ஐரோப்பாவின் மிகப்பெரிய சாதனை ஐரோப்பிய ஒன்றியம். அந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய சாதனை ஐரோப்பிய ஒற்றைச் சந்தை (The European single market). ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி, ஐரோப்பிய வணிகங்கள் மற்றும் நுகர்வோரின் அன்றாட வாழ்க்கையைப் பல படிகள் மேம்படுத்திய ஐரோப்பிய ஒற்றைச் சந்தை அடுத்த வருடத்தோடு தனது வெற்றிகரமான 30 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறது.
ஒற்றைச் சந்தை என்றால் என்ன?
ஐரோப்பா ஒரே தலைமுறையில் நடத்திய இரண்டு ரத்தக்களரி போர்களுக்குப் பிறகு மிகவும் மோசமான நிலையிலிருந்தது. இரண்டு மோதல்களும் உலகளாவிய நிலையில் ஐரோப்பாவின் ஸ்திரத்தன்மையைச் சிதைத்தது. ஐரோப்பாவின் சில நாடுகள் பல நூற்றாண்டுகளாக தமக்குள் தொடர்ந்து போரிட்டு வந்தன. பல அரசியல் உறவுகள் சிதைந்தன. இரண்டாம் உலகப்போரை அடுத்து மற்றுமொரு பாரிய மோதலைத் தடுப்பதற்கான ஒரே சிறந்த வழி நாடுகளுக்கிடையே ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பது மட்டுமே என்று அந்த நேரத்தில் தலைவர்கள் முடிவு செய்தனர். விளைவு, ஐரோப்பிய ஒன்றியமும், ஐரோப்பிய ஒற்றைச் சந்தையும் பிறந்தது.

ஐரோப்பிய ஒற்றைச் சந்தை என்பது பங்குபெறும் நாடுகளிடையேயான வர்த்தக உடன்படிக்கையால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு அமைப்பாகும். இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) அனைத்து உறுப்பினர்களும், ஐரோப்பியச் சுதந்திர வர்த்தக சங்கத்தின் (EFTA) உறுப்பினர்களான நான்கு EU அல்லாத நாடுகளும் அடங்குகின்றன. ஐரோப்பிய ஒற்றைச் சந்தையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்புக்குப் பின்னால் உள்ள மிக முக்கியமான சக்திகளில் ஒன்றாகும். இது உறுப்பு நாடுகளுக்கு இடையே 'Four freedoms' என்று சொல்லப்படும் பொருள்கள், சேவைகள், மூலதனம் மற்றும் மக்கள் எனும் நான்கு காரணிகள் எவ்வித சுங்க, குடிவரவு, குடியாகழ்வு கட்டுப்பாடோ, தடைகளோ இல்லாமல் சுதந்திரமாகப் பயணிக்கவும், பொருள்கள் மற்றும் சேவைகளைப் பரிவர்த்தனை செய்யவும் அனுமதிக்கிறது. அதாவது அடிப்படையில் இது தம் உறுப்பு நாடுகளிடையே வர்த்தகத்திற்கான தடைகளை நீக்கி, ஐரோப்பிய ஒன்றிய மட்டத்தில் தேசிய விதிகளை ஒருங்கிணைக்கிறது.
அமெரிக்கா மற்றும் சீனா போன்ற மெகா சைஸ் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுடன் தனித்தனி ஐரோப்பிய நாடுகள் போட்டியிட்டு ஜெயிப்பது என்பது சாத்தியமே இல்லை. எனவே ஐரோப்பிய நாடுகள் கூட்டாக இணைந்து அந்த வல்லரசுகளுடன் பொருளாதார ரீதியில் மோதிப் போட்டியிட உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒற்றைச் சந்தை, ஐரோப்பிய ஒன்றியத்தை உலகின் மிகவும் முக்கியமான வர்த்தகப் பங்காளியாக மாற்றியது.
ஒற்றைச் சந்தையின் வெற்றி
ஜனவரி 1, 1993ல் திறந்து வைக்கப்பட்ட ஐரோப்பிய ஒற்றைச் சந்தையின் வெற்றிக் கதை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கின்றது. ஐரோப்பிய யூனியனின் அதிகாரபூர்வ அறிக்கையின் பிரகாரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2020 இல் $17.1 ட்ரில்லியனைத் தாண்டி ஹிட்டடித்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தின் 1/6 பகுதியாகும்.

