Published:Updated:

13 குதிரைகள், 60 கோழிகள்,75 ஆடுகள்... கால்நடை வளர்ப்பில் லட்சங்களை ஈட்டும் இன்ஜினீயர்!

படித்தது இன்ஜினீயரிங். 85,000 ரூபாய் சம்பளம் தந்த வேலையை உதறித்தள்ளிவிட்டு, இப்போது கிராமத்தில் நாட்டுமாடுகள், குதிரை, ஆடு, கோழி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார் ஓர் இளைஞர்.

Prabhu with Horses
Prabhu with Horses ( நா.ராஜமுருகன் )

'இன்ஜினீயர் படிப்புதான் நல்ல படிப்பு; அதுமூலமாகக் கிடைக்கும் வேலைதான் கௌரவமான வேலை' என்று இளைஞர்கள் நினைத்த நினைப்பெல்லாம் இப்போது மலையேறிவிட்டது. பெரும்பாலான இன்ஜினீயர்களுக்கு உரிய வேலை கிடைக்காததால், அப்படிப்பு மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. அதிலேயே வேலை பார்ப்பவர்களும், துறைமீதான ஆர்வம் குறைந்து வெவ்வேறு பணிகளுக்கு செல்லும் போக்கும் அதிகரித்துவருகிறது.

Saravana Prabhu
Saravana Prabhu

கரூரைச் சேர்ந்த சரவணபிரபுவும், இன்ஜினீயரிங் படிப்பு மூலமாகக் கிடைத்த 85,000 சம்பளம் தந்த வேலையை உதறித்தள்ளிவிட்டு, இப்போது கிராமத்தில் நாட்டுமாடுகள், குதிரை, ஆடு, கோழி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இப்போது மாதம் 1 லட்சத்து இருபதாயிரம் வரை சம்பாதித்து, இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார்.

கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில், ஐந்து ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது, இவரது கால்நடை வளர்ப்புப் பண்ணை. அங்கே மாடுகளுக்கு தீவனம் வைத்துக்கொண்டு, கால்நடை பராமரிப்பில் 'பிஸி'யாக இருந்த சரவணபிரபுவைச் சந்தித்துப் பேசினோம்.

Saravana Prabhu
Saravana Prabhu

"எனக்கு சொந்த ஊர், கரூர். எங்களுக்கு சொந்தமா உள்ள சொத்து இந்தப் பண்ணை அமைந்துள்ள அஞ்சு ஏக்கர் நிலம் மட்டும்தான். அப்பா ரத்தினம், தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில மண்டல மேலாளராக இருந்தார். இருந்தாலும், கூடவே இந்த அஞ்சு ஏக்கர் இடத்துல 25 குதிரைகள், 53 கலப்பின மாடுகள், 600 ஆடுகள், 150 கோழிகள்னு வச்சு வளர்த்துக்கிட்டு வந்தார். எனக்கு சின்ன வயசில் இருந்தே, விலங்குகள் வளர்ப்பில் ஆர்வம் அதிகம். 'கால்நடை மருத்துவர் படிப்பு படிக்கணும்'னு நினைச்சேன். ஆனா, அப்பா என்னையும் அண்ணனையும், 'ஒழுங்கா படிச்சு முன்னேறுர வழியைப் பாருங்க'ன்னு சொல்லி, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்ல சேத்துவிட்டார். 2009-ல் நான் பி.இ இன்ஜினீயரிங் படிப்பை முடிச்சேன். அதன்பிறகு, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கார் உள்ளிட்ட வாகனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை டிசைன் பண்றது, தயாரிக்கிறது சம்பந்தமான எம்.டெக் படிப்பையும் முடிச்சேன்.

``இன்ஜினீயரிங் படிச்சுட்டு டீ ஆத்தலாமானு கேட்டாங்க!" - கரூரில் டீக்கடை நடத்தும் கார்த்திக்

2011-ல், சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்துல, 10,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இருந்தாலும் மனசுக்குள், 'அப்பா வச்சிருந்த இந்தப் பண்ணைக்கு வரமுடியவில்லையே... நாம ஆசைப்பட்ட விலங்குகள் வளர்ப்புல ஈடுபடமுடியலையே'ங்கிற ஏக்கம் இருந்துச்சு. இந்தச் சூழல்லதான், 2013-ல் அப்பா திடீர்னு தவறிட்டார். மொத்த குடும்பத்துக்கும் அது பேரிடியா இருந்துச்சு. அண்ணன் கார்த்திக் பிரபு சென்னையில் ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில வேலையில் இருந்தார். அதனால், அப்பா விட்டுட்டுப்போன பண்ணையை விடுமுறை நாள்கள்ல போய் பார்த்துக்க ஆரம்பிச்சேன்.

Saravana Prabhu and Goats
Saravana Prabhu and Goats

ஆள்களை நியமிச்சு, இந்தப் பண்ணையைத் தொடர்ந்து பராமரிக்க ஆரம்பிச்சேன். ஆனா, நேரடியா நிர்வாகம் பண்ணாததாலயும், அனுபவம் இல்லாததாலயும் 40 ஆடுகள், 50 கோழிகள், 4 குதிரைகள் இறந்துபோச்சு. அதனால, நான் துடிச்சுப்போனேன். 'நாமளே இறங்கிப் பார்ப்போம்'னு முடிவுபண்ணினேன். நான் பார்த்துவந்த சென்னை வேலையும் அதிக மன பாரத்தைக் கொடுத்துச்சு. அதனால், 'ஆடு, மாடு, குதிரைகளின் எண்ணிக்கையைக் குறைச்சு, அதை நாமே பராமரிக்கலாம்'னு முடிவு பண்ணினேன். அதைப் பராமரிக்க மூலதனம் வேணும்ங்கிறதுக்காக, 2016 வரை அந்த வேலையில் இருந்தேன்.

