Published:Updated:

ஆன்லைனில் தங்கம் வாங்கப்போகிறீர்களா... இந்த 10 விஷயங்களைக் கடைப்பிடிக்க மறக்காதீர்! 

தங்கம்
தங்கம்

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், தங்கம் பெருகும் என்பதும், வாழ்க்கை வளமாகும் என்பதும் மக்களிடம் இருக்கும் நம்பிக்கை.

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து பெரிய பெரிய வணிக வளாகங்கள், நகைக்கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.

பொதுவாக, அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், தங்கம் பெருகும் என்பதும், வாழ்க்கை வளமாகும் என்பதும் மகள் பலரிடம் இருக்கும் நம்பிக்கை. அதனால், ஒவ்வோர் ஆண்டும் அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

கொரோனா பாதிப்பின் காரணமாக, அனைத்து நகைக்கடைகளும் மூடப்பட்டிருப்பதால், ``சக்ரா கோல்டு, மேரி கோல்டு, கோல்டு வின்னர் எனப் பெயரில் மட்டுமே தங்கம் இருக்கும் பிராண்டுகளை வேண்டுமானால் வாங்கலாம். நேரடியாகக் கடைக்குப் போய் தங்கம் வாங்க முடியாது" என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

ஆனால், நகைக் கடை உரிமையாளர்கள் அட்சய திருதியை தினத்தில் மக்களைத் தங்கம் வாங்க வைப்பதற்கு, எந்த வருடமும் இல்லாதபடி, இந்த வருடம் புதுமாதிரியான உத்தியைக் கையில் எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய ஹைலைட்.

அதாவது, அட்சய திருதியை தினமான இன்று, வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட நகைக்கடையின் இணையதளத்துக்குச் சென்று ஆன்லைனில் தங்கத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம். எவ்வளவு கிராம் தங்கம் வேண்டுமோ? அதற்கான பணத்தை செலுத்தி அதை வாங்கலாம்.

ஊரடங்கு காலம் முடிந்ததும், எந்தக் கடைகளில் `புக்கிங்’ செய்தீர்களோ, அந்தக் கடைக்குச் சென்று தங்க நாணயமாகவோ நகையாகவோ வாங்கிக் கொள்ளலாம். நகையாக வாங்க விரும்பினால், அதற்கான செய்கூலி, சேதாரத்துக்கு என்று தனியாகப் பணம் செலுத்த வேண்டும்.

தங்கம்
தங்கம்

இந்தப் புதுமுயற்சி குறித்து இந்திய நகை வர்த்தகர்கள் சம்மேளனத்தின் (தமிழக பிரிவு) துணைத் தலைவர் சாந்தகுமார், ``கொரோனா தொற்றினால் நகைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், மக்களால் தங்கநகை வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அவர்களின் இந்தக் கவலையைப் போக்கும் விதமாக, ஆன்லைனில் தங்கத்தை விற்கலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சிறியதும், பெரியதுமாக சுமார் 20,000 நகைக்கடைகள் இருக்கின்றன. அவற்றில் 90% கடைகள், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் இன்று நகைகளை விற்பனை செய்கிறார்கள். 

இந்த வசதியின் மூலம் தங்கத்தை நாணயமாக மட்டுமே வாங்கிக்கொள்ள முடியும். நகையாக வாங்க நினைப்பவர்கள் செய்கூலி, சேதாரத்துக்கான பணத்தையும் ஆன்லைனில் செலுத்த வேண்டும். நகைக்கடைகள் திறந்த பிறகு, ஆர்டர் செய்திருக்கும் தங்க நாணயம் மற்றும் நகைகளைக் கடைக்கு வந்து வாங்கிக் கொள்ளலாம். அல்லது வீட்டுக்கு அனுப்பி வைக்கச் சொன்னால், உரிய கால அவகாசத்துடன் வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்படும். நிறுவனத்துக்கு நிறுவனம் விதிமுறைகள் வித்தியாசப்படும் என்பதை மட்டும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

1. முதலில் தங்க நகையை ஆர்டர் செய்வதற்கு முன்பாக, நகைக்கடை உரிமையாளர்கள் இன்றைய தங்கத்தின் விலையைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்களா அல்லது அதிகமான விலையைக் குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

2. தங்கம் 24, 22,18 மற்றும் 14 காரட் போன்ற பல வகைகளில் கிடைக்கின்றன. நீங்கள் வாங்கப்போவது தங்க நணயம் என்றால், ஆர்டர் செய்வதற்கு முன்னால் காரட் விஷயத்தில் தெளிவாக இருங்கள்.  

Gold
Gold

3. தங்கத்தை நேரடியாகக் கடைக்குப்போய் வாங்கும்போது, ஹால்மார்க் முத்திரை, தங்கத்தின் தரம் மற்றும் எடை சரியாக இருக்கிறதா என ஆயிரத்தெட்டு விஷயங்களைப் பார்த்து வாங்குவோம். ஆன்லைனில் ஆர்டர் அல்லது பிரீ புக் செய்யும் போதும் அதே கவனம் இருக்கட்டும்.

4. நீங்கள் வாங்கப்போகும் தங்கம் சார்ந்த விவரங்களை முழுமையாகப் படித்துப் பார்த்து, அதன்பிறகே பணத்தை செலுத்துவது நல்லது.

5. ஒரு கிராம், 5 கிராம், 8 கிராம் எனத் தங்க நாணயங்கள் பல அளவுகளில் இருப்பதால், ஒரு கிராம் வாங்க நினைத்து 8 கிராம் தங்கத்தை மாற்றி `கிளிக்' செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.  பணத்தைச் செலுத்துவதற்கு முன்னர் ஒருமுறைக்கு, இரண்டு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.  

Gold
Gold

6. ஆன்லைனில் தங்கநகை வாங்குபவர்கள், உங்களுடைய பெயர், பிழையில்லாத வீட்டு முகவரி, மெயில் முகவரி மற்றும் அலைப்பேசி எண்ணைக் கொடுக்கவும். நகைக்கடை உரிமையாளர்கள் தரக்கூடிய கூப்பன் அல்லது ரசீது எதுவாக இருந்தாலும் நீங்கள் கொடுக்கப்படும் விவரங்களின்படிதான் கொடுப்பார்கள் என்பதில் கவனம் இருக்கட்டும்.   

7. ஆன்லைன் ஷாப்பிங்கில் பெரும்பாலான பொருள்கள் சகாய விலையில் கிடைக்கும் என்பது பொது அபிப்ராயம் என்றாலும், இது தங்கத்துக்குப் பொருந்தாது. மலிவான விலையில் தங்கம் என யார் சொன்னாலும் நம்ப வேண்டாம்.

8. நகைக் கடை உரிமையாளரின் ரிட்டர்ன் அல்லது பைபேக் பாலிஸியைக் கட்டாயமாக ஆய்வு செய்யுங்கள். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்தவரை, ஆன்லைனில் விற்கப்படும் ஏனைய பொருள்களுக்குள்ளதைக் காட்டிலும் தங்கத்துக்கான விதிமுறைகள் மிகவும் கெடுபிடியானவை. எனவே, தங்கத்தை ஆன்லைனில் வாங்க முடிவு செய்யும் முன் இந்த நிபந்தனைகளை நன்கு படித்துப் புரிந்துகொள்ள முயலுங்கள். 

``தங்கம் மட்டுமன்று, இவையும் மகாலட்சுமியின் அம்சங்கள்தான்”- எளியமையாக அட்சய திரிதியையை வழிபடுங்கள்!

9. நகையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது `ஹோம் டெலிவரி' ஆப்ஷனை நீங்கள் பயன்படுத்தினால். வீட்டுக்கு நகை வரும்போது, அதன் பேக்கேஜ் ஒழுங்காகச் சீல் செய்யப்பட்டிருக்கிறதா என்பதோடு, அது எவ்வித சிதைவுக்கும் உள்ளாகாமல் இருக்கிறதா என்பதையும் பார்க்கவும். பேக்கேஜிங்கைப் பற்றித் துளியளவு சந்தேகம் உங்களுக்குத் தோன்றினாலும், அதைப் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். 

10. சைபர் குற்றங்கள் அதிகம் நடக்கும் காலகட்டம் இது என்பதால், நீங்கள் தங்கம் வாங்கப்போகும் விற்பனையாளர் வலைதளத்தின் நம்பகத்தன்மையைப் பற்றி நன்கு உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். ஜாக்கிரதை!.

ஹேப்பி அட்சய திருதியை!

அடுத்த கட்டுரைக்கு