Published:Updated:

50-30-20... கடன் இல்லை, கஷ்டமும் இல்லை... கலகலப்பான வாழ்க்கைக்கு கைகொடுக்கும் ஃபார்முலா!

50-30-20...
பிரீமியம் ஸ்டோரி
50-30-20...

கவர் ஸ்டோரி

50-30-20... கடன் இல்லை, கஷ்டமும் இல்லை... கலகலப்பான வாழ்க்கைக்கு கைகொடுக்கும் ஃபார்முலா!

கவர் ஸ்டோரி

Published:Updated:
50-30-20...
பிரீமியம் ஸ்டோரி
50-30-20...

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் முன்னணிப் பணக்காரர் களில் பத்தோடு பதினொன்றாக இருந்த கெளதம் அதானி, கடந்த வாரத்தில் உலகின் இரண்டாவது பணக்காரர் ஆனார். அதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் அவர் மூன்றா வது மிகப் பெரிய பணக்காரராக இருந்தார். ஆனால், சில வாரங்களிலேயே மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். விரைவில் முதல் இடத்தைப் பிடித்துவிடுவார் போலிருக்கிறது.

அதானியின் இந்த அதிவேக வளர்ச்சியைப் பார்க்கும் பலரும், ‘‘எப்படி இந்தப் பணக் காரர்கள் மட்டும் இவ்வளவு வேகமாக வளர்கிறார்கள், நாம் மட்டும் ஏன் இப்படி காலம் முழுக்க கடனிலும் கஷ்டத்திலும் இருக்கிறோம்’’ என்கிற கேள்வியைத் தங்களுக் குள்ளேயே கேட்டுக்கொள்கிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணமாக நிதித் துறை நிபுணர்கள் சொல்வது இதுதான்...

பணக்காரர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை சரியாக நிர்வாகம் செய்கிறார்கள். பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களிடம் பக்காவான பிளான் இருக்கிறது. ஆனால், ஏழைகள் தங்களுடைய வருமானத்தை முழுவதுமாக செலவு செய்துவிடுகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் வருமானமே மிக மிக சொற்பம்தான். அந்தப் பணத்தில் இருந்து அவர்களால் எப்படி சேமிக்க முடியும் என்பதே அவர்கள் கேட்கும் முக்கியமான கேள்வி.

நடுத்தர வர்க்கத்தினரில் சேமிக்கும் பழக்கம் இருப்பவர்களும் தேய்மானம் அதிகம் உள்ளவற்றை வாங்கவே அதிக பணத்தை செலவு செய்கின்றனர். உதாரணமாக, ஏற்கெனவே வாங்கிய பைக் நன்கு ஓடக்கூடிய நிலையில் இருந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பைக்கை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

இன்னும் சிலர், பணவீக்கத்தால் பாதிக்கக் கூடிய, குறிப்பிட்ட காலத்தில் கணிசமான வளர்ச்சி அடையாதவற்றில் பணத்தைக் கட்டி மதிப்பை இழந்து கொண்டு இருப்பார்கள். உதாரணமாக, ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை சேமிப்பு அல்லது முதலீடு என்று நினைத்து 10, 20 ஆண்டுகள் பணம் கட்டுவார்கள். ஆனால், அதில் இருந்து கிடைக்கும் வருமானம் வெறும் 4% என்பதை பிற்பாடு அறிந்து வருத்தப்படுவார்கள்.

50-30-20... கடன் இல்லை, கஷ்டமும் இல்லை... கலகலப்பான வாழ்க்கைக்கு கைகொடுக்கும் ஃபார்முலா!

என்னதான் தீர்வு?

இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு, ஏழைகளும், நடுத்தர மக்களும் கடன் இல்லாத பணக்கஷ்டம் இல்லாத வளமான நிதிநிலையை அடைய என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ளும்முன், இந்த நிலை நம் நாட்டில்தான் என்று நினைக்க வேண்டாம். மிகவும் வளர்ந்த நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவிலும் இதே நிலை தான். அமெரிக்காவில் பெரும்பகுதியான மக்கள் கடனிலும், ஏழ்மையிலும்தான் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், அங்கிருக்கும் மக்கள் மிகக் குறைந்த அளவிலேயே சேமிக் கின்றனர். இதைச் சரிசெய்ய அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரன் ‘All Your Worth: The Ultimate Lifetime Money Plan’ என்ற புத்தகத்தில் 50-30-20 என்ற பட்ஜெட் விதியை அறிமுகப் படுத்தினார். இப்போது இந்த விதி அமெரிக்காவைத் தாண்டி, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.

