மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 87 - நாமக்கல் - வளமும் வாய்ப்பும்

மேங்கோ லீஃப் கிரீன் டீ பவுடர்
பிரீமியம் ஸ்டோரி
News
மேங்கோ லீஃப் கிரீன் டீ பவுடர்

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

நாமக்கல் மாவட்டத்தின் முதன்மையான வளங்களில் ஒன்று முட்டை. நாளொன்றுக்கு சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. அவை உள்ளுர்ச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதோடு, வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏராளமான அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முட்டைக்கான விலை நிர்ணயம் செய்யப்படுவதும் இங்கேதான். கோடிக்கணக்கில் முட்டை உற்பத்தி நடந்தாலும், அதை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றும் தொழிற்சாலைகள் போதிய அளவில் இல்லை. முட்டையிலிருந்து எத்தனைவிதமான புராடக்டுகளை உருவாக்கலாம் என்பதை ஒவ்வொன்றாகக் காணலாம்.

எக் வொயிட் க்யூப்ஸ் (Egg White Cubes)

‘முட்டையிலுள்ள வெள்ளைக்கருவே உடல்நலத்துக்கு உகந்தது’ என்று பொதுப்புத்தியில் பதியவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் அதைவிட அதிகமான சத்துகள் மஞ்சள் கருவில் இருக்கின்றன என அறிவியல் பூர்வமான ஆய்வுகள் அண்மையில் வெளிவருகின்றன. தற்போது, பலர் முட்டை வெள்ளைக்கருவைத் தவிர்த்துவிட்டு, மஞ்சள்கருவை விரும்பி உண்கிறார்கள். நாமக்கல்லின் முக்கிய வளமான முட்டையின் வெள்ளைக்கருவிலிருந்து ‘எக் வொயிட் க்யூப்ஸ்’ எனும் புராடக்டைத் தயாரிக்கலாம். இந்த புராடக்ட் தயாரிப்பின்போது, மீதமாகும் மஞ்சள்கருவைப் பயன்படுத்தி, வேறு சில புராடக்டுகளைத் தயாரிக்கலாம். உதாரணத்துக்கு, மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் `பாஸ்விட்டின்’ (Phosvitin) எனும் புரதம் முட்டையின் மஞ்சள்கருவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

எக் வொயிட் க்யூப்ஸ்
எக் வொயிட் க்யூப்ஸ்

முட்டையில் புரோட்டீன் (4 கிராம்), சோடியம் (55 மில்லிகிராம்), செலினியம் (2.3 மில்லிகிராம்), கால்சியம் (3.6 மில்லிகிராம்), மக்னீசியம் (4.9 மில்லிகிராம்), பாஸ்பரஸ் (53.8 மில்லிகிராம்) உள்ளிட்ட ஏராளமான சத்துகள் அடங்கியிருக்கின்றன. `முட்டை வெஜிடேரியனா, நான் வெஜிடேரியனா?’ என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கு, `இரண்டுமில்லை. அது எக்கிடேரியன் (Eggetarian)’ எனச் சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக ஒரு பிரிவு உருவாகியிருக்கிறது. அதனால், வெஜிடேரியன் பிரிவைச் சேர்ந்த சிலர் முட்டையை மட்டும் உணவாக எடுத்துக்கொள்கிறார்கள். இந்த வகையினரைத்தான் `எக்கிடேரியன்’ என்கிறார்கள். எக்கிடேரியன் பிரியர்கள் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம். பாலை மதிப்புக்கூட்டுவதால் கிடைக்கப்பெறும் பன்னீரைப் பயன்படுத்தி, பல வகையான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. அதேபோல எக்கிடேரியன்களால் அதிகம் விரும்பப்படும் உணவுப்பொருளாக எக் வொயிட் க்யூப்ஸை விளம்பரப்படுத்துவதோடு, அதற்கான தொழிற்சாலையை நாமக்கல் மாவட்டத்தில் நிறுவலாம்.

கனவு - 87 - நாமக்கல் - வளமும் வாய்ப்பும்

நாமக்கல் மாவட்டத்தில் நாளொன்றுக்கு ஒரு கோழிப்பண்ணையிலிருந்து மட்டும் சுமார் 7,000 முட்டைகள்வீதம் ஆண்டுக்கு ஏறக்குறைய 25 லட்சம் முட்டைகள் உற்பத்திசெய்யப்படு கின்றன. சராசரியாக ஒரு முட்டையிலிருக்கும் வெள்ளைக்கருவின் எடை 25 கிராம். 100 கிராம் எடைகொண்ட ஒரு எக் வொயிட் க்யூப்ஸ் தயாரிக்க 4 முட்டைகளும், ஒரு கிலோ எடையுள்ள எக் வொய்ட் க்யூப்ஸ் தயாரிக்க 40 முட்டைகளும் தேவைப்படுகின்றன. அந்த வகையில், 25 லட்சம் முட்டைகளிலிருந்து தோராயமாக 62,000 கிலோ எக் வொயிட் க்யூப்ஸுகளைத் தயாரிக்கலாம். ஒரு கிலோ எடையுள்ள எக் வொயிட் க்யூப்ஸுகளை 5 பாக்கெட்டுகளில் அடைக்க முடியும் எனில், ஏறக்குறைய 25 லட்சம் முட்டைகளிலிருந்து சுமார் 3 லட்சத்து 10,000 பாக்கெட்டுகளை உருவாக்கலாம். 200 கிராம் எடைகொண்ட ஒரு எக் வொயிட் க்யூப்ஸ் பாக்கெட்டை 125 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டுக்குத் தோராயமாக 4 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம்.

