
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!
சுற்றுலா
தஞ்சையில் இரு வகையான சுற்றுலா வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, நவகிரகங்களை வழிபடும் வகையிலான நவகிரகச் சுற்றுலா, மற்றொன்று வரலாற்று நினைவுச்சின்னங்களைப் பார்வையிடும் வரலாற்றுச் சுற்றுலா.
இரண்டையும் விரிவாகப் பார்க்கலாம்!
வரலாற்றுச் சுற்றுலா...
தஞ்சாவூர் அரண்மனை: சுமார் 400 ஆண்டு களுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டது, தஞ்சை அரண்மனை. இதில் அரண்மனை நுழைவாயில், தர்பார் மண்டபம், மணி மண்டபம், அரண்மனை வளாகம், சரஸ்வதி மகால் நூலகம் போன்றவை இருக்கின்றன. ஆரம்பத்தில் தஞ்சை, மராட்டிய அரசிடம் இருந்தபோது மராட்டிய கட்டடக்கலை நுட்பத்தைக்கொண்டு சில பகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டடக்கலையின் தொழில்நுட்பங்களைக்கொண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது இதன் சிறப்பு. இந்த அரண்மனையின் முதல் தளத்தில் அமைந்திருக்கிறது சரஸ்வதி மகால் நூலகம். தென்னிந்தியாவின் ஒலியியல் நுட்பங்களுடன் அமைக்கப்பட்ட இசைக்கூடமாக விளங்குகிறது சங்கீத மகால். சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட இது, 17-ம் நுற்றாண்டைச் சேர்ந்தது.

மேலும், தஞ்சை பெரிய கோயில், ராஜராஜ சோழனின் மணிமண்டபம், திருவையாறில் அமைந்திருக்கும் தியாகராஜர் ஜீவசமாதி, ராணி மண்டபம், தென்மண்டல கலாசார மையம், மனோரா கோட்டை, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், பீரங்கி மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கும் சுற்றுலாப்பயணிகள் எளிதாகச் செல்லும் வகையில், சுற்றுலா வரைபடம் ஒன்றை உருவாக்கி, அதைப் பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் காட்சிப்படுத்த வேண்டும். இதனால், எளிதில் பயணிகள் அதிக இடங்களைப் பார்வையிட முடிவதோடு, அதனால் அந்நியச் செலாவணியும் அதிகரித்து, தஞ்சையின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
நவகிரகச் சுற்றுலா வரைபடம்!
இந்து மதம் சார்ந்து, சுற்றுலா செல்வோர் தவறவிடக் கூடாத இடங்களில் தஞ்சையும் ஒன்று. பெரும்பாலான நவகிரகக் கோயில்கள் தஞ்சாவூரிலும், இதர கோயில்கள் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூரிலும் அமைந்திருக்கின்றன. இந்த ஒன்பது கோயில்களையும் தஞ்சையை மையமாகக்கொண்டு இரண்டு நாள்களில் வழிபட்டு வரலாம். குறைந்தபட்சம் 2 கிலோமீட்டரிலிருந்து அதிகபட்சமாக 100 கி.மீ தொலைவுக்குள் அனைத்துக் கோயில்களும் அடங்கியிருப்பதால், பயணத்திட்ட வரைபடம் ஒன்றை உருவாக்கி, அதைக் குறிப்பிட்ட இடங்களில் பயணிகளின் பார்வையில்படும்படி காட்சிப்படுத்தவேண்டியது அவசியம்.

