Published:Updated:

24 பார்சல் வேகன்கள், 550 டன் கொசுவலைகள்... ஒடிசாவுக்கு பறக்கும் கரூர் கொசுவலைகள்!

மொத்தம் 24 பார்சல் வேகன்களில், மொத்தம் 550 டன் எடையுள்ள கொசுவலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ. 21.47 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, இரண்டாம்கட்டமாக ஒடிசா மாநிலத்துக்கு 550 டன் கொசுவலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ரயில்வே நிர்வாகத்துக்கு, ரூ. 21.47 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக, வர்த்தகப் பிரிவு அதிகாரிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.

கொசுவலை ஏற்றுமதி
கொசுவலை ஏற்றுமதி

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த்தொற்று பிரச்னைக்காக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், ரயில், பேருந்து, விமானம் உள்ளிட்ட முக்கியப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. தொழில் நகரங்களான கரூர், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஜவுளி மற்றும் கொசுவலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் பல்வேறுகட்ட தளர்வுகளை மத்திய அரசு அமல்படுத்தியது.

கரூர்: `ஒன்றியச் செயலாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை இல்லை!' - கொதிக்கும் தே.மு.தி.க மா.செ

மத்திய அரசைத் தொடர்ந்து, தமிழக அரசும், குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டு, தொழிற்சாலைகளை இயக்க அனுமதியளித்தது. இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொசுவலை உற்பத்தி தொடங்கப்பட்டது. இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பொருள்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப பார்சல் பிரிவில் புக்கிங் தொடங்கியது.

இதையடுத்து, கரூரில் இருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு ஜவுளி பொருள்கள், கொசுவலை உள்ளிட்ட பொருள்கள் ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. முதல்கட்டமாக, வெளிமாநிலங்களுக்கு கொசுவலைகள் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

கொசுவலை ஏற்றுமதி
கொசுவலை ஏற்றுமதி

இந்நிலையில், இரண்டாம்கட்டமாக கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, ஒடிசா மாநிலத்தில் உள்ள குர்தா சாலைக்கு, சரக்கு ரயில் மூலம் கொசுவலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 24 பார்சல் வேகன்களில், மொத்தம் 550 டன் எடையுள்ள கொசுவலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ. 21.47 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக, வர்த்தகப் பிரிவு அதிகாரிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர். கரூரில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் தடையின்றி ரயில்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுவதால், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்கள் தொழில் இனி சீரடையும் என்று ஜவுளி மற்றும் கொசுவலை உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு