Published:Updated:

30 வயதை நெருங்குபவரா நீங்கள்... அவசியம் கடைபிடிக்க வேண்டிய 5 நிதிப் பழக்கங்கள்!

ஒவ்வொருவருக்கும் தங்களுடைய 30-வது வயதில் சில நிதிப் பழக்கங்கள் இருப்பது முக்கியம்.

நண்பர்களுடன் அரட்டை, ஊர்சுற்றுவது, கணக்கில்லாமல் செலவு செய்வது என இதுவரை காட்டாற்று வெள்ளமாக ஓடிய மனம், 30 வயதில் கட்டுக்குள் வந்திருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் கடைபிடிக்கும் சில நிதிப் பழக்கங்களின் பலன்கள் வாழ்வின் எல்லைவரை துணைக்கு வரும். அதனால், ஒவ்வொருவரும் தங்களுடைய 30-வது வயதில் சில முக்கியமான நிதிப் பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள்.

2
செலவும், அநாவசிய செலவும்.

1. செலவும், அநாவசியச் செலவும்!

செலவு வேறு; அநாவசியச் செலவு வேறு என்பதை இதுவரை உணராமல் இருந்திருக்கலாம். ஆனால், 30-ஆவது வயதில் நிச்சயமாக உணர்ந்தே ஆக வேண்டும். குடும்பம், பிள்ளைகள் என்று வந்தபிறகு அநாவசிய செலவுகளை அதிகமாகச் செய்தால், குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் பாதிக்கப்படும்.

உதாரணத்திற்கு, காபி குடிப்பது அவசியம். அதை வீட்டில் தயாரித்து, அளவாக அருந்துவது செலவு; நினைத்த நேரத்திலெல்லாம் நண்பர்களுடன் கேன்டீன் சென்று வடை, பஜ்ஜி உள்ளிட்ட சேர்மானங்களுடன் உள்ளே தள்ளுவது அநாவசியச் செலவு.

செல்போனை அடிக்கடி மாற்றுவது, தேவையற்ற டி.வி சேனல்கள், மழை, குளிர்காலங்களில் ஏசி பயன்படுத்துவது, பக்கத்திலிருக்கும் கடைக்குக்கூட பைக்கில் போவது போன்ற பழக்கங்களைக் கண்டறிந்து குறைத்துக்கொண்டால், மாதா மாதம் ஒரு கணிசமான தொகையைச் சேர்க்க முடியும்.
3
அவசர கால நிதி

2. அவசரத் தேவைக்கு காப்பீடு... மிக மிக அவசியம்!

வாழ்க்கை என்பது ஏற்றம் இறக்கம் நிறைந்தது. எப்போது, எந்த வடிவில் சோதனைகள் வரும் என்று யாருக்குத் தெரியும்... தயார்நிலையில் இருந்தால் மட்டுமே எதையும் துணிச்சலாக நம்மால் எதிர்கொள்ள முடியும். இதற்குத் தேவை, `எமெர்ஜென்ஸி ஃபண்டு’ என்ற அவசர கால நிதி. வரவும் செலவும் சரிசமமாக இருக்கும் நிலையில் அவசரமாவது, நிதியாவது என்கிறீர்களா...

மற்ற விஷயங்களை அசால்ட்டாக டீல் செய்வது போல, அவசர கால நிதி உருவாக்கும் விஷயத்தில் நடந்துகொள்ளக்கூடாது. தற்போதைய வயதில், உங்களுடைய சம்பளம் மாதம் சுமார் 40,000 ரூபாயாக இருக்கலாம். குறைந்தபட்சம் மூன்று மாதச் சம்பளத்தை, அதாவது 1,20,000 ரூபாயை வங்கி ஃபிக்சட் டெப்பாசிட்டில் கண்டிப்பாக அவசர கால நிதியாகச் சேமித்து வைத்திருப்பது முக்கியம். அதிகபட்சம் ஆறுமாத காலத்துக்குத் தேவையான சம்பளத்தைக் கையில் வைத்திருந்தால், அதன் மூலம் கிடைக்கும் தைரியமே தனி.

4
Health Insurance

3. காப்பீடு... மிக மிக அவசியம்!

உங்களின் முக்கிய சொத்து எது... நீங்கள் வாங்கிய வீடா, காரா, நகையா? இவை எதுவுமில்லை. இவற்றை வாங்க ஆதாரமாக விளங்கிய உங்கள் உடல்நலம்தான் உங்களின் முக்கிய சொத்து.

வாழும்போது ஏற்படும் நோய்குறித்த செலவுகளுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ்; வாழ்க்கைக்குப் பிறகு ஆதாரமின்றித் தவிப்பவர்களுக்கு உதவும் லைஃப் இன்ஷூரன்ஸ். இந்த இரண்டும்தான் மிக அத்தியாவசியமானவை. மற்ற இன்ஷூரன்ஸ்களில் முதலீடு செய்வதெல்லாம் முட்டாள்தனம். இதுவரை எப்படியோ பரவாயில்லை. 30 வயதுக்குப் பிறகாவது இன்ஷூரன்ஸை முதலீட்டுக் கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்துங்கள். இன்ஷூரன்ஸ் என்பது முதலீடு அல்ல. இன்ஷூரன்ஸ் என்பது ஆபத்துக்காலத்தில் உதவும் உங்களுடைய உற்ற நண்பனே. 

சிலர், `நாற்பதுக்குப் பிறகுதானே நோய் நொடிகள் வரும்... அப்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அலட்சியமாக இருப்பார்கள். ஆனால், இன்ஷூரன்ஸ் பிரீமியமும் அப்போது அதிகமாகிவிடும், உஷார்!

5
எதிர்கால முதலீடுகள்

4. எதிர்கால இலக்குக்கான முதலீடுகள்!

30 வயதில் குழந்தைகளின் கல்வி, அவர்களின் திருமணச் செலவுகளுக்குத் தேவையான நிதி என யோசிக்க ஆரம்பிக்கிறீர்கள் எனில், நீங்கள் ஒரு ஃபைனான்ஷியல் தந்தையாகவோ தாயாகவோ இருக்கத் தகுதியானவர். இந்த வயதிலும் அதைப் பற்றி நீங்கள் யோசிக்காமல் விடுவது, உங்களுடைய எதிர்காலத்தை மட்டுமல்ல, பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிடும். அதனால், இப்போதே மகள் அல்லது மகனுக்காக மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டை ஆரம்பியுங்கள். எதிர்கால தேவையைப் பொறுத்து, மாதம் ஒரு தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்து வாருங்கள். தங்கத்தின் மீதான தேவை இருந்தால், அதிலும் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

6
ஓய்வுக்கால முதலீடு

5. 60 முதல் ஆயுள் வரை!

முன்பெல்லாம் 58 வயதுக்குப் பிறகு பலரும் ஓய்வுபெறுவார்கள். இன்றைக்கு 50 வயதில் ஓய்வுபெற முடியுமா என்று யோசிக்கிறார்கள். 30 வயதிலேயே ஓய்வுக்காலத்துக்கான திட்டத்தை கவனத்தில்கொள்ள வேண்டும்.

காரணம், இளமைப் பருவத்தில் கல்விக்கு, கல்யாணத்துக்கு, வீடு கட்ட, கார் வாங்க என்று எல்லாவற்றுக்கும் கடன் கிடைக்கும். ஆனால், ரிட்டயர்டு ஆன பிறகு ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க எந்தக் கடனும் கிடைக்காது. அதனால் வரும் கஷ்டங்களைச் சமாளிக்க உடலில் தெம்பும் இருக்காது.

உறவினர் கடன் கேட்டால், 'இல்லை' என்று சொல்லவும் கற்றுக்கொள்ள வேண்டும்... ஏன்?

இதையெல்லாம் உணர்ந்துதான், அரசாங்கமே புராவிடென்ட் ஃபண்டு, வாலன்டரி புராவிடென்ட் ஃபண்டு, பப்ளிக் புராவிடென்ட் ஃபண்டு என்றெல்லாம் திட்டங்கள் வைத்திருக்கிறது. இவற்றுடன் நேஷனல் பென்ஷன் ஸ்கீம், இ.எல்.எஸ்.எஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி, ரிட்டயர்மென்ட் வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்ளலாம். .

`காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்பார்கள். வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளைத் தயார்செய்துகொள்ள, உங்களுடைய 30 வயதுதான் சரியான தருணம். இப்போதே தயாராகுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு