
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!
சைல்டுகேர் டூத்பேஸ்ட்!
இன்றைய குழந்தைகள் பலருக்குப் பற்கள் சார்ந்த பிரச்னை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, இனிப்புகள் நிறைந்த உணவுகளை விரும்பி உண்ணும் குழந்தைகளுக்கு பற்சிதைவு, பற்கூச்சம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றுக்குத் தீர்வாகக் கோரைப்புல், முட்டை ஓடு இரண்டையும் சேர்த்து ஒரு சைல்டுகேர் டூத்பேஸ்ட்டை (ChildCare Toothpaste) தயாரிக்கலாம்!
தென்காசி மாவட்டத்தில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் கோரைப்புல் விளைகிறது. இது பற்களில் துவாரங்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. அதேபோல, ஒரு அரை மூடி முட்டை ஓட்டில் தோராயமாக 1,000 மில்லிகிராம் கால்சியம் மட்டுமின்றி புரோட்டீன், ஃபுளோரைடு, மக்னீசியம், செலினியம் போன்ற மைக்ரோ ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக் கின்றன. பொதுவாக கால்சியம், பற்களிலுள்ள ஈறுகளை வலுவடையச் செய்து, பற்களிலுள்ள எனாமல் தேயாமல் பாதுகாப்பதோடு, பல் சொத்தை ஏற்படாமலும் தடுக்கிறது என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சைல்டுகேர் டூத்பேஸ்ட்டில் முட்டை ஓட்டை அதிகமாகவும், கோரைப்புல்லைக் குறைவாகவும் சேர்த்து உருவாக்க வேண்டும். முட்டை ஓட்டுக்கான தேவையை மயோனைஸ் (Mayonnaise) தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து சேகரித்துக்கொள்ளலாம். மயோனைஸ் தயாரிப்பின்போது முட்டையைப் பயன்படுத்திவிட்டு, அதன் காலியான ஓடு பெரும்பாலும் கழிவாகவே கொட்டப்படுகிறது. கூடுதலாக, நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி அதிகம். நாளொன்றுக்குச் சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இங்கே உற்பத்தியாகும் முட்டைகளில் விற்பனையாகாமல் தேங்குகிறவற்றையும், உடையும் முட்டைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். சந்தையில் தற்போது பல்வேறு வகையான டூத்பேஸ்ட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வரிசையில் குழந்தைகளுக்கான பிரத்யேக டூத்பேஸ்ட்டாக இதை பிராண்ட் செய்து, விளம்பரப்படுத்த வேண்டும்.
மார்க்கெட்டில் 100 கிராம் கொண்ட டூத் பேஸ்ட், சுமார் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் சிறப்பாக இருக்கும். இதைப் பயன்படுத்திக்கொண்டு தென்காசி மாவட்டத்தில் இதற்கான தொழிற்சாலையை நிறுவலாம். இங்கே உற்பத்தியாகும் சைல்டுகேர் டூத்பேஸ்ட்டை வெளிமாநிலங்களுக்கும், உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும்போது பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம்.
சுடுமண் மணி!
தென்காசி மாவட்டத்திலுள்ள தேன்பொத்தை எனும் கிராமத்தில், மண்பாண்டக் கலைஞர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். இவர்கள் தயாரிக்கும் மண்பாண்டங்களுக்குச் சந்தையில் தேவை மிகக் குறைவாகவே இருப்பதால், மிகக் குறைந்த வருமானத்தையே பெறுகின்றனர். இதே மண்பாண்டக் கலைஞர்கள் கொஞ்சம் கிரியேட்டிவாக யோசித்து, களிமண்ணைப் பயன்படுத்தி, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண் மணிகளைத் தயாரித்தால், பொருளாதாரரீதியாக மேம்பாடு அடையலாம்.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனேவில் களிமண்ணைக்கொண்டு சுடுமண் மணிகள் தயாரித்து, உலக அளவில் ஏற்றுமதி செய்து, நல்ல லாபம் பார்த்துவருகின்றனர். இதைப் பின்பற்றி, மண்பாண்டங்களோடு சேர்த்து சுடுமண் மணிகளையும் உருவாக்க வேண்டும். வழக்கமாக, ஒரு பானை தயாரிக்கச் சுமார் ஒரு வாரம் வரை தேவைப்படுகிறது. அதே கால அளவில் சுடுமண் மணிகளையும் தயாரிக்கலாம். அதுமட்டுமின்றி, ஒரு பானையைத் தயாரிக்கும்போது சந்தையில் அதன் விலை தோராயமாக 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், மணியைத் தயாரித்தால் அதைவிடப் பல மடங்கு வருமானம் பெறலாம். அந்த வகையில், நாளொன்றுக்கு மூன்று பேர்கொண்ட குழு 20-லிருந்து 30 சுடுமண் மணிகள் வரை தயாரிக்கலாம். ஆண்டுக்குச் சுமார் 7,800 மணிகளை உற்பத்தி செய்ய முடியும். சந்தையில் ஒரு மணியின் விலை அதன் அளவைப் பொறுத்து சுமார் 1,000 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

மண்பாண்டக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் தென்காசியில் செயல்பட்டுவந்த மண்பாண்ட உற்பத்தியாளர் சங்கம், தற்போது செயல்பாடின்றி வெறும் கட்டடமாக மட்டுமே எஞ்சி நிற்கிறது. அதற்குப் புத்துயிரூட்டி, மீண்டும் செயல்படவைக்கலாம். அதன் வழியே மணிகளை உள்ளுரிலும் வெளிமாநிலங்களிலும் விற்கலாம். அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறுவதோடு, தென்காசி மாவட்டத்தின் பொருளாதாரத்தையும் உயர்த்தலாம்.