மொத்த ஐரோப்பாவையுமே ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்த ஐரோப்பிய ஒற்றைச் சந்தையில் தயாரிக்கப்படும் பொருள்கள் எல்லாமே ஒரு பொதுவான தரக்கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. எனவே 450 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர், தரமான, அதே நேரத்தில் மலிவு விலையில் தமக்கான பொருள்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகச்சிறந்த வாய்ப்பை ஐரோப்பிய ஒற்றைச் சந்தை உருவாக்கியது. உதாரணத்துக்கு பிரான்ஸில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் ருமேனியாவில் உள்ள நுகர்வோருக்கு அதே விலையில் ஆன்லைனில் ஆர்டர் பண்ணி வாங்கக்கூடியதாக இருக்கும். அதே போல பிரான்ஸில் இருநூறு யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கைக்கடிகாரத்தை, நூற்று ஐம்பது யூரோக்களுக்கு இத்தாலியிலிருந்து சுங்க வரிகள் ஏதும் இன்றி மலிவாக வாங்கலாம்.

ஐரோப்பிய ஒற்றைச் சந்தை சுமார் 22 மில்லியன் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உட்பட, ஐரோப்பிய வணிகங்களுக்கு இடையே வர்த்தகத்தை எளிதாக்கி, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டியது. புதிய கண்டுபிடிப்புக்களையும் முயற்சிகளையும் ஊக்குவித்து உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான லோக்கல் மார்க்கெட் அனுகூலங்களைப் பெற்றுக் கொடுத்தது. இது உற்பத்தியாளரும் நுகர்வோரும் தமக்கான சந்தை வாய்ப்பை எளிதாக அணுகுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது. தரமான, அதேவேளையில் மலிவான மூலப்பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் பொருள்கள் குறைந்த விலைக்குச் சந்தைப்படுத்தப்படுகின்றன.
ஒற்றைச் சந்தையின் மற்றுமொரு முக்கிய நன்மை, அதன் சந்தை அளவு. அமெரிக்காவை விட அளவில் பெரிய EU ஒற்றைச் சந்தை, ஐரோப்பிய நுகர்வோர் பலவகையான தயாரிப்புகளையும் வெரைட்டியாக அனுபவிக்க உதவியது. சந்தையின் அளவு விரிவாவதால் விற்பனையும் அதிகரிக்கிறது. அதிகரிக்கும் கேள்வி உற்பத்தியைக் கூட்டுகிறது. அதனால் வேலைவாய்ப்புகளையும் கணிசமாக அதிகரித்து வேலையில்லாதோர் விகிதாச்சாரத்தைக் குறைத்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 56 மில்லியன் வேலைகள் ஒற்றைச் சந்தையின் வர்த்தகத்தை மட்டுமே சார்ந்துள்ளன. ஐரோப்பாவின் சுமார் 20 மில்லியன் மக்கள் ஒற்றைச் சந்தையில் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.
ஒற்றைச் சந்தை 3 மில்லியனுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. மக்கள் வேலைவாய்ப்புக்காக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு இடம் பெயர்வதும், விசா கட்டுப்பாடுகளின் தளர்வால் இங்கே சாத்தியமானது. இதனால் Euro Zone-க்குள் வாழும் ஐரோப்பியக் குடியுரிமை கொண்ட யாரும், இன்னுமொரு Euro Zone நாட்டுக்கு விசா கட்டுப்பாடுகள் இன்றி குறிப்பிட்ட கால எல்லை வரை தங்கி இருக்கலாம். அந்தக் காலப்பகுதிக்குள் அவர்களுக்குப் பொருத்தமான வேலை கிடைக்கும் பட்சத்தில் அந்த நாட்டிலேயே கால வரையறையின்றி இருக்கலாம். இதன் காரணமாக அதிக திறன் கொண்ட பணியாளர்களைப் பரவலாக எல்லா நிறுவனங்களும் வேலைக்கு அமர்த்த முடிந்தது.