இதற்கிடையில், இந்தப் பண்னையில் போர்வெல்கள் அமைத்தேன். தேவையான அளவு ஷெட் அமைத்தேன். 2016-ம் வருஷம் நான் வேலையை விட்டபோது, எனக்கு கிடைத்த சம்பளம் 85,000. எங்க அம்மாவும், 'குதிரை, மாடு, கோழி வளர்க்கிறதெல்லாம் சாதாரண வேலை இல்லைப்பா. அதைப் பத்தி உனக்கு ஒண்ணுமே தெரியாது. உன்னால சமாளிக்க முடியாது. எல்லாத்தையும் வித்துட்டு, பேசாம பார்க்கிற வேலையிலேயே இரு'னு சொன்னாங்க.

Saravana Prabhu and Hens
Saravana Prabhu and Hens

சொந்தக்காரங்க, உறவினர்கள் எல்லாம் இதையே சொல்லி என்னை பயமுறுத்துனாங்க. ஆனால் நான், 'என்னால் முடியும்'னு துணிஞ்சு வேலையை விட்டுட்டு, இந்த கால்நடை வளர்ப்பு தொழில்ல இறங்கினேன். ஆரம்பத்துல அவ்வளவு சிரமமா இருந்துச்சு. கால்நடைகளைப் பத்தி துளிகூட எனக்கு ஒண்ணும் தெரியலை. அப்புறம் மெல்ல மெல்ல யூடியூப் வீடியோக்கள், கால்நடை மருத்துவர்கள் வழிகாட்டுதல்னு விஷயத்தெளிவு அடைஞ்சேன்.

இப்போ, நானே ஆடு, மாடுகளுக்கு பிரசவம் பார்க்குற அளவுக்கு முன்னேறிட்டேன். மூணு வருஷத்துக்கு முன்னாடியே குதிரை, மாடு, கோழி, ஆடுகளோட எண்ணிக்கையைக் குறைச்சேன். எல்லாவற்றுக்கும் தேவையான தீவனங்களை நானே தயாரிச்சேன். தவிர, இவைகளை மேய்ப்பதற்குத் தேவையான நிலங்களை வருடக் குத்தகைக்குப் பேசி, தயார்செய்தேன்.

Saravana Prabhu
Saravana Prabhu

பிறகு, 2016-ல் 'நாட்டு மாட்டுப் பால் விற்பனையைத் தொடங்கலாம்'னு முடிவுபண்ணி, ஒரே ஒரு மாட்டை வச்சு தினமும் எட்டு லிட்டர் பாலை விற்பனைசெய்ய ஆரம்பிச்சேன். இப்போ, தினமும் 65 லிட்டர் பால் விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். இப்போ, 15 மாடுகள் இருக்கு. தவிர, 13 குதிரைகள், 60 கோழிகள், 75 ஆடுகள் வரை இருக்கு. ராஜஸ்தானைச் சேர்ந்த போர்க்குதிரை வகையான மார்வாரி குதிரைகள் என்கிட்ட இருக்கு. இந்திய அளவுல முக்கியமான குதிரை வளர்ப்பவர்கள் மத்தியில் நான் அறியப்படும் அளவுக்கு விற்பனையில தேறிட்டேன். மாட்டுப் பால் விற்பனை மூலம் மாதம் 40,000 ரூபாய் வருமானம் வருது.

ஆடு விற்பனை மூலம் மாதம் ரூ.30,000, கோழி விற்பனை மூலம் ரூ.24,000 வருமானம் வருது. தவிர, கோழி முட்டைகள், சாண எரு, குதிரை லத்தி விற்பனை மூலமா ரூ.20,000 கிடைக்கும். அதோடு, வருடத்துக்கு ஒருமுறை ஒரு குதிரையை 4 ல் இருந்து 5 லட்சம் வரை விற்பனை செய்வேன். அந்த வகையில், மாதம் ரூ.6,000 வரை வருமானம் கிடைக்கும். எல்லாம் சேர்த்து இப்போ மாசத்துக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் வரை கிடைக்குது.

Saravana Prabhu and Cattles
Saravana Prabhu and Cattles

இப்போதான் எங்க அம்மா, 'இனி பயமில்லைடா. தொழில்ல நீ தேறிட்டே'னு தட்டிக்கொடுக்குறாங்க. ஒருவருடத்துக்கு முன்னாடிதான் எனக்கு திருமணம் ஆச்சு. மனைவி கீர்த்தனாவும் இந்தத் தொழில்ல ஆர்வமா இருக்காங்க. அடுத்த முயற்சியா, பிரியாணி தயாரிச்சு விற்பனை பண்ணலாம்னு இருக்கோம். கண்டிப்பாக அதிலயும் ஜெயிப்போம்" என்று நம்பிக்கை தொனிக்கப் பேசுகிறார்.