மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 86 - நாமக்கல் - வளமும் வாய்ப்பும்

பெப்பர் ஓலியோரெசின்
பிரீமியம் ஸ்டோரி
News
பெப்பர் ஓலியோரெசின்

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

“சமுதாயக் கொடுமைகள்போல, மக்களின் பொருளாதாரக் கொடுமைகளையும் தீர்க்க வேண்டும்” என்கிறார் பெரியார். சமுதாயக் கொடுமைகளைத் தீர்க்க வேண்டுமானால், மனிதர்களிடம் பகுத்தறிவைப் புகுத்த வேண்டும். பொருளாதாரக் கொடுமைகளைத் தீர்க்க வேண்டுமானால், நிறைய தொழில்முனைவோரை ஊக்குவித்து, ஏராளமான பிராண்டுகளை உருவாக்கினாலே போதும். இதுவரை கள ஆய்வு செய்த 19 மாவட்டங்களில் உங்களிடம் தொடர்ந்து சொல்லிவருவது இதைத்தான். மீண்டும் நினைவூட்டுகிறேன். `ஒரு பிராண்டை உருவாக்குங்கள்’ (Create a Brand). ஒவ்வொரு மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டின் ஒரு ட்ரில்லியன் டாலர் கனவை எட்டுவதற்கும் அதுதான் ஒரே தீர்வு!

சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர் , கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் , கனவு தமிழ்நாடு

பெப்பர் ஓலியோரெசின் (Pepper Oleoresin)

மாடர்ன், துரித உணவகங்களில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, செயற்கையான சுவையூட்டிகளும் நிறமூட்டிகளும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் உடலுக்கு உகந்தவை அல்ல என்கின்றனர் மருத்துவர்கள். ஆகவே, உணவுப்பொருள்களின் சுவையை அதிகரிக்கவும், அவற்றின் நிறத்தைக் கூட்டவும் மிளகைப் பயன்படுத்தி, பெப்பர் ஓலியோரெசின் (Pepper Oleoresin) தயாரிக்கலாம். உதாரணமாக, அசைவ உணவகங்களில் பரிமாறப்படும் சிக்கன், மட்டன், மீன் வகைகளில் இதைப் பயன்படுத்தலாம்.

பெப்பர் ஓலியோரெசின்
பெப்பர் ஓலியோரெசின்

ஓலியோரெசின் என்பது மிளகிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயே. சுத்தமானதும், நீண்டநாள் கெடாததுமான இந்த ஓலியோரெசின் சேமித்துவைக்கவும், நீண்ட தூரத்துக்கு எடுத்துச் செல்லவும் ஏற்றது. ‘சால்வென்ட் எக்ஸ்ட்ராக்‌ஷன் (Solvent Extraction)’ என்ற முறையைப் பயன்படுத்தி மிளகிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக் கிறார்கள். இது எளிதான செயல்முறையாகக் கருதப்படுகிறது. இந்த மிளகு எண்ணெயிலிருந்து ‘ஸ்டீம் டிஸ்டில்லேஷன்’ (Steam Distillation) மூலமாக ஓலியோரெசின் பெறப்படுகிறது. உணவுப்பொருள்களில் மட்டுமல்ல, மருந்துகள் தயாரிப்பு, கேசப் பராமரிப்பு உள்ளிட்டவற்றிலும் இதன் தேவை அதிகரித்துவருவதால் இதற்கான ஒரு பிராண்டை உருவாக்கி, அதற்கான தொழிற்சாலையை நாமக்கல் மாவட்டத்தில் நிறுவலாம்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலை, தேவனூர்நாடு, எடப்புலிநாடு, அரியூர்நாடு, திருப்புலிநாடு, பேரக்கரைநாடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் மிளகு பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 1,000 கிலோவீதம் ஆண்டொன்றுக்குத் தோராயமாக 20 லட்சம் கிலோ விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து ஏறக்குறைய 5 சதவிகிதத்தை எடுத்துக்கொண்டால் ஒரு லட்சம் கிலோ அளவுக்குக் கிடைக்கும்.

கனவு - 86 - நாமக்கல் - வளமும் வாய்ப்பும்

ஒரு கிலோ மிளகுடன் 5 லிட்டர் எத்தனால் சேர்த்து ஓலியோரெசின் தயாரிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது 3.5 கிலோ ஓலியோரெசின் கிடைக்கும். இந்தக் கணக்கீட்டின்படி ஒரு லட்சம் கிலோ மிளகுடன் 5 லட்சம் லிட்டர் எத்தனால் சேர்த்து, தயாரிக்கும்போது 3.5 லட்சம் கிலோ ஓலியோரெசின் கிடைக்கும். சந்தையில் ஒரு கிலோ பெப்பர் ஓலியோரெசினின் விலையை 5,550 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 200 கோடி அளவுக்கு வருமானம் பெறலாம்!

பைப்ரின் சப்ளிமென்ட்ஸ் (Piperine Supplements)

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்ததை ‘திரிகடுகம்’ என்று சித்த மருத்துவத்தில் கூறுகிறார்கள். இந்தப் பொருள்களில் பைப்ரின் (Piperine), லாங்குமின் (Longumin) போன்ற மருத்துவ குணம் மிக்க வேதிப்பொருள்கள் நிறைந்திருக்கின்றன. மிளகில் சுமார் 5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை பைப்ரின் உள்ளது. சப்ளிமென்ட்ஸில் முன்னணியாக விளங்கும் இதில் வைட்டமின்கள், தாதுக்கள், பயோ அவைலபிளிட்டி (Bioavailability) போன்றவை நிறைந்திருக்கின்றன. மிளகுக்கு, காரத்தன்மையை அளிப்பதும் இவைதான்.