சுற்றுலா!
`குற்றாலம்’ என்ற பெயரைக் கேட்டாலே அருவிகளின் சத்தம் காதில் ஒலிக்கும். அந்த அளவுக்கு தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா வுக்குப் பெயர்பெற்றது குற்றாலம் பேரருவி. இந்த அருவியை அறிந்த அளவுக்கு அதையொட்டிய சுமார் 10 அருவிகள் உள்ளூர் மக்களைத் தவிர்த்து, பெரும்பாலானோருக்குத் தெரிவ தில்லை. குறிப்பிட்ட சில அருவிகளைக் காண வனத்துறையின் அனுமதியும், சில அருவிகளுக்குத் தடையும் இருப்பதால் அனைத்து அருவிகளையும் எளிதாகச் சென்று, அதன் அனுபவத்தைப் பெற முடிவதில்லை.
மேலும், இத்தகைய அருவிகளைக் காணச் செல்வோர் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிப்பதாலேயே கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டிருப்பதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதையெல்லாம் கவனத்தில்கொண்டு சுற்றுச்சூழலுக்கும், அங்கு வாழும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணம் தென்காசியில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.

பேரருவி: சுமார் 228 அடி உயரம்கொண்ட இது, எல்லோருக்கும் அறிமுகமான குற்றாலத்தின் பிரதான அருவி.
சிற்றருவி: பெரிய அருவியிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்திருக்கிறது.
ஐந்தருவி: 40 அடி உயரம்கொண்ட இது, ஐந்து கிளைகளாகப் பிரிந்திருப்பதால் இந்தப் பெயரைக் கொண்டிருக்கிறது. இரு அருவிகளில் குழந்தைகளும் பெண்களும், மற்ற மூன்று அருவிகளில் ஆண்கள் குளிக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
பழத்தோட்ட அருவி: ஐந்தருவிக்கு மேலே வனத்துக்குள் அமைந்திருக்கும் இந்த அருவியைக் காண, சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
செண்பகாதேவி அருவி: பேரருவியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த அருவி, செண்பகாதேவி கோயில் அருகில் ஆர்ப்பரித்துப் பாய்கிறது.
தேனருவி: செண்பகாதேவி அருவியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் வனத்துக்குள் அமைந்திருக்கும் இந்த அருவியைச் சுற்றி மலைத் தேன்கூடுகள் அதிக அளவில் இருப்பதால் இந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது. இங்கே சுற்றுலாப்பயணிகள் செல்ல, வனத்துறை தடை விதித்திருக்கிறது.
புலியருவி: குற்றாலத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த அருவி, குழந்தைகள் குளிக்கப் பாதுகாப்பான அருவியாகக் கருதப்படுகிறது.
பழைய குற்றால அருவி: குற்றாலத்திலிருந்து தோராயமாக 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
கண்ணுபுளி மெட்டு அருவி: செங்கோட்டை யிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குண்டாறு நீர்த்தேக்கத்தில், அதன் மேற்பகுதியில் அமைந்திருக்கிறது. இதைக் காண வனத்துறையின் அனுமதி தேவையில்லை.
எருமைச்சாவடி அருவி: அடவி நயினார் அணைக்கு அருகிலுள்ள மேக்கரையிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநில எல்லையில் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது.
