மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 77 - கரூர் - வளமும் வாய்ப்பும்

செவ்வாழை
பிரீமியம் ஸ்டோரி
News
செவ்வாழை

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

முருங்கை சேமியா அண்ட் நூடுல்ஸ்!

முருங்கை விதையிலிருந்து முருங்கை சேமியா அண்ட் நூடுல்ஸ் (Moringa Semiya and Noodles) தயாரிக்கலாம். இன்றைக்கு உப்புமாவைப் பிடிக்காதவர்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால், நூடுல்ஸை விரும்பாதவர்கள் மிகக் குறைவே!

குழந்தைகளை மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திழுப்பதில் நூடுல்ஸ் முன்னணியில் இருக்கிறது. சமைக்க மிக மிக எளிமையாக இருப்பதும் இதைப் பெரும்பாலானோர் உண்பதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. சந்தையில் 400 கிராம்கொண்ட சாதாரண நூடுல்ஸ் 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெவ்வேறு பிராண்டுகளில், மாறுபட்ட பல சுவைகளில் நூடுல்ஸ் கிடைத்தாலும் அவற்றில் சத்தான நூடுல்ஸின் எண்ணிக்கை மிகக் குறைவே. அந்த வெற்றிடத்தை இனி முருங்கை நூடுல்ஸைக்கொண்டு நிரப்புவதோடு, சேமியாவாகவும் தரலாம்.

உலர் செவ்வாழை
உலர் செவ்வாழை

முருங்கை விதையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மட்டுமின்றி துத்தநாகம், வைட்டமின் ஏ மற்றும் சி, பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட சத்துகள் அடங்கியிருப்பதால், இந்த நூடுல்ஸ் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. புற்றுநோயைத் தடுக்கும் வல்லமைகொண்டது. தூக்கமின்மை, மூட்டுவலி, தசைப்பிடிப்பு உள்ளிட்ட பிரச்னைகளையும் சரிசெய்வதால், பெண்களும் முதியோரும் விரும்பி உண்ணும் வகையில் விளம்பரப்படுத்துவதோடு, இதற்கெனத் தனி பிராண்ட் ஒன்றையும் உருவாக்குவது அவசியம். இன்ஸ்டன்ட்டாகப் பயன்படுத்தும் வகையில் இதைப் பல்வேறு சுவைகளிலும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். இதற்கான ஒரு தொழிற்சாலையை கரூர் மாவட்டத்தில் உருவாக்க வேண்டும்.

உலர் செவ்வாழை!

கரூர் மாவட்டத்தின் முக்கிய வளங்களில் ஒன்றான செவ்வாழையை மதிப்புக்கூட்டி உலர் செவ்வாழை (Dried Red Banana) தயாரிக்க வேண்டும். வாழைப்பழங்களில் பல ரகங்கள் உண்டு. அவற்றில் பெரும்பாலானோரை எளிதில் கவர்வது செவ்வாழை. கார்ப்ஸ், புரோட்டீன், கொழுப்பு, ஃபைபர், வைட்டமின் சி உள்ளிட்ட ஏராளமான சத்துகளைக்கொண்டிருப்பதால், இதை உண்டு மகிழ, பலரும் விரும்புகிறார்கள். பழமாகச் சாப்பிடுவதைப்போல, அதை உலரவைத்து உண்ணும்போது, இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். (உதாரணத்துக்கு, திராட்சையைப் பழமாகச் சாப்பிடும்போது இருக்கும் சுவையைவிட உலர் திராட்சையின் சுவை கூடுதலாக இருப்பதுபோல) சந்தையில் உலரவைக்கப்பட்ட செவ்வாழைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

செவ்வாழை
செவ்வாழை
கரூர்
கரூர்

பொதுவாக, செவ்வாழை சீக்கிரமே அழுகிப்போய்விடும் என்பதால் அதற்கு ஷெல்ஃப் லைப் (Shelf Life) மிகவும் குறைவு. ஆனால், அதை உலரவைக்கும்போது எடை குறைந்து நீண்ட நாள்களுக்கு அழுகிப்போகாமல் இருப்பதால், கூடுதல் பலன்கள் கிடைக்கும். உதாரணத்துக்கு, செவ்வாழை அதிக அளவில் உற்பத்தியாகும்போது அவ்வளவு பழங்களையும் சந்தையில் விற்பனை செய்ய முடியாது. அந்த மாதிரியான சமயங்களில் உலர் வாழையாக மாற்றிவிடும்போது, பெரும் பொருளாதார இழப்பைத் தவிர்த்துவிடலாம். செவ்வாழை சீஸன் இல்லாத நேரங்களில் உலர் செவ்வாழை கைகொடுத்து உதவும். அதேபோல, உலரவைக்கும்போது செவ்வாழையின் எடையும் குறைந்துவிடுவதால் ஏற்றுமதியின்போது போக்குவரத்துச் செலவு பெருமளவு மிச்சமாகும். இவ்வளவு பலன்களைக் கொண்டிருக்கும் உலர் செவ்வாழையைப் பயன்படுத்திக்கொண்டு கரூர் மாவட்டத்தில் ஓர் உலர் செவ்வாழை உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்கி, அதை பிராண்ட் செய்து உள்ளுர் மற்றும் வெளிச்சந்தைகளில் விற்பனைக்கு வைக்க வேண்டும்.

கரும்பு
கரும்பு
உலர் செவ்வாழை
உலர் செவ்வாழை
கரூர்
கரூர்

கரூர் மாவட்டத்தில் சுமார் 12,500 ஏக்கர் பரப்பளவில் செவ்வாழை பயிரிடப்படப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 11 டன் அளவுக்கு விளைச்சலாகிறது. ஆண்டொன்றுக்கு தோராயமாக ஒரு லட்சம் டன் அளவுக்கு உற்பத்தியாகும் செவ்வாழையிலிருந்து ஏறக்குறைய 5 சதவிகிதம் அளவுக்கு எடுத்துக்கொண்டு உலர் செவ்வாழை தயாரிக்க வேண்டும். இதன் செயல்முறை எளிதானது. வட்ட வடிவத்தில் நறுக்கப்படும் செவ்வாழைப் பழத்தைத் தேனில் ஊறவைத்து, பின் உலர்த்த வேண்டும். உலர்த்தப்பட்ட வாழைப்பழத் துண்டுகளைப் பதப்படுத்தி, அழகிய பேக்குகளில் அடைத்து, விற்பனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். பொதுவாக ஒரு செவ்வாழைப்பழத்தில் 75 சதவிகிதம் அளவுக்கு நீர் நிறைந்திருக்கும். அதன்படி ஒரு கிலோ செவ்வாழையைக் காயவைத்தால் 250 கிராம் அளவுக்கு உலர் செவ்வாழை கிடைக்கும். இந்தக் கணக்கீட்டின்படி, ஆண்டொன்றுக்கு 5,000 டன் செவ்வாழையிலிருந்து சுமார் 1,200 டன் உலர் செவ்வாழை கிடைக்கும். சந்தையில் ஒரு கிலோ உலர் செவ்வாழைப் பழத்தை 600 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தால், ஆண்டுக்கு சுமார் 80 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெற முடியும். நேரடியாகவும் மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, கரூர் மாவட்ட மக்களின் பொருளாதாரமும் உயரும்.

சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர் 
கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் கனவு தமிழ்நாடு

மீத்தைல் லெவ்யுவனேட்!

போக்குவரத்து, மருத்துவம், உணவுப் பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு கனிமப்பொருள் மீத்தைல் லெவ்யுவனேட் (Methyl Levulinate). சந்தையில் ஒரு கிலோ மீத்தைல் லெவ்யுவனேட் 1,30,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது பெரும்பாலும் லெவ்யுவனிக் (Levulinic) அமிலம் எனும் மூலப்பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சந்தையில் இந்த அமிலம் கிலோ 500 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதற்கு பதிலாக, கரூரின் முக்கிய வளமான கரும்பிலிருந்து பெறப்படும் சக்கையைப் பயன்படுத்தி, மீத்தைல் லெவ்யுவனேட்டைத் தயாரிக்க முடியும். அது மட்டுமல்ல, ஒரு கிலோ கரும்புச் சக்கையின் அதிகபட்ச விலையே 3 ரூபாய்தான்.

இதனால் கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கப்படும் மீத்தைல் லெவ்யுவனேட்டுக்குச் சந்தை வாய்ப்பு உருவாகும். இதைப் பயன்படுத்திக்கொண்டு, இதற்கான தொழிற்சாலையை கரூரில் நிறுவ வேண்டும். பொதுவாக கரும்புச் சக்கை செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், லிக்னின் உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்கும். இதிலிருந்து செல்லுலோஸை மட்டும் எடுத்துக்கொண்டு, அதிலிருந்து கனிமப் பொருளான ‘மீத்தைல் லெவ்யுவனேட்’ தயாரிக்க வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் சுமார் 18,000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு 70 டன் வீதம் ஆண்டொன்றுக்கு 12 லட்சம் டன் கரும்பு விளைச்சல் கிடைக்கிறது. தோராயமாக ஒரு டன் கரும்பிலிருந்து 250 கிலோ சக்கை வீதம் ஆண்டுக்கு ஏறக்குறைய 3,00,000 டன் சக்கை கிடைக்கும். இதிலிருந்து ஒரு சதவிகிதமான 3,000 டன் கரும்புச் சக்கையை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு டன் சக்கையிலிருந்து சுமார் 50 கிலோ அளவுக்கு மீத்தைல் லெவ்யுவனேட் தயாரிக்க முடியும். அந்த வகையில் ஆண்டுக்குப் பல கோடிகளில் வருமானம் பெற முடியும். இதனால், நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். கரூர் மாவட்ட மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைந்து, வாழ்க்கைத்தரம் உயரும்!

(இன்னும் காண்போம்)