வடிவ உரத்துக்குச் செய்முறைகள் குறைவு, அதேநேரம் விலையும் குறைவு. ஆனால், திரவ வடிவத்துக்குச் செய்முறைகள் அதிகம், அதேநேரம் விலையும் அதிகம். உதாரணத்துக்கு, Prominent Vision India என்ற நிறுவனத்தின் திட மீன் உரம் 10 கிலோ 1,000 ரூபாய்க்கு விற்கப்படு கிறது. அதே Liquinox என்ற நிறுவனத்தின் திரவ மீன் உரம் ஒரு லிட்டர் 3,000 ரூபாய் வரை விற்கிறது. எனவே, நாம் உருவாக்கக்கூடிய மீன்கழிவு இயற்கை உரம், திரவ வடிவமாக இருப்பது சிறந்தது.
இப்போது திரவ மீன்கழிவு இயற்கை உரத்துக்குச் சந்தையில் என்ன மதிப்பு இருக்கிறது என்று பார்ப்போம். ஏனென்றால், எது ஒன்றையும் உருவாக்குவது எளிது, அதற்கு விலை வைப்பதும் எளிது. ஆனால், சந்தையில் விற்பதுதான் கடினம். நல்வாய்ப்பாக, உரத்துக்கு 15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நமக்கு உலகச் சந்தை இருக்கிறது. இந்தச் சந்தையில், ஒரு சதவிகிதத்தைக் கைப்பற்றினாலே, 15 ஆயிரம் கோடி அளவுக்கு நாம் தூத்துக்குடி மீன்கழிவு வளத்தைப் பணமாக்கலாம்!
(இன்னும் காண்போம்)