தலையணை தீர்த்தப்பாறை அருவி: கேரள மாநில எல்லையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த அருவிக்குச் செல்ல வனத்துறையின் அனுமதி தேவை.
வழக்கமாக, ஆண்டின் மே, ஜூன், ஜூலை உள்ளிட்ட மூன்று மாதங்களுக்கு மட்டுமே அருவியில் சீஸன் இருக்கும். ஆனால், ஆண்டின் பெரும்பாலான மாதங்களிலும் சீஸனை உருவாக்க வேண்டுமெனில் சீஸனின்போது ஆர்ப்பரித்து வரும் தண்ணீரைத் தேக்கி, அதற்கான அணைகளை உருவாக்கினாலே போதும். அருவிகளின் ஆராவாரத்தை ஆண்டு முழுவதும் கேட்டு, குளித்து, ஆனந்தமடையலாம். இதனால், சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு அதன் வழியே தென்காசி மாவட்டத்தின் பொருளாதாரத்தை உயர்த்தலாம்!
அட்வென்ச்சர் ட்ரெக்கிங்!
தென்காசி மாவட்டத்திலுள்ள அருவிகளில் சில மக்கள் வாழும் பகுதியை ஒட்டியும், பல அடர்ந்த வனப்பகுதிகளுக்குள்ளும் அமைந்திருக்கின்றன. வனப்பகுதிக்குள் இருக்கும் அருவிகள் பாதுகாக்கப்படும் வனப்பகுதிக்குள் இருந்தாலும், உயிர்க்கொல்லி வன விலங்குகள் அங்கு இல்லை என்பதால், அதை அட்வென்ச்சர் ட்ரெக்கிங் (Adventure Trekking) ஸ்பாட்டாக மாற்றியமைக்கலாம்.
சாகசப் பயணத்துக்கு ஏற்றவாறு, ஆறு அருவிகளை இரண்டு அருவிகள் வீதம் மூன்று வழித்தடங்களாக அமைக்க வேண்டும். முதலாம் வழித்தடத்தை குற்றாலத்திலுள்ள ஐந்தருவிக்கும், பழத்தோட்ட அருவிக்குமிடையில் நிறுவலாம். இந்த இரு அருவிகளுக்கு இடையேயான தொலைவு சுமார் 500 மீட்டராக இருக்கிறது. இரண்டாவது வழித்தடத்தை செண்பகாதேவி அருவிக்கும், தேனருவிக்குமிடையே அமைக்கலாம். இதற்கிடையிலான தொலைவு தோராயமாக 3 கிலோமீட்டர். மூன்றாவது வழித்தடத்தை கண்ணுபுளி மேட்டு அருவிக்கும், தீர்த்தப்பாறை அருவிக்குமிடையே உருவாக்கலாம். இதற்கான இடைப்பட்ட தூரம் ஏறக்குறைய 2 கிலோமீட்டர்.

தேனி மாவட்டத்திலுள்ள கொழுக்கு மலையில் சுற்றுலாப்பயணிகளின் மலையேற்றத்துக்குச் சில தனியார் அமைப்புகள் உதவுகின்றன. அதாவது, ஜீப்பில் பயணிகளை ஏற்றிச் சென்று, ஓர் இரவு அந்த மலையில் கூடாரம் அமைத்துத் தங்கி, கொழுக்கு மலையில் சூரிய உதயத்தைக் காண ஏற்பாடு செய்கின்றன. அதே போன்றதொரு சேவையை இங்கே தரலாம். மக்கள் வாழும் பகுதி, வனப்பகுதி ஆகிய இரண்டிலுமுள்ள அருவிகளைக் காணும் வகையில் பாதுகாப்பான சாகசப் பயண வழித்தடத்தை நிறுவுவதோடு, இரவு அங்கேயே தங்கியிருந்து இயற்கையின் அனுபவத்தை அளிப்பதோடு, வனத்துறையின் அனுமதி பெற்ற இடங்களில் கூடாரங்கள் அமைக்கவும் வழிவகை செய்துகொடுக்கலாம்.
இவ்வாறு சைல்டுகேர் டூத்பேஸ்ட், சுடுமண் மணி, சுற்றுலா ஆகியவற்றின் வழியே தென்காசி மாவட்டத்தின் பொருளாதாரத்தை உயர்த்தலாம்!
(இன்னும் காண்போம்)
அடுத்த கனவு - நாமக்கல்