உலக தங்க கவுன்சில் தகவலின்படி, இந்தியாவின் ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி மாதம் 3 டன் தங்கம் வாங்கி உள்ளது. தற்போது இந்தியாவின் கையிருப்பில் மொத்தம் 790.2 டன் தங்கம் உள்ளதாம்!

அனைத்து உலக நாடுகளின் மத்திய வங்கி கையிருப்புகளிலும் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. உலகில் உள்ள மொத்த தங்கம் கையிருப்புகளில் 8% தங்கம் கையிருப்பு இந்தியாவில்தான் இருக்கிறது.
இந்தியாவில் 2022-ம் ஆண்டின் முதலாம் காலாண்டில் 760.42 டன் தங்கமும், இரண்டாம் காலாண்டில் 767.89 டன் தங்கமும், மூன்றாம் காலாண்டில் 785.35 டன் தங்கமும், நான்காம் காலாண்டில் 787.40 டன் தங்கமும் கையிருப்பாக உயர்ந்து கொண்டே வந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 790.2 டன் தங்கம் கையிருப்பாக உள்ளது.

அமெரிக்காவில் டாலர் மதிப்பு சரிவு, சர்வதேச வங்கிகளில் ஏற்படும் நெருக்கடி, பொருளாதார மந்தநிலை ஆகிய காரணங்களால் இந்தியாவில் தங்கத்தின் மதிப்பு தற்போது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ரஷ்யா, துருக்கி. இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் அதிகம் வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.