அலங்கார முட்டைகள் (Decorative Eggs)

நாமக்கல்லில் முட்டை உற்பத்தியில் குறைந்த முதலீட்டில் ஈடுபடுபவர்கள், பெரும் முதலீட்டில் ஈடுபடுபவர்கள் என இரு வகையான முட்டை உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் பெரும் முதலீட்டில் ஈடுபடுபவர்களுக்கு அதிக அளவில் உற்பத்தியாகும் முட்டைகளைச் சேமித்துவைக்க குளிர்ப்பதனக் கிடங்குகள் இருக்கின்றன. இரண்டு மாதங்கள் வரை முட்டைகளைக் கெட்டுப்போகாமல் இங்கே பாதுகாத்துவைக்க முடியுமென்பதால், பெரும் இழப்புகள் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. சிறு முதலீட்டில் ஈடுபடுபவர்களுக்குக் குளிர்ப்பதனக் கிடங்கு வசதி இல்லாததால், பெரும்பாலும் அதிக அளவில் உற்பத்தி ஏற்படும்போதும், மார்க்கெட்டில் டிமாண்ட் குறையும்போதும் அவற்றை மிகக்குறைந்த விலைக்கு விற்க நேரிடுகிறது. இந்த வருமான இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை அலங்கார முட்டைகளாக மதிப்புக்கூட்டல் செய்து, நல்ல லாபத்தில் விற்க முடியும்.

அலங்கார முட்டைகள்
அலங்கார முட்டைகள்

சந்தையில் ‘ரிதி கிரியேஷன்ஸ்’ (Riddhi Creations) என்ற நிறுவனம் முட்டை ஓடுகளை மாறுபட்ட டிசைன்களில் கலைநயம்கொண்ட அலங்கார முட்டைகளாக மாற்றி விற்பனை செய்கிறது. அதில் கண்ணைக் கவரும்விதத்தில் வண்ணங்களைச் சேர்த்து, டிசைன் செய்யப்பட்ட அலங்கார முட்டைகள் (10 எண்ணிக்கை கொண்டது) சுமார் 600 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது (சந்தையில் ஒரு முட்டையின் விலை டிமாண்ட் அதிகரிப்பின்போது, 6 ரூபாயாகவும், குறைவின்போது 4 ரூபாயாகவும் இருக்கிறது). சுமார் 25 பணியாளர்களைக்கொண்ட இந்த நிறுவனம் ஆண்டுக்கு இந்த ஒரு புராடக்டிலிருந்து ஏறக்குறைய 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. எனவே, சந்தை வாய்ப்புள்ள அலங்கார முட்டைகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தலாம். முட்டைகள் விற்பனையின்றி தேக்கமடைந்தாலும் கவலையின்றி, லட்சங்களில் வருமானம் ஈட்டலாம்.

மேங்கோ லீஃப் கிரீன் டீ பவுடர் (Mango Leaf Green Tea Powder)

நாமக்கல் மாவட்டத்தின் வளங்களில் ஒன்று மாமரம். அதன் இலை தோரணங்கள் தவிர்த்து, வேறு எதற்கும் பயன்படுத்தப்படுவதில்லை. மா இலைகளை மதிப்புக்கூட்டி மேங்கோ லீஃப் கிரீன் டீ பவுடர் தயாரிக்கலாம். மா இலையில் வைட்டமின் ஏ, பி, சி, இ உள்ளிட்ட சத்துகள் அடங்கியிருக் கின்றன. மா இலைகளில் பயன்கள் அதிகம் உண்டு. கொழுப்பைக் கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, சிறுநீரகக் கற்கள் கரைவதற்கும் துணைபுரிகின்றன. சர்க்கரைக் குறைபாடு இருப்பவர்களின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைத்திருக்க இது உதவுவதாகவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மேங்கோ லீஃப் கிரீன் டீ பவுடருடன் இஞ்சி, ஏலக்காய் போன்ற பொருள்களைச் சேர்த்து உருவாக்கினால், அதை சர்க்கரைக் குறைபாடு அல்லாதோரும் பயன்படுத்தலாம். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மேங்கோ லீஃப் கிரீன் டீ பவுடருக்கான தொழிற்சாலையை நாமக்கல் மாவட்டத்தில் உருவாக்க வேண்டும்.

மேங்கோ லீஃப் கிரீன் டீ பவுடர்
மேங்கோ லீஃப் கிரீன் டீ பவுடர்
மேங்கோ லீஃப் கிரீன் டீ பவுடர்
மேங்கோ லீஃப் கிரீன் டீ பவுடர்

நாமக்கல் மாவட்டத்தில் செல்லப்பம் பட்டி, நல்லிப்பாளையம், மோகனூர், வளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் மாமரங்கள் இருக்கின்றன. இங்கேயுள்ள மா இலைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சந்தையில் வழக்கமான கிரீன் டீ (10 டீ பைகள்) 67 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாம் உருவாக்கும் மேங்கோ லீஃப் கிரீன் டீ பவுடரை 80 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டுக்குப் பல லட்சங்களில் வருமானம் ஈட்டலாம். இவ்வாறாக, எக் வொயிட் க்யூப்ஸ், அலங்கார முட்டைகள், மேங்கோ லீஃப் கிரீன் டீ பவுடர் வழியாக நாமக்கல் மாவட்டத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி, நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். இதனால், நாமக்கல் மாவட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும்!

(இன்னும் காண்போம்)