உதாரணமாக ஹங்கேரியில் இருக்கும் ஒருவர் வேலை தேடி டென்மார்க் சென்றால் அங்கு மூன்று மாதங்கள் விசா கட்டுப்பாடு இன்றி தங்கி இருந்து வேலை தேடலாம். டென்மார்க்கில் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு நிறுவனமும் அவருக்கு work permit தேவை இன்றி வேலை வழங்கலாம். இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நிறுவனங்கள் 28 நாடுகளில் உள்ள 500 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர் வர்க்கத்திற்கான நேரடி அணுகல் மூலம் பயனடைகின்றது.
சுருக்கமாகச் சொன்னால், 500 மில்லியனுக்கு மேற்பட்ட ஐரோப்பியர்களுக்கு, உயர் தரத்தில் நியாயமான விலையில், அதிகளவான தெரிவை ஐரோப்பிய ஒற்றைச் சந்தை வழங்குகிறது. போர்த்துகல் லெதரினால் தயாரிக்கப்பட்ட, அழகிய ஸ்லோவேனியா buckle பதித்த உயர் தரச் சப்பாத்துக்களை லாத்வியாவில் வசிக்கும் மார்ட்டின், ஜெர்மனியில் உள்ள கடையில் திங்களன்று ஆர்டர் செய்ய, அதை வியாழனன்று அவர் தனது வீட்டிலேயே பெற்றுக்கொள்ள முடிகிறது.
ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் அதிகாரபூர்வ தகவல்களின் படி, ஒற்றைச் சந்தை ஆரம்பித்து வெறும் பத்து வருடங்களிலேயே ஐரோப்பாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.2%, அதாவது €233 பில்லியன் அதிகரித்தது. அதே போல முதல் பத்து வருடங்களில் 2.75 மில்லியன் வேலைவாய்ப்புக்களை உருவாக்கியது. இது மொத்த வேலைவாய்ப்பில் 1.4% அதிகரிப்பைக் குறிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான வர்த்தகத்தை 22% அதிகரித்தது மட்டுமல்லாமல் உலகச் சந்தைகளில் போட்டியிடும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் திறனை அதிகரித்து, மூன்றாம் உலக நாடுகளுடனும் வர்த்தகப் பங்காளியாக மாற்றியது. இதன் விளைவாக 1993 - 2016க்கு இடையில் மட்டுமே மூன்றாம் உலக நாடுகளுக்கான பொருள்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி 5 முதல் 43% வரை உயர்ந்தது. சுமார் 300 பில்லியன் யூரோ மேலதிக வருமானத்தை வருடத்துக்கு ஈட்டிக் கொடுக்கிறது.
ஐரோப்பிய பொதுச் சந்தையானது ஐரோப்பிய ஒற்றுமைக்கான ஒரு இயக்கி மட்டுமல்ல, அது ஒரு பொருளாதார வெற்றிக் கதையும் கூட.

ஐரோப்பிய ஒற்றைச் சந்தை எதிர்கொள்ளும் சவால்கள்
ஐரோப்பிய ஒற்றைச் சந்தையினால் எல்லா ஐரோப்பிய நாடுகளும் நன்மை அடைகின்றனவா என்றால் இல்லை என்பதே பதிலாகும். முதலில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே உள்ள எந்த ஐரோப்பிய நாடும் ஒற்றைச் சந்தையினால் எந்த நன்மையையும் பெறவில்லை. இரண்டாவது இந்த ஒற்றைச் சந்தையினால் பாரியாளவு நன்மை பெறுவது ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மிகப்பெரிய வல்லரசுகளும், போலாந்து, ரோமானியா போன்ற மிகச் சிறிய மேற்கு ஐரோப்பிய நாடுகளுமே. ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடுகள் தமக்குத் தேவையான மூலப்பொருள்களையும், தொழிலாளர்களையும் மலிவு விலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்கின்றன. அதே போல ஐரோப்பிய யூனியனில் இணைந்து கொண்ட மிகச்சிறிய, வறிய நாடுகளான லிதுவேனியா, ஹங்கேரி போன்றவை ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் தரமான பொருள்களைக் குறைந்த விலையில் அனுபவிக்கின்றன. அதே போலப் பெரிய நிறுவனங்களின் மோனோபோலி, குறிப்பிட்ட ஒரு தொழில் அல்லது சேவை மீது மேலாட்சி செலுத்தி கட்டுப்பாட்டைக் கையில் எடுத்துக் கொள்ளுவதால் சிறிய வணிகங்கள் பாதிக்கப்படுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய ராஜ்ஜியம் வெளியேற்றமும், உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோயும் தற்போது ஐரோப்பா எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள். 2020 ஜனவரி 31 அன்று ஐக்கிய ராஜ்ஜியம் அதிகாரப்பூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. 1 ஜனவரி 2021 அன்று ஐரோப்பிய ஒற்றைச் சந்தையிலிருந்தும் வெளியேறியது. ஆயினும் ஐக்கிய ராஜ்ஜியத்துடன் நெருக்கமான வர்த்தக உறவைத் தொடர விரும்பும் ஐரோப்பிய ஒன்றியம் அந்த இலக்குடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.
சில வருடங்களுக்கு முன்னர் வரை பரபரப்பாகப் பேசப்பட்ட பிரெக்ஸிட்டின் (BREXIT) தற்போதைய நிலவரம் என்ன? மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து இணையுமா? பிரெக்ஸிட்டினால் அடி வாங்கியது ஐரோப்பாவா, இல்லை ஐக்கிய ராஜ்ஜியமா? விரிவான அலசல் அடுத்த வார யூரோ தொடரில்...