சூரியனார் (சூரியன்) : தஞ்சாவூர் மாவட்டத்தில் சூரியனார் கோயில் எனும் ஊரில் அமைந்திருக்கிறது சூரியனுக்குரிய கோயில். இந்தியாவில் மூன்று இடங்களில் மட்டுமே சூரியனுக்குக் கோயில்கள் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் இரண்டு தமிழ்நாட்டில் இருந்தன. ஒன்று, பூம்புகார். மற்றொன்று தஞ்சை. பூம்புகாரில் `உச்சிக்கிழான் கோட்டம்’ எனும் பெயரில் இருந்த கோயில், கடல்கோள்களில் மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது. தற்போது ஒடிசாவின் கொனார்க், தஞ்சை சூரியனார் கோயில் ஆகிய இடங்களில் மட்டுமே சூரியனுக்குக் கோயில் இருக்கிறது. ஒடிசாவில் உருவ வழிபாடு இல்லை என்பதும், தஞ்சையில் உருவ வழிபாடு உண்டு என்பதும் கூடுதல் சிறப்பு. இது தஞ்சையிலிருந்து சுமார் 54 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
கைலாசநாதர் (சந்திரன்): திங்களூரில் அமைந்திருக்கிறது சந்திரனுக்குரிய கைலாசநாதர் கோயில். தமிழ்நாட்டிலுள்ள கோயில்களிலேயே அன்னபிரசானத்துக்குப் புகழ்பெற்றது. `அன்னபிரசானம்’ என்பது குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுவதைக் குறிக்கும். இது, திருவையாறிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. தஞ்சையிலிருந்து ஏறக்குறைய 5.6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
வைத்தியநாதர் (செவ்வாய்): வைத்தீஸ்வரன் கோயில் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது செவ்வாய்க்குரிய தலமான வைத்தியநாதர் கோயில். பல மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்குக் குலதெய்வமாக விளங்கும் வைத்தீஸ்வரன் கோயில், செவ்வாய் கிரகத்துக்குப் பெயர்பெற்ற தலம். செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணம் உள்ளிட்ட தடைகளைக் களைய, இங்கே சென்று வழிபாடு செய்யும் நம்பிக்கை மக்களிடம் வலுவாக இருப்பதால் புகழ்பெற்ற தலமாகவும் விளங்குகிறது. தஞ்சையிலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்திருக்கிறது.

சுவேதாரண்யேஸ்வரர் (புதன்): மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவெண்காடு எனும் ஊரில் அமைந்திருக்கிறது புதனுக்குரிய தலமான சுவேதாரண்யேஸ்வரர் கோயில். துறவு வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கும் பலரும் செல்லும் இடமாகக் கருதப்படுவது காசி. காசிக்குச் சமமான ஆறு தலங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில். தஞ்சையிலிருந்து 99 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இது, 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
பத்சகாயேஸ்வரர் (குரு): திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலங்குடியில் அமைந்திருக்கிறது குருவுக்குரிய தலமான ஆபத்சகாயேஸ்வரர் கோயில். மாதா, பிதா, குரு தெய்வம் என்பது தொன்மையான பழமொழி. அதற்கேற்ப இந்தக் கோயிலில் முதலில் அம்மன், பின்னர் சுவாமி, அதைத் தொடர்ந்து குரு என அமையப்பெற்றிருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தில் ஐந்து ராஜகோபுரங்கள் உள்ளன.
அக்னீஸ்வரர் (சுக்கிரன்): கஞ்சனூரில் அமையப்பெற்றிருக்கிறது சுக்கிரனுக்கு உரிய தலமான அக்னீஸ்வரர் கோயில். மிகச்சிறந்த சிவபக்தரான சுக்கிரன், உயிர்நீங்கியோரைப் பிழைக்கச் செய்யும் அமிர்தசஞ்சீவி மந்திரத்தைக் கற்றுத் தேர்ந்தவர். `அசுரர்களின் குரு’ என்று அழைக்கப்படுபவர். இங்கே வந்து இவரை தரிசித்தால் உடல், மனநோய் நீங்கும் என்பது நம்பிக்கை. சூரியனார் கோயிலிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சையிலிருந்து ஏறக்குறைய 36 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது.

தர்ப்பாரண்யேஸ்வரர் (சனி): ஒருவர் அதிகமான துன்பங்களை எதிர்கொள்ளும்போது, ஒரு முறை திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை வணங்கி வந்தால், துன்பங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம். உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற இந்தத் திருத்தலம், திருநள்ளாறு எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்திருக்கிறது.

நாகேஸ்வரர் (ராகு): ராகு தோஷப் பரிகாரத் தலம். நாக தோஷம் இருப்பவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து பாலாபிகேஷம் செய்து, நாகேஸ்வரரை வணங்கினால் தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. திருநாகேஸ்வரம் எனும் இடத்தில் ராகுக்குரிய தலமாக விளங்கும் இது, தஞ்சாவூரிலிருந்து சுமார் 43 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
நாகநாதர் (கேது): நவக்கிரகங்களில் கேதுவுக்கு உரிய இந்தத் தலம், மயிலாடுதுறை மாவட்டம், கீழ்ப்பெரும்பள்ளம் எனும் ஊரில், தஞ்சையிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

பொருளாதாரத் தாக்கம்
உலக நாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து தஞ்சாவூருக்கு ஆண்டுதோறும் வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 2 கோடி. இவர்களிலிருந்து 5 சதவிகித சுற்றுலாப் பயணிகளை இந்த இருவித சுற்றுலாக்களில் முழுமையாகப் பங்கேற்கச் செய்தாலே ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம்.
(இன்னும் காண்போம்)
அடுத்த கனவு தென்காசி!