2022 டிசம்பர் 18 அன்று கத்தாரில் நடைபெற்ற `ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை 2022'-யை அர்ஜென்டினா வென்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை நடைபெற்றதன் மூலம் பல்வேறு துறைகளில் நடைபெற்ற வணிகம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
ஃபிஃபா (FIFA)
2022 கத்தார் உலகக் கோப்பையின்போது வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் ஃபிஃபா (FIFA) சுமார் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.60,000 கோடிக்கு மேல் ) சம்பாதித்துள்ளது, இது 2018-ம் ஆண்டு ரஷ்யா உலகக் கோப்பையின்போது சம்பாதித்ததைவிட 1 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8,000 கோடிக்கு மேல் ) அதிகம்.
இந்தக் கால்பந்து உலகக் கோப்பையின்போது வருவாய் அதிகரித்துள்ளது. செலவு குறைக்கப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது. ஃபிஃபா (FIFA) முழுப் போட்டியையும் ஒரே நகரத்தில் நடத்தியது. எட்டு மைதானங்களும் தோஹாவின் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்தன. இதனால் பயணச் செலவுகள் மற்றும் கூடுதல் உள்கட்டமைப்புகள் குறைக்கப்பட்டன.

ஜியோ சினிமாமூலம் 3.2 கோடி பார்வையாளர்கள்...
அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் இடையேயான இறுதிப் போட்டியை ஜியோ சினிமா ஆப் மூலம் சுமார் 32 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை 2022 இந்தியாவில் டிவியைவிட அதிக டிஜிட்டல் பார்வையாளர்களைக் கொண்ட முதல் மார்க்கீ விளையாட்டு நிகழ்வு ஆகும்.
25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...
18 டிசம்பர் 2022 அன்று அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் இடையே நடைபெற்ற 2022 ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது கூகுள் தேடல் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக டிராஃபிக்கைத் தாக்கியது.

பைஜூஸின் பிராண்ட் தூதுவர் மெஸ்ஸி...
ஆன்லைன் வழிக்கற்றல் முறையிலான கல்வி கற்பிக்கும் பிசினஸை ஸ்டார்ட் அப்பாக தொடங்கி குறுகிய காலத்திலேயே யுனிகார்ன் நிறுவனமாக மாறியது பைஜூஸ். இந்நிறுவனம் அதன் உலகளாவிய பிராண்ட் தூதராக லியோனல் மெஸ்ஸியை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
``நான் பைஜூஸ்-வுடன் கூட்டாளராகத் தேர்வு செய்தேன். ஏனென்றால், அனைவரையும் கற்றலை நேசிக்க வைப்பது அவர்களின் நோக்கம். இது எனது சிந்தனையுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. கற்கும் இளம் மாணவர்களை முதலிடத்தை அடைய ஊக்குவிப்பேன் என நம்புகிறேன்” என்று கூறினார் மெஸ்ஸி.

நாமக்கல்லில் இருந்து முட்டை சப்ளை...
கத்தாரின் தற்போதைய சப்ளையர் துருக்கி முட்டை விலையை உயர்த்தியதால், நாமக்கல் மாவட்டம் கத்தாருக்கு முக்கிய முட்டை சப்ளையராக உருவெடுத்துள்ளது. ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை 2022 போட்டியின் காரணமாக நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கை 2.5 கோடியாக உயர்ந்துள்ளது.
``பொதுவாக, நாங்கள் கத்தாருக்கு மாதம்தோறும் 1 கோடிக்கும் குறைவான முட்டைகளை ஏற்றுமதி செய்கிறோம். ஆனால், கடந்த இரண்டு மாதங்களில், ஃபிஃபா உலகக் கோப்பையின் காரணமாக மாதம்தோறும் 2 முதல் 2.5 கோடி முட்டைகளின் தேவை அதிகரித்துள்ளது” என்று தமிழ்நாடு கோழிப்பண்ணை சார்பாக கே.சிங்கராஜ் கூறியுள்ளார்.
இப்போது நடந்துமுடிந்திருக்கும் ஃபிஃபா பிசினஸ் ரீதியாக மிகப் பெரிய அளவில் மாறியிருக்கிறது. அடுத்த முறை நடக்கும் ஃபிஃபா போட்டி இன்னும் பெரிய அளவில் மாறும் என்பது சந்தேகமே இல்லை!