50-30-20 விதி என்ன சொல்கிறது?

அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரன் சொல்லும் 50-30-20 விதி என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கும்முன், இன்றைக்கு நம் குடும்பங்களில் நிதி மேலாண்மை எப்படி நடக்கிறது என்று பார்ப்போம்.

இன்றைக்குப் பெரும்பாலான குடும்பங்களின் பிரச்னை, மாதம் 20-ம் தேதியைத் தாண்டினால் கையில் நூறு ரூபாய்கூட இருப்பதில்லை. என்ன செலவு செய்தோம், எவ்வளவு செலவு செய்தோம் என்பதே பலருக்கும் தெரிவதில்லை. மாதச் சம்பள மாகக் கணிசமான தொகை கிடைத்தாலும், சரியான வரவு செலவு நிர்வாகம் இல்லாததால், அவசியமான காலத்திலும், அவசரமான காலத்திலும் பணத்துக்குத் திண்டாடும் கஷ்டத்துக்கு ஆளாகிறோம். இதற்கொரு எளிய தீர்வாகத்தான் 50-30-20 என்ற பட்ஜெட் விதியை முன்வைக்கிறார்கள் நிபுணர்கள் மற்றும் குடும்ப நிதி ஆலோசகர்கள்.

ஒரு குடும்பத்தில் ஒவ்வொரு மாதமும் வரும் வருமானத்தை முறையாகத் திட்டமிட்டு செலவுகளையும் சேமிப்பையும் செயல்படுத்தினால் எல்லோராலும் மனநிறைவான மகிழ்ச்சி யான, பணக்கஷ்டம் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்பதுதான் 50-30-20 விதியின் அடிப்படை. அதாவது, நாம் சம்பாதிக்கும் பணத்தை 50%, 30%, 20% என்ற வகையில் பிரித்து நம்முடைய அன்றாடத் தேவைகளையும், எதிர்கால தேவை களையும் எந்தவிதமான கடனும் பணக் கஷ்டமும் இல்லாமல் பூர்த்தி செய்துகொள்வதுதான் இந்த விதியின் சாராம்சம்.

50-30-20 விதியை நம் வாழ்க்கையில் எப்படி நடை முறைப்படுத்துவது என்று பார்ப்போம்.

50% - அத்தியாவசியம்...

நம் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமாக உள்ள தேவைகளுக்கான செலவுகளுக்காக நம் வருமானத்தில் 50% பணத்தை முதலில் ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என்கிறது இந்த விதி. அதாவது, இந்தச் செலவு கள் தவிர்க்க முடியாதவை யாகவும் தவிர்க்கக் கூடாதவை யாகவும் இருக்கும். வீட்டு வாடகை, மளிகை, உடை, குழந்தைகளின் படிப்பு, மருந்துகள், போக்குவரத்து, கடனுக்கான மாதத் தவணை, காப்பீட்டுக்கான பிரீமியம், மின் கட்டணம் போன்றவை அத்தியாவசிய செலவுகள். இதற்காக 50% வருமானத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

இதிலும் கண்ணை மூடிக் கொண்டு செலவு செய்யக் கூடாது. உதாரணமாக, வீட்டு வாடகையே பெரும் தொகையை எடுத்துக்கொள் வதாக இருக்குமானால், மற்ற அத்தியாவசிய செலவு களுக்குப் பணம் போதாமல் போகும் நிலைதான் வரும். அத்தகைய நிலை ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது.

50-30-20... கடன் இல்லை, கஷ்டமும் இல்லை... கலகலப்பான வாழ்க்கைக்கு கைகொடுக்கும் ஃபார்முலா!

30% - ஆசைகள்...

ஆசைகள் இல்லாத மனிதர்கள் இல்லை. இன்று ஆசையைத் தூண்டுவதற் கான வழிகளும் வாய்ப்புகளும் அதிகம். பரபரப்பான வாழ்க் கையில் கொஞ்சம் பொழுது போக்கும், கொண்டாட்டமும் அவசியம். அது இல்லை எனில், வாழ்க்கை போரடித்து விடும். முக்கியமாக, குடும்ப உறுப்பினர்களின் வெறுப் புக்கு ஆளாக வேண்டி இருக்கும். வருமானத்தில் 30% தொகையை நம்முடைய ஆசைகள் மற்றும் விருப்பங் களை நிறைவேற்ற ஒதுக்குவது அவசியம்.

உதாரணமாக, மாதம் ஒரு முறையாவது தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது, ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுவது, லேட்டஸ்ட் ஸ்டைலில் ஆடைகள், ஃபேஷன் சாதனங்கள், கேட்ஜெட்டுகள், ஜிம், சுற்றுலா, பார்ட்டி போன்றவை இதில் அடங்கும்.

இந்தச் செலவுகள் தவிர்க்க முடியாதவை என்றாலும் இவற்றை மேற்கொள்வதிலும் மிகவும் கவனம் வேண்டும். ஏனெனில், ஆசைக்கு எல்லையே இல்லை. சிலர், அடிக்கடி செல்போனை மாற்றுவார்கள்; இன்னும் சிலர் புதுப்புது ஆடைகளை வாங்கிக்கொண்டே இருப் பார்கள். சுற்றுலா செல்லும் போது, திட்டமிடாமல் எங்கேயாவது போய் இஷ்டத் துக்குச் செலவு செய்து, பிற்பாடு மிகவும் கஷ்டப்படுவார்கள். ஆசைகளுக்காக நாம் ஒதுக்கும் தொகையை மீறி செலவுகள் எதையும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

50-30-20... கடன் இல்லை, கஷ்டமும் இல்லை... கலகலப்பான வாழ்க்கைக்கு கைகொடுக்கும் ஃபார்முலா!

20% - சேமிப்பும் முதலீடும்...

நம்முடைய வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது, 20% பணத்தை சேமிப்புக்காகவும், முதலீட்டுக்காகவும் ஒதுக்க வேண்டும் என்கிறது இந்த விதிமுறை. அத்தியாவசிய செலவு, ஆசைகளுக்கான செலவு இரண்டுக்குமான ஒதுக்கீடுகள் நிகழ்கால வாழ்க்கைக்கானது எனில், இந்த 20% ஒதுக்கீடானது எதிர்காலத்துக்கானது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, பெரும்பாலும் வருமானம் கைக்கு வந்ததுமே முதலில் செய்ய வேண்டியது இந்த சேமிப்பு/முதலீட்டுக்கான ஒதுக்கீடாகத்தான் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த சேமிப்பு/முதலீடுக்கான ஒதுக்கீட்டை தவறவிடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்க வேண்டும்.

சரி, விதிமுறை என்ன சொல்கிறது என்று தெரிந்து கொண்டுவிட்டோம். உடனே இந்த விதியைச் செயல்படுத்திவிட முடியுமா, இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்துவது எந்தளவுக்கு சாத்தியம், எல்லோராலும் இதைக் கடைப்பிடிக்க முடியுமா என்ற கேள்வியும் எழும். கொஞ்சம் மெனக்கெட்டால் எல்லோராலும் முடியும் என்கிறார் நிதி ஆலோசகர் வித்யா பாலா. எப்படி 50-30-20 விதிப்படி பட்ஜெட் போட்டு வாழ்க்கையை வளமாக்கிக்கொள்வது என்று விரிவாக எடுத்துச் சொன்னார்.

“பட்ஜெட் போட்டு வாழ்வது எல்லாத் தரப்பு மக்களுக்குமே மிக அவசியமான ஒன்று. மாதம் 10,000 சம்பாதிப் பவருக்கும் சரி, மாதம் தோறும் கோடிகளில் சம்பாதிப்பவருக்கும் சரி, தன்னுடைய வரவு, செலவு குறித்த தெளிவு இல்லையெனில், பண நெருக்கடிக்கு ஆளாக வேண்டியிருக்கும். இதுவரை எந்தவித வரவு, செலவு மேலாண் மையும் இல்லாமல் பணத்தைக் கையாண்டவர்களும் எளிதில் இந்த விதியைச் செயல் படுத்த முடியும்.

அதற்குமுன் முதலில் எல்லோருமே மூன்று மாதங்களுக்கு தங்களுடைய செலவுகளைக் கண்காணிக்க வேண்டும். அந்தச் செலவுகள் 50-30-20 விதியின்படி, எந்த வகைக்குள் அடங்குகிறது என்று பாருங்கள். செலவுகளைக் கணக்கிட்டு உங்களுடைய வருமானத்தில் எவ்வளவு சதவிகிதம் எதில் செலவு செய்திருக்கிறீர்கள் என்பதையும் பாருங்கள். அதிலேயே உங்களுடைய நிதிநிலைமையும், உங்களுடைய செலவு முறையும், நிதி சார்ந்த ஒழுக்கமும் எப்படி இருக்கிறது என்பது தெரிந்துவிடும். அதன்பிறகு, இந்த விதிக்குட்பட்டு உங்களுடைய வரவு, செலவுகளைத் திட்டமிடும் வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

அதாவது, உங்களுடைய செலவுகளில் எவையெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அவற்றை எல்லாம் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வர வேண்டும். தேவை இல்லாத செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். அதற்கு ஆசைகள், விருப்பங்களைத் தள்ளிப்போடும் பழக்கத்தைப் பழக்கப்படுத்த வேண்டும். இது குறித்து 1960-களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மிகவும் பிரபலம்.

ஸ்டான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் வால்டர் மிஷெல் குழந்தைகளிடம் மார்ஷ்மெலோ (பஞ்சு மிட்டாய் மாதிரியான ஒரு இனிப்பு) பரிசோதனையை நிகழ்த்தினார். குழந்தைகளிடம் ஒரு மார்ஷ்மெலோ கொடுத்து அதைக் குறிப்பிட்ட நேரத்துக்கு சாப்பிடாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். அப்படி சாப்பிடாமல் பொறுமையாக இருந்தால், கூடுதலாக ஒரு மார்ஷ்மெலோ தருவாகத் சொன்னார். குழந்தைகளில் பெரும்பாலானோர் ஆசையை அடக்க முடியாமல் மார்ஷ்மெலோவை எடுத்து சாப்பிட் டார்கள். சிலர் மட்டுமே பொறுமையாக இருந்து கூடுதல் மார்ஷ்மெலோவை வென்றனர். இதிலிருந்து யாரெல்லாம் தங்களுடைய ஆசையைத் தள்ளிப் போட்டார்களோ, அவர்கள் எல்லாம் சிறப்பான வளர்ச்சியை எட்டுவார்கள் என்று கண்டறிந்தனர். நம்முடைய இன்றைய ஆசைகளை உடனடியாக நிறைவேற்றிக்கொள்ளத் துடிக்காமல், பொறுமை யாக இருந்தால், வாழ்க்கையில் சிறப்பான இடத்தை எட்ட முடியும் என்பதுதான் அது.

இன்றைய சூழலில், புதுப்புது கேட்ஜெட்டுகள், ஃபேஷன் ஆடைகள், ஆபரணங்கள், புது கார், வீடு என அனைத்தையும் வாங்கி அனுபவிக்கும் ஆசை எல்லோருக்கும் வரத்தான் செய்யும். ஆனால், ஆசை களுக்கு ஆட்பட்டு கட்டுப்பாடு இல்லாமல் செலவுகளைச் செய்தால் கஷ்டத்தை அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.

வேலைக்குச் சேர்ந்த ஆரம்பத்திலேயே தனிநபர் கடன், கிரெடிட் கார்டு, இ.எம்.ஐ-யில் புதிய பைக், புதிய கார், புதிய விலை உயர்ந்த மொபைல் என வாங்குவதற்குப் பதிலாக, என்ன வாங்க வேண்டும் என்று விருப்பப்படுகிறீர்களோ, அதற்கான தொகையை இலக்கு நிர்ண யித்து ஒவ்வொரு மாதமும் சேமித்து வந்தால் வட்டி இல்லாமல் அந்தப் பொருள் களை வாங்கிக்கொள்ளலாம். அல்லது ஊதிய உயர்வு வந்த பிறகு, போனஸ் வந்தாலோ அது போன்ற செலவுகளை மேற்கொள்ளலாம்.

அதே போல, கடனில் வீடு வாங்க நினைப்பவர்கள் அது எவ்வளவு சதவிகிதத்தை உங்களுடைய வருமானத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறது என்று கணக்கிட்டு, பின்னர் முடிவெடுக்க வேண்டும். முடிந்தவரை கடன் வாங்கு வதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே கடன் வாங்கி னாலும் வாங்கும் பொருள் மதிப்பு உயர்வதாக இருக்க வேண்டுமே தவிர, மதிப்பைக் குறைப்பதாகவோ, கூடுதல் செலவுகளைக் கொண்டு வருவ தாகவோ இருக்கக் கூடாது. அவற்றையும் பணம் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். மிக மிக அத்தியாவசியமான வற்றை வாங்கவே கடன் வாங்க வேண்டும்.

நம்முடைய செலவுகள் எப்போதுமே நம் வருமானத்துக் குள் இருக்க வேண்டும். வருமானத்துக்கு மீறி செலவுகள் போகக் கூடாது. அதற்கென்று வரவு செலவு மேலாண்மை கட்டாயம் தேவை. ஒவ்வொரு மாதமும் தேவையான பொருள்கள், சேவைகளைப் பட்டியலிட்டு, அதற்கு ஆகும் செலவுகளையும் கணக்கிட்டு பணத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். குறைவான வருமானம் ஈட்டுபவர்கள் அத்தியாவசிய மான செலவுகளுக்குத் தேவையானவற்றை ஒதுக்கி விட்டு, அதுபோக பணம் மிச்சமிருந்தால் சேமிக்க வேண்டும். ஆசைகள், விருப் பங்களை சற்றுக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லோருமே அவசரகால நிதி எனக் குறிப்பிட்ட தொகையை வங்கியில் சேமித்து வைத்திருப்பது அவசியம். அப்போதுதான், திடீர் மருத்துவச் செலவு, திடீர் சுபகாரியச் செலவு, திடீர் போக்குவரத்துச் செலவு போன்றவற்றை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. வேலை இழப்பு ஏற்பட்டாலும், வருமானம் வருவது நின்றா லும் சமாளிக்க உதவும். இந்த அவசரகால நிதி குறைந்த பட்சம் உங்களுடைய 3 முதல் 6 மாத செலவுகளைச் சமாளிக் கும் வகையில் இருக்க வேண்டும்.

இன்றைய நிலையில் பெரு மளவில் வருமானத்தை மீறியும் செலவு செய்யும் பழக்கத்துக்கு ஆளாகக் காரணம், கிரெடிட் கார்டு. வங்கியில் உங்களுடைய சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தைவிட கிரெடிட் கார்டில் அதிகமாக நீங்கள் செலவு செய்பவராக இருந்தால், நீங்கள் உங்களையே எச்சரிக்கை செய்து கொள்ள வேண்டிய கட்டத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். வங்கிக் கணக்கில் பணமே இல்லாமல் கிரெடிட் கார்டில் செலவு செய்பவராக இருந்தால், முதலில் அதை மாற்றிக்கொள்ளுங்கள். கிரெடிட் கார்டு என்பது வரவு செலவுகளை முறையாக நிர்வகிக்க முடியும்பட்சத்தில் மட்டுமே பயன் படுத்துவது நல்லது. செலவுகளை எளிமையாகச் செய்யவும், செலவு செய்வதில் கூடுதல் சலுகைகளைப் பெறவும் அவசரமான காலத்தில் பயன்படுத்தவும் தான் கிரெடிட் கார்டு. பணமே இல்லாமல் செலவு செய்வதற்கோ, வருமானத்தை மீறி செலவு செய்வதற்கோ அல்ல என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

எதற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும், எவ்வளவு சேமித்து வைத்தால் நம்முடைய இலக்கு களை எளிதில் எட்ட முடியும் என்கிற தெளிவு பலருக்கும் இல்லாமல் போனதுதான் பலரும் பொருளாதாரத்தில் முன்னேற முடியாமல் போகக் காரணம். எனவே, கவனமாகத் திட்டமிட்டு செலவு செய்தால், கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது; கஷ்டமும் இருக்காது’’ என்றார்.

50-30-20... கடன் இல்லை, கஷ்டமும் இல்லை... கலகலப்பான வாழ்க்கைக்கு கைகொடுக்கும் ஃபார்முலா!

முதலீடு செய்வது அவசியம்...

‘‘வரவு, செலவுகளைத் திட்டமிட்டு செயல்படுத்தி பணத்தை சேமித்தால் மட்டும் நமது பொருளா தார நிலை உயர்ந்துவிடாது. பொருளாதார ரீதியாக நாம் அடுத்தகட்டத்துக்கு உயர வேண்டும் எனில், நம் சேமிப்பை முதலீடாக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும்’’ என்கிறார் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி. அவர் சொன்னதாவது...

“அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகை யில் இந்தியாவில் சேமிக்கும் பழக்கம் அதிகமாகவே உண்டு. ஆனால், சேமிப்பு என்பது ஒருநாளும் நம் செல்வத்தைப் பெருக்காது. நாளுக்கு நாள் உயரும் விலைவாசி, அதிகரிக்கும் செலவுகள், வருமானம் இல்லாமல் போகும் நெருக்கடி போன்றவற்றுக்கான சூழல் இருக்கும் நிலையில். சேமிப்பை முதலீடாக மாற்ற வேண்டியது அவசியம்.

பொதுவாக, நம்முடைய இலக்குகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவசரகாலத் தேவை, குறுகியகாலத் தேவை, நீண்டகாலத் தேவை. எதிர்பாராமல் வரும் செலவுகளை, தேவைகளைச் சமாளிக்க கணிசமான சேமிப்பு அல்லது முதலீட்டைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். இவை அவசரத்துக்குப் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். குறுகிய காலத் தேவையாக உள்ளவை பிள்ளைகளின் படிப்புக் கட்டணம், சுற்றுலா செலவு, பைக், கார் போன்ற செலவுகள் போன்றவற்றுக்கு ஆர்.டி மற்றும் எஃப்.டி, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். நீண்டகால இலக்குகளான வீடு, திருமணம், மேற்படிப்பு, ஓய்வுக்கால நிதி போன்றவற்றுக்குப் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், பி.பி.எஃப், என்.பி.எஸ் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

இன்றைய சூழலில் எல்லோரிடமும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்க வேண்டியது அவசியம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் நம்முடைய நிதிநிலையையே தலைகீழாக மாற்றிவிடும் என்பதால் இந்த விஷயத்தில் மட்டும் சமரசம் வேண்டாம்.

பெரும்பாலான ஏழை, நடுத்தர மக்கள் வங்கி, தபால் நிலையம் போன்றவற்றில் இருக்கும் சேமிப்புக் கணக்கு தவிர்த்து, தங்கம், சீட்டுப் போடுவது போன்றவற்றில்தான் பணத்தைச் சேமிக்கிறார்கள். வருமானம் குறைவாக உள்ள வர்கள், திடீர் பணத் தேவை களைச் சமாளிக்க இவற்றைப் பின்பற்றி வருவதில் தவறில்லை. இவர்கள் தங்களுடைய வருமானத்தை உயர்த்திக் கொண்ட பிறகு, மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற முதலீடு களைத் திட்டமிடலாம். பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் குறித்து பயம் இருந்தாலோ, அதில் உள்ள ரிஸ்க் குறித்த அச்சம் இருந்தாலோ வங்கி வைப்பு நிதி, தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள், பி.பி.எஃப் போன்றவற்றைத் தேர்ந் தெடுக்கலாம். ஓரளவுக்கு நல்ல வருமானமும், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் குறித்த அறிவும் உள்ளவர்கள் அத்தியா வசிய மற்றும் விருப்பச் செலவுகள் போக தங்களிடமுள்ள உபரி பணத்தை மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்து வரலாம்.

50-30-20 என்ற விதியின்படி, வரவு செலவுகளைத் திட்டமிட்டு செயல்படுத்திவரும் அதே சமயம், வருமானம் உயரும்போது செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்பு, முதலீடு ஆகியவற்றுக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி செல்வத்தைப் பெருக்கி வந்தால், விரைவிலேயே பணக்காரர் ஆகலாம் என்பதை யும் மனதில் வைத்துக் கொள்ளுங் கள்” என்று முடித்தார்.

ஆக, கடன் இல்லாமல் கலகலப்பான வாழ்க்கையை வாழும் வழிகளை சொல்லிவிட்டோம். இனி இதன்படி நடக்க வேண்டியது நீங்கள்தான்!