பைப்ரின் சப்ளிமென்ட்ஸ்
பைப்ரின் சப்ளிமென்ட்ஸ்

குறிப்பாக, இந்த பைப்ரின் என்ற வேதிப் பொருள் பலதரப்பட்ட புற்றுநோய்களான இரைப்பைப் புற்றுநோய் (Gastric Cancer), நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer), மலக்குடல் புற்றுநோய் (Rectal Cancer), கர்ப்பப்பைவாய் புற்றுநோய் (Cervical Cancer) போன்றவற்றைத் தடுக்க உதவுவதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், இருமல், தலைவலி, அஜீரணக் கோளாறுகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். நோய்வாய்ப்பட்டோர் தினசரி 20 மில்லிகிராம் அளவுக்கும், மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையிலும் பைப்ரின் சப்ளிமென்ட்ஸை எடுத்துக்கொள்ளலாம்.

மிளகை, ‘கெமிக்கல் எக்ஸ்ட்ராக்‌ஷன்’ (Chemical Extraction) என்ற செயல்முறைக்கு உட்படுத்தி பைப்ரின் தயாரித்து, சப்ளிமென்ட்ஸாக உருவாக்கலாம். நீண்டகாலமாகவே பைப்ரினை, பாரம்பர்ய மருத்துவர்கள் சிபாரிசு செய்து வந்திருக்கின்றனர். தற்போது நவீன சித்த மருத்துவத்திலும் (Modern Herbal Medicine) இது பரிந்துரைக்கப்படுவதால், சந்தை வாய்ப்பும் நன்றாகவே இருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு நாமக்கல் மாவட்டத்தில் பைப்ரின் சப்ளிமென்ட்ஸ் தொழிற்சாலையை நிறுவலாம்.

கனவு - 86 - நாமக்கல் - வளமும் வாய்ப்பும்

நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டொன்றுக்கு 20 லட்சம் கிலோ மிளகு விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து தோராயமாக 10 சதவிகிதத்தை எடுத்துக்கொண்டால் ஏறக்குறைய 2 லட்சம் கிலோ அளவுக்கு மிளகு கிடைக்கும். பொதுவாக, ஒரு கிலோ மிளகிலிருந்து 50 கிராம் அளவுக்கு பைப்ரின் தயாரிக்கலாம். 2 லட்சம் கிலோவிலிருந்து 10,000 கிலோ அளவுக்கு பைப்ரின் தயாரிக்க இயலும். அந்த வகையில் 10 ஆயிரம் கிலோ பைப்ரினிலிருந்து 50 கிராம் எடைகொண்ட பைப்ரின் சப்ளிமென்ட்ஸ் 2 லட்சம் பாக்கெட்டுகளை உருவாக்கலாம். ஒன்றின் விலையை, சந்தையில் சுமார் 3,500 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தால் ஆண்டுக்குத் தோராயமாக 70 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.

கொல்லிமலை மூலிகை மையம் (Kolli Hills Herbal Hub)

கொல்லிமலையில் பல சித்தர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அந்த சித்தர்கள் பல அரிய மூலிகைகளைக் கண்டறிந்து, அதைத் தங்களின் சீடர்கள் வழியே மருத்துவ முறைகளாகக் கடத்திவந்திருக்கின்றனர். `சித்த வைத்தியம்’, `சித்த மருத்துவம்’ எனப் பெயர் பெற்றதும் அதனால்தான். நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற கொல்லிமலையில், உடல்நலப் பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய நிறைய மூலிகைகள் இருக்கின்றன. இதைப் பயன்படுத்திக்கொண்டு இங்கே மூலிகை மையம் (Herbal Hub) அமைக்கலாம்.

கொல்லிமலை மூலிகை மையம்
கொல்லிமலை மூலிகை மையம்

ஒரு குறிப்பிட்ட துறையைச் சார்ந்த பலர், தங்கள் செயல்பாடுகளை ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வுசெய்து அங்கே தங்களது நிறுவனங்களை அமைத்துக்கொண்டால், அது மையம் (Hub) என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, சென்னை கடற்கரை சாலையில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை அமைத்திருக்கின்றன. அதை `ஐடி ஹப்’ (IT Hub) என்கிறோம்.

கொல்லிமலையில் உடல்நலப் பிரச்னைகள் பலவற்றைத் தீர்ப்பதற்கான மூலிகைகள் ஏராளமானவை காணப்படுவதாக சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதை நிரூபிக்கும்விதமாக சிறுகுறிஞ்சான், பூனைக்கண், அதிமதுரம், ஓமவல்லி, கற்பூரவல்லி, வசம்பு, நாயுருவி, அரத்தை, நிலவேம்பு, மூக்கிரட்டை, வல்லாரை, சிறுக்களா எனப் பெரிய பட்டியல் போடுமளவுக்கு கொல்லிமலையில் மூலிகைகள் கிடைக்கின்றன. இந்த வளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், கொல்லிமலையில் சுமார் 300 ஏக்கர் அளவுக்குத் தரிசு நிலங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியைப் பயன்படுத்திக்கொண்டு இங்கே கொல்லிமலை மூலிகை மையத்தை நிறுவலாம்.

(இன்னும் காண்போம்)