வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ வி.பி.நந்தகுமாரின் ரூ.143 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தங்க நகை அடமானக் கடன் உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகளை வழங்கிவரும் முன்னணி NBFC நிறுவனமான மணப்புரம் ஃபைனான்ஸ், கேராளவைத் தலையிடமாகக் கொண்டு இயங்குகிறது. சமீபத்தில் இந்நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் திடீரென்று அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது. சோதனையில் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் சுமார் ரூ.143 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளதாகக் கூறியுள்ளது.

இந்தத் திடீர் அதிரடி நடவடிக்கைக்குக் காரணம், மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மீது எழுந்துள்ள சட்டவிரோத பணமோசடி குற்றச்சாட்டுதான். மணப்புரம் ஃபைனான்ஸ் மக்களின் டெபாசிட் பணத்தை சட்டவிரோதமாகப் பண மோசடி செய்து, அதன் சி.இ.ஓ நந்தகுமார் தன் பெயரிலும் தன்னுடைய குடும்பத்தினர் பெயரிலும் சொத்துகளை வாங்கியிருப்பதாகவும், மேலும், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து அமலாக்கத் துறை தரப்பில் கூறியதாவது: `மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் மக்களிடமிருந்து டெபாசிட் தொகையாகத் திரட்டிய பணத்தை, சட்டவிரோதமாகக் கையாண்டு பல்வேறு அசையாத சொத்துகளில் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.
சி.இ.ஓ நந்தகுமார், அவருடைய மனைவி மற்றும் அவருடைய பிள்ளைகளின் பெயர்களில் இந்தச் சொத்துகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. இது மட்டுமல்லாமல் மக்களின் டெபாசிட் தொகையில் குறிப்பிட்ட பகுதி பணத்தை, பங்குகளிலும் முதலீடு செய்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
சோதனை நடவடிக்கையின்போது பணமோசடி தொடர்பான ஆவணங்களும், 60 அசையா சொத்துகளின் சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் மணப்புரம் ஃபைனான்ஸ் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதாக உள்ளன" என்று கூறியுள்ளது.

இதையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ வி.பி.நந்தகுமாரின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அமலாக்கத் துறை முடக்கிய மொத்த சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.143 கோடி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் அசையா சொத்துகள் போக எட்டு வங்கிக் கணக்குகளில் உள்ள வைப்புத்தொகை, பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகள், இதர முதலீடுகள் ஆகியவையும் அடங்கும்.
இந்த பணமோசடி நடவடிக்கைகளை, ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் எதுவும் பெறாமல் மணப்புரம் அக்ரோ ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக வி.பி.நந்தகுமார் மேற்கொண்டிருப்ப தாகக் கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்துக்கும், மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், மேலும் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை அனைத்தும் நிர்வாக இயக்குநர் வி.பி.நந்தகுமார் மீது எடுக்கப்பட்டவைதானே தவிர, நிறுவனத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மணப்புரம் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே ரிசர்வ் வங்கி மோசடி நடந்திருப்பதை அறிந்து டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திரும்பத் தர வேண்டுமென உத்தரவிட்டது. டெபாசிட்தாரர் களுக்குப் பணத்தைத் திரும்ப தந்துவிட்டதாகக் கூறியது மணப்புரம் ஃபைனான்ஸ் கூறியிருந்தது. ஆனால், விசாரணையில் மக்களின் டெபாசிட் பணத்தை திரும்ப வழங்கியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அதேசமயம் அமலாக்கத்துறை சொத்துகளை முடக்கியது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளார் மணப்புரம் ஃபைனான்ஸ் சி.இ.ஓ வி.பி.நந்தகுமார். அவர், `அமலாக்கத்துறை கைப்பற்றியிருக்கும் சொத்துகள், பங்குகளின் மதிப்பு ரூ.2,000 கோடி ஆகும். ஆனால், ரூ.143 கோடி மதிப்புள்ள சொத்துகள் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளேன்" எனக் கூறியிருக்கிறார்.