கட்டுரைகள்
Published:Updated:

மண்ணுக்கு மரியாதை! - இனி, நவீன தொழில்நுட்பத்தில் மட்பாண்டத் தொழில்...

மட்பாண்டத் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
News
மட்பாண்டத் தொழில்

‘‘மண்பாண்டத் தொழில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே செய்யும் தொழிலாக இன்றுவரை இருந்துவருகிறது.

கீழடி... இன்றைக்குத் தமிழினத்தின் வேர்களை, பலநூற்றாண்டுகளுக்குப் பின்னகர்த்தியுள்ளது. அதற்கு ஆதாரபூர்வமாகத் துணை நின்றவை... மட்பாண்டங்களே! பாரம்பர்யம்மிக்க அத்தகைய மட்பாண்டத் தொழிலுக்கு தற்போது பெருமை சேர்த்துள்ளது தமிழக அரசு.

‘‘வேலூர் மாவட்டம், கரசமங்கலம் கிராமத்தில் 3.39 கோடி ரூபாயில் ‘மண்பாண்டக் குழுமம்’ அமைக்கப்படும்'’ என்று சட்டமன்றத்தில் சமீபத்தில் அறிவித்திருக்கிறார் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்.

‘‘இது, மண்பாண்டத் தொழிலுக்குப் புத்துயிரூட்டும் முயற்சி'' என்று கொண்டாடுகிறார்கள், அந்தத் தொழிலில் காலங்காலமாக ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள்!

Iம.லோகேஷ்
Iம.லோகேஷ்

இதுகுறித்து, மாவட்ட மண்பாண்ட உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ம.லோகேஷிடம் பேசியபோது, ‘‘வேலூரை அடுத்த கரிகிரி எனும் ஊரில் கடந்த 1961-ம் ஆண்டு 'மண்பாண்டக் குழுமம்' ஒன்றை அமைத்தது தமிழ்நாடு அரசு. இதைப் பயன்படுத்தி அந்தப் பகுதி மண்பாண்டத் தொழிலாளர்கள் பொருளாதாரரீதியாகவும் தொழில்ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் அடைந்தனர். 1990-ம் ஆண்டு ஊர்க்காரர்களுக்கும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைகளால், மண்பாண்டக் குழுமம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர யாரும் முயற்சி எடுக்கவில்லை.

மட்பாண்டத் தொழில்
மட்பாண்டத் தொழில்

இந்த மாவட்டத்தில்... சூளைமேடு, குருவராஜபாளையம், மேல்ஆலத்தூர், அணைக்கட்டு, இறைவன்காடு, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்டத் தொழில் பரவலாக நடக்கிறது. இதன் அடிப்படையில்தான், ‘மீண்டும் மண்பாண்டக் குழுமம் அமைக்க வேண்டும்' என்று சில ஆண்டுகளாகவே அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தோம். 2020-ம் ஆண்டு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் விரிவான திட்ட அறிக்கையுடன் கோரிக்கை வைத்தோம். ‘நிச்சயமாகச் செயல்படுத்தலாம். இதற்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதற்கு உரிய ஏற்பாடு செய்கிறேன்’ என்று அவர் உறுதியளித்தார். தற்போது வந்திருக்கும் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றவர், இதில் சமூக சமத்துவம் நோக்கிய முயற்சி இருப்பது பற்றியும் தொடர்ந்தார்.

மட்பாண்டத் தொழில்
மட்பாண்டத் தொழில்

‘‘மண்பாண்டத் தொழில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே செய்யும் தொழிலாக இன்றுவரை இருந்துவருகிறது. சமூகங்களைக் கடந்து மண்பாண்டத் தொழிலைக் கற்க விரும்புகிறவர்களுக்கு இந்தக் குழுமத்தில் அரசின் உதவித்தொகையுடன் தகுந்த பயிற்சி அளிக்க முடியும். நகர்ப்புறங்களில் உள்ள மண்பாண்டத் தொழிலாளர்கள் இட வசதிகள் இல்லாததால் தொழிலைக் கைவிட்டுவிடுகின்றனர். அவர்கள் குழுமத்திற்கு நேரடியாக வந்து மண்பாண்டங்களைத் தயாரித்து விற்கலாம். பொதுமக்களும் தேவையான பொருள்களை ஒரே இடத்தில் வாங்கிக்கொள்ளலாம்'' என்றவர்,

‘‘இந்தக் குழுமம் அமைவதால் புதிய நபர்கள், புதிய சிந்தனை கொண்டவர்கள் இந்தத் தொழிலுக்குள் வருவார்கள். ஆன்லைன் விற்பனை, நடமாடும் விற்பனையகம், 3-டி தொழில்நுட்பம் எனப் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லலாம். இயந்திரமயமாக்கல், நவீனமயமாக்கல், நிறுவனமயமாக்கல் இம்மூன்றும் மண்பாண்டத் தொழிலைக் கைதூக்கிவிடும் நேரம் நெருங்கிவிட்டது. இனி மண்பாண்டத் தொழிலிலும் இயந்திரங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும். நவீனமயமாக்கல் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் இடம்பெறும். நிறுவனமயமாக்கல் மூலம் குறிப்பிட்ட சமூகங்களைக் கடந்து இந்தத் தொழிலைப் பல தரப்பினரும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்” என்றார்.

புத்துயிர் பெறட்டும், பாரம்பர்யத் தொழில்!