Published:Updated:

அறிமுகமான 100-வது ETF திட்டம்: ETF முதலீடு குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

Investment
Investment

நேரடி பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு சந்தையைப் பற்றிய புரிதலும், அனுபவமும் மிக முக்கியமானது ஆகும். அதனால்தான் பெரும்பாலானவர்கள் இ.டி.எஃப் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

இந்திய பங்குச் சந்தையில் ஒரு முக்கிய மைல் கல்லாக நூறாவது எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (ETF) இந்த வாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டு இந்தியாவின் முதல் இ.டி.எஃப், நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 19 ஆண்டுகளில் பல புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு தற்போது நூறாவது இ.டி.எஃப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இ.டி.எஃப்கள் குறித்து கொஞ்சம் விரிவாக அறிந்துகொள்வோம்.

இ.டி.எஃப் என்றால் என்ன?

இ.டி.எஃப் என்பது நிறுவனப் பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் அல்லது தங்கம் இவற்றை அடிப்படையாக கொண்டு, பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் திட்டமாகும். ஓர் உதாரணத்திற்கு இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிப் பங்குகளை தொகுத்து பேங்க் நிஃப்டி என்ற இ.டி.எஃப் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பேங்க் நிஃப்டி இ.டி.எஃபை ஒருவர் வாங்கும் போது அந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பங்குகளிலும் பரவலாக பணம் முதலீடு செய்யப்படும். இது போன்ற திட்டங்களில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வெயிட்டேஜ் அளிக்கப்படும். அந்த வெயிட்டேஜ்க்கு ஏற்ப ஒருவர் முதலீடு செய்யும் பணம் அந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும்.

Stock Market
Stock Market
Photo by Nick Chong on Unsplash

இடிஎஃப் திட்டத்திற்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஃபண்ட் மேனேஜரின் முடிவுகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்படும். அந்தத் திட்டத்தில் இடம் பெற்ற பங்குகளை விற்பதற்கோ, அதில் புதிய நிறுவன பங்குகளை சேர்ப்பதற்கோ முடியும். ஆனால் இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட இண்டெக்சில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் விகிதாச்சாரப்படி மட்டுமே முதலீடு மேற்கொள்ளப்படும். ஓர் உதாரணத்திற்கு நிஃப்டி 50 இண்டெக்ஸ் திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்திருந்தால் நிஃப்டி இண்டெக்சில் இடம் பெற்றுள்ள 50 பங்குகளில் மட்டுமே ஒவ்வொரு நிறுவனத்தின் வெயிட்டேஜ்க்கு ஏற்ப முதலீடு மேற்கொள்ளப்படும்.

இடிஎஃப் திட்டங்களால் என்ன பயன் கிடைக்கும்?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை நிர்வாகம் செய்வதற்காக சிறிய தொகையை முதலீட்டாளரிடமிருந்து பிடித்தம் செய்வர். அதையே முதலீட்டாளர் நேரடியாக பங்குச் சந்தையில் இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடு செய்யும்போது இதுபோன்ற கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், வாங்க விற்க சிறிய தரகு கட்டணம் கொடுக்க வேண்டும். இதன் காரணமாக இ.டி.எஃப் திட்டங்கள் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. மேலும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் தற்போது இதுபோன்ற இ.டி.எஃப் இண்டெக்சில் முதலீடு செய்யும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. இவ்வாறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இண்டெக்சில் முதலீடு செய்தால் அது பேசிவ் ஃபண்ட் என்று அழைக்கப்படும். இது போன்ற பேசிவ் ஃபண்ட்களில் கட்டணங்கள் மற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விட சற்று குறைவாக இருக்கும்.

இ.டி.எஃப் திட்டத்தில் எவ்வாறு முதலீடு செய்வது? 

நாம் ஏற்கனவே கூறியது போல இண்டெக்ஸ்களில் முதலீடு செய்யும் பேசிவ் வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.

நேரடி பங்கு சந்தையில் டிமேட் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் அந்த நேரத்தின் விலையில் இ.டி.எஃப்களை வாங்க முடியும். இண்டெக்ஸின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு வருவாய் கிடைக்கும்.

Stock Market
Stock Market
Photo by Mark Finn on Unsplash
தங்க நகை விற்பனை: அரசின் புதிய ஹால்மார்க் விதிகளை நகை வியாபாரிகள் எதிர்ப்பது ஏன்?

இடிஎஃப் திட்டங்களில் எவ்வளவு தொகை நிர்வாகம் செய்யப்படுகிறது? 

பல்வேறு இ.டி.எஃப் திட்டங்களில் தற்போது ரூ. 3.16 லட்சம் கோடி நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. மக்களின் விருப்பத்திற்கேற்ப அதிக அளவிலான திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 21 இ.டி.எஃப் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடன் பத்திரங்கள், பங்குச் சந்தை, தங்கம் போன்ற பல வகைகளில் முதலீடு செய்யப்படும் இ.டி.எஃப் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இடிஎஃப் திட்டங்களில் ரூ.23,000 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருந்தது. அது ஐந்து ஆண்டுகளில் ஏறக்குறைய 14 மடங்கு உயர்ந்து ரூ.3.16 லட்சம் கோடி ஆகி இருப்பதன் மூலம் நாம் இ.டி.எஃப் திட்டங்களின் வளர்ச்சியை அறிந்து கொள்ள முடிகிறது.

இ.டி.எஃப் திட்டங்களில் எவ்வளவு பேர் முதலீடு செய்திருக்கிறார்கள்?

இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த நிதி ஆண்டில் இரு மடங்காக உயர்ந்து 40 லட்சம் என்ற அளவில் உள்ளது. கடந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக தேசியப் பங்குச் சந்தையில் ரூபாய் 265 கோடி வர்த்தகம் இ.டி.எஃப் திட்டங்களில் நடைபெறுகிறது.

பிரபலமான இ.டி.எஃப் திட்டங்கள் எவை?

தற்போது வரை இ.டி.எஃப் திட்டங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது நிஃப்டி இண்டெக்ஸ் ஆகும். பங்குச் சந்தை தவிர்த்து தங்கத்தில் தற்போது வரை 11 இ.டி.எஃப் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தங்கத்தில் 12 லட்சம் பேர் முதலீடு செய்திருக்கிறார்கள். கோல்டு இ.டி.எஃப் முதலீடு கடந்த 5 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு உயர்ந்து ரூ.16,624 கோடியாக உள்ளது.

ரிஸ்க் குறைவான கடன் பத்திரங்களிலும் 13 இ.டி.எஃப் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களில் ரூ. 40,230 கோடி நிர்வாகம் செய்யப்படுகிறது.

மேலும் இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு மிகக்குறைந்த அளவான 0.001% சதவீதம் மட்டுமே பங்கு பரிமாற்ற வரியாக விதிக்கப்படுகிறது (Security Transaction Tax – STT). இது நேரடி பங்குகளை வாங்குவதற்கு விதிக்கப்படும் வரி அளவினை விட மிகக் குறைவாகும்.

Bombay Stock Exchange (BSE)
Bombay Stock Exchange (BSE)
AP Photo
ஃபிக்சட் டெபாசிட் வட்டி விதிமுறைகளை மாற்றிய RBI; நஷ்டத்தைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும்?

இ.டி.எஃப் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

இடிஎஃப் திட்டங்களில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. திட்டத்தின் வகைக்கு ஏற்ப செய்யப்படும் முதலீட்டுக்கு வருமானம் கிடைக்கும். நிஃப்டி இண்டெக்ஸ் தொடங்கப்பட்டதிலிருந்து சராசரியாக 17.2 சதவீதம் வருமானம் கொடுத்துள்ளது. நீண்ட கால நோக்கில் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் நல்ல வருமானம் தரலாம். குறுகிய காலத்திற்கு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் இ.டி.எஃப் திட்டங்கள் சிறந்தவை.

இடிஎஃப் திட்டங்களில் பெறப்படும் வருவாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டுமா?

திட்ட வகைக்கு ஏற்ப இ.டி.எஃப் திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும்.

நேரடி பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு சந்தையைப் பற்றிய புரிதலும், அனுபவமும் மிக முக்கியமானது ஆகும். அதனால்தான் பெரும்பாலானவர்கள் இ.டி.எஃப் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விட நேரடி இடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யும் தொகைக்கு கட்டணம் குறைவாக செலுத்தினால் போதும். ஆனால் பங்குச் சந்தை முதலீடு என்பது சந்தை அபாயத்திற்கு என்றுமே உட்பட்டது ஆகும். அதனை உணர்ந்து சரியான முறையில் அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப உள்ள இடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்வது நீண்டகால நோக்கில் நல்ல லாபத்தை அளிக்கக்கூடும்.

அடுத்த கட்டுரைக்கு