மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 76 - கரூர் - வளமும் வாய்ப்பும்

முருங்கை
பிரீமியம் ஸ்டோரி
News
முருங்கை

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

முருங்கை கேப்சூல்ஸ்... முருங்கை டேப்லெட்ஸ்!

கரூர் மாவட்டத்தின் முதன்மையான வளம் முருங்கை. அதை மதிப்புக்கூட்டி முருங்கை கேப்சூலாக (Moringa Capsules) மாற்றி, விற்பனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் சுமார் 54,000 ஏக்கர் பரப்பளவில் முருங்கை பயிரிடப்படுகிறது. திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், அரியலூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் முருங்கை பயிரிடப்பட்டாலும், அவற்றையெல்லாம்விட, அதிக அளவில் முருங்கை உற்பத்தியில் முன்னால் நிற்பது கரூர் மாவட்டம்தான். அரவக்குறிச்சி, வைரமடை, கோடந்தூர், சின்னதாராபுரம், தென்னிலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7,000 ஏக்கர் பரப்பளவில் முருங்கைச் சாகுபடி நடைபெறுகிறது. முருங்கை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் கரூர், அந்த வளத்தைப் பெரிய அளவில் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இனி வரும் நாள்களில் அது மாற்றப்பட வேண்டும்.

முருங்கை
முருங்கை
முருங்கை
முருங்கை

பனை, தென்னை, வாழை மரங்களின் வரிசையில் முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை. அந்த வகையில் முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் ஒன்றான இலைகள் மற்றும் பிசின் மருத்துவ குணம் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. முருங்கை இலை 21 வகையான அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள், வைட்டமின், மினரல் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துகளைக் கொண்டிருக்கிறது. முருங்கை இலை, உடலில் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு, காசநோய் எதிர்ப்பு மருந்துகளால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பைச் சரிசெய்ய உதவுகிறது என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதைக் கருத்தில்கொண்டு, மருத்துவ குணமிக்க கேப்சூல்களைத் தயாரிக்க வேண்டும். இதற்காக கரூர் மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலையை நிறுவி, அதை சர்வதேச அளவில் சந்தைப்படுத்துவது முக்கியம். அவ்வாறு செய்தால், ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெற முடியும்.

முருங்கை
முருங்கை
முருங்கை
முருங்கை

முருங்கைமுருங்கை எனர்ஜி பார்!

“இதுவரை கண்டறியப்பட்டிருக்கும் அதிக சத்துகள் நிறைந்த தாவரங்களிலேயே முதன்மையானது முருங்கைதான்” என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஊட்டச்சத்துமிக்க முருங்கையை எனர்ஜி பாராக (Energy Bar) மாற்ற வேண்டும். இன்றைய சூழலில் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு நீங்கள் எதைத் தருவதாக இருந்தாலும், அது கவர்ச்சிகரமானதாகவும் விரும்பிப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும். அதுவே ஓர் உணவுப்பொருளாக இருந்தால் அழகிய வண்ணங்களும், சுவையும், மணமும் இருப்பதோடு அது நவீனத்தின் அடையாளங்களைக் கொண்டதாகவும் இருப்பது அவசியம்.

ஊட்டச்சத்துகள் அதிகம் நிரம்பியிருந்தாலும், முருங்கையின் சுவை என்னவோ பெரும்பாலானோருக்குப் பிடித்தமானதாக இருப்பதில்லை. எனவே, அனைவருக்கும் பிடித்த வகையில் அதை எனர்ஜி பாராக மாற்றம் செய்ய வேண்டும். அந்த வகையில் முருங்கை இலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எனர்ஜி பாரில் நிலக்கடலை, முந்திரி, பாதாம் போன்றவற்றையும் சேர்ப்பது நல்லது. இதில் இனிப்புச் சுவைக்காகப் பனை வெல்லம் சேர்த்து, அழகிய வண்ணங்களுடன் டிசைன் செய்யப்பட்ட ரேப்பர் கொண்டதாக இதைத் தயாரிக்க வேண்டும். கண்ணைக் கவரும் வகையில் உருவாக்கும்போது, அது குழந்தைகளையும் இளைஞர்களையும் வெகுவாகக் கவருவதோடு, விற்பனையிலும் சக்கைபோடு போடும். இதற்கான தொழிற்சாலையைக் கரூர் மாவட்டத்தில் உருவாக்க வேண்டும்.

முருங்கை
முருங்கை

அமெரிக்காவைச் சேர்ந்த `குலி குலி ஃபுட்ஸ்’ நிறுவனம் முருங்கை இலையைக் கொண்டு தயாரிக்கும் 45 கிராம்கொண்ட எனர்ஜி பாரை 250 ரூபாய்க்கு வைத்து விற்பனை செய்கிறது. ஆண்டுக்கு முருங்கையிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களின் வழியாக மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது. இந்த நிறுவனத்தின் விற்பனையில் ஏறக்குறைய 5 சதவிகித அளவுக்குக் கைப்பற்றினாலே தோராயமாக ஆண்டொன்றுக்கு 2 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெற முடியும் என்பதால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் (MSME) சேர்ந்தோர் இதைப் பயன்படுத்திக்கொண்டு, கரூர் மாவட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவ முடியும்.

சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

முருங்கை ஃபேஸ் க்ரீம்!

கரூரின் முக்கிய வளமான முருங்கை எண்ணெயைப் பயன்படுத்தி முருங்கை ஃபேஸ் க்ரீம் (Moringa Face Cream) தயாரிக்க வேண்டும். மனித உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சம அளவில் இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்று கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். வாதம் மிகுந்தால் உடல் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கத்தைக் குறைப்பதிலும், தோல் சார்ந்த பிரச்னைகளைச் சரிசெய்ய உதவுவதிலும் முருங்கை எண்ணெய் முக்கியப் பங்காற்றுவதாகச் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் முருங்கை எண்ணெயிலிருந்து ஒரு ஃபேஸ் க்ரீம் பிராண்டை கரூரில் இருக்கும் தொழில்முனைவோர் உருவாக்கலாம்.

முருங்கை விதையில் சுமார் 36 சதவிகித அளவுக்கு எண்ணெய் நிறைந்திருக்கிறது. ‘சால்வென்ட் எக்ஸ்ட்ராக்‌ஷன்’ (Solvent Extraction) எனும் செயல்முறையைப் பயன்படுத்தி, விதையிலிருந்து எண்ணெயைத் தனியாகப் பிரித்தெடுக்கலாம். அவ்வாறு பிரித்தெடுக்கப்படும் முருங்கை எண்ணெயுடன் கற்றாழையைச் சேர்த்து ஃபேஸ் க்ரீம் தயாரிப்பதோடு, ஒரு சர்வதேசத் தரத்துக்குரிய அளவில் ஒரு பிராண்டை உருவாக்கி, அதைப் பிரபலப்படுத்துவதோடு அதற்கான தொழிற்சாலையை இந்த மாவட்டத்தில் நிறுவ வேண்டும். பெண்கள் மட்டுமன்றி, ஆண்களும் ஃபேஸ் க்ரீம் பயன்படுத்துவது அதிகரித்திருப்பதால், இதிலுள்ள மருத்துவக் குணங்களை விளம்பரப்படுத்தி, உள்ளூர் மற்றும் வெளிமாநிலத்திலும் வெளிநாடுகளிலும் விற்பனையை அதிகரிக்கலாம்.

கரூர் மாவட்டத்தில் சுமார் 7,300 ஏக்கர் பரப்பளவில் முருங்கை பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு 500 கிலோ வீதம், ஆண்டொன்றுக்குச் சுமார் 3,700 டன் விளைச்சல் கிடைக்கிறது. மொத்த விளைச்சலிலிருந்து சுமார் 5 சதவிகிதத்தை (அதாவது 180 டன்) மட்டும் முருங்கை எண்ணெய் தயாரிக்க எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ முருங்கை விதையிலிருந்து 0.367 கிலோ அளவுக்கு முருங்கை எண்ணெய் கிடைக்கும். இந்த அளவுகோலின்படி, ஏறக்குறைய 180 டன் முருங்கை விதையிலிருந்து தோராயமாக 70 டன் அளவுக்கு முருங்கை விதை எண்ணெய் கிடைக்கும். ஒரு ஃபேஸ் க்ரீம் டியூப் தயாரிக்க 30 கிராம் முருங்கை எண்ணெய் தேவைப்படுகிறது. அந்த வகையில் ஆண்டொன்றுக்குச் சுமார் 23 லட்சம் ஃபேஸ் க்ரீம் டியூபுகள் தயாரிக்க முடியும். 50 கிராம்கொண்ட ஒரு முருங்கை எண்ணெய் ஃபேஸ் க்ரீம் டியூபின் விலையை 450 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தால், ஆண்டுக்குச் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுவதோடு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளைப் பல நூறு பேருக்கு உருவாக்க இயலும். இதனால் கரூர் மாவட்ட மக்களின் பொருளாதாரம் உயரும். வாழ்க்கைத்தரம் மேம்படும்.

(இன்னும் காண்போம்)