நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி 5-வது இடம்பிடித்த இந்தியா... சாமானிய மக்களின் வருமானம் உயர்ந்ததா?

5-வது இடம்பிடித்த இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
News
5-வது இடம்பிடித்த இந்தியா

பொருளாதாரம்

''இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, உலகளவில் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் ஐந்தா வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது இந்தியா’’ என்கிற செய்தி சமீபத்தில் வெளியாக, அதைப் பலரும் பெருமையுடன் படித்தார்கள். ஆனால், நாம் இன்னும் பல வகையில் பின்தங்கி இருக்கிறோம்; மக்களின் வாழ்க்கைத்தரம் மிகப் பெரியளவில் உயர வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்து ‘தி மின்ட்’ பத்திரிகையில் விளக்கமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார் பொருளாதாரப் பத்திரிக்கையாளரான விவேக் கெளல் (Vivek Kaul).

இந்தக் கட்டுரையில் அவர் தந்திருக்கும் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கும்முன், ஜி.டி.பி வளர்ச்சி குறித்த முக்கியமான வித்தியாசத்தைப் பார்த்து விடுவோம்.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

நாமினல் ஜி.டி.பி-யும் ரியல் ஜி.டி.பி-யும்...

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியானது 3.53 டிரில்லியன் டாலர் என்கிற அளவை இந்த ஆண்டு எட்டி, உலக அளவில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு என்கிற நிலையை இந்தியா அடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்திருக்கிறது. இந்த ஆண்டு முதல் மூன்று மாத உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்த மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் பிரிட்டனின் உள்நாட்டு உற்பத்தி 816 பில்லியன் டாலர், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 854.7 பில்லியன் டாலர் ஆகும். இதன்மூலம் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஐந்தாவது இடத்துக்கு வந்திருக்கிறது இந்தியா.

இந்த மதிப்பீடு தற்போது இருக்கும் விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இயல்பான உள்நாட்டு உற்பத்தியின் (Nominal GDP) மதிப்பாகும். உண்மையான உள்நாட்டு உற்பத்தி (Real GDP) என்பது அடிப்படை ஆண்டில் (நிதி ஆண்டு 2011-12-தான் இந்தியாவுக்கான அடிப்படை ஆண்டாகும்) இருந்த விலையையும் தற்சமயம் நிலவிவரும் பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மதிப்பீடு செய்வதாகும். நாமினல் ஜி.டி.பி-யைவிட ரியல் ஜி.டி.பி பெரும்பாலும் குறைவாக இருக்கும் என்பதோடு பொருளாதார நிலையைத் தெளிவாகத் தெரியப்படுத்துவதுடன், நீண்ட கால பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடவும் பயன்படுத்தப்படும். இயல்பான உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு என்பது அந்தந்தக் கால கட்டத்தில் நிலவும் விலையின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால், ரியல் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு போல ஒப்பீட்டளவில் பொருளாதார வளர்ச்சி குறித்த தெளிவான, சரியான, துல்லியமான தகவலைத் தெரிந்துகொள்ள முடியாது.

இங்கிலாந்தை முந்திவிட்டாலும்...

பொருளாதார ரீதியில் இந்தியாவானது பிரிட்டனை முந்திவிட்டது கணித ரீதியில் சரியாக இருந்தாலும், இன்னும் சில விஷயங்களில் நாம் மிகப் பெரும் முன்னேற்றம் காணவேண்டி இருக்கிறது என்பது பின்வரும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், தெளிவாகப் புரியும்.

இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி  5-வது இடம்பிடித்த இந்தியா... சாமானிய மக்களின் வருமானம் உயர்ந்ததா?

6 கோடி மக்களும், 130 கோடி மக்களும் ஒன்றா..?

1. 2021-ம் ஆண்டு இங்கிலாந்தின் மக்கள் தொகை 6.8 கோடியாகவும், இந்தியாவின் மக்கள் தொகை 139 கோடியாகவும் இருந்தது என்று உலக வங்கி அறிக்கைக் குறிப்பிடுகிறது. 2021-ம் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி (தற்போதைய விலையின் அடிப்படையில்) 3.18 டிரில்லியன் டாலர்; இங்கிலாந்தின் ஜி.டி.பி 3.19 டிரில்லியன் டாலர் என ஐ.எம்.எஃப் அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, 139 கோடி இந்தியர்களின் பொருளாதார உற்பத்தித்திறன் வெறும் 6.8 கோடி ஆங்கிலேயர்களின் உற்பத்தித்திறனுக்கு சமமாக இருக்கிறது. 2022-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் இங்கிலாந்தைவிட பெரிதாக மாறியிருந்தாலும், இந்தியர் ஒருவரின் உற்பத்தித் திறன் அல்லது சராசரி வருமானம் பிரிட்டிஷ்காரரின் சராசரி வருமானத்தைவிட கணிசமான அளவில் குறைவாகவே உள்ளது.

இங்கிலாந்து 47,203 டாலர், இந்தியா 2,283 டாலர்...

2. கடந்த 2021-ம் ஆண்டில், ஐ.எம்.எஃப் அளித்த புள்ளி விவரங்கள்படி, ஆங்கிலேயர் ஒருவரின் தனிநபர் அல்லது சராசரி ஆண்டு வருமானம் 47,203 டாலர் என்றும், இந்தியரின் சராசரி வருமானம் 2,283 டாலர் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, ஆங்கிலேயரின் சராசரி வருமானத்தில் இது 5 சதவிகிதத்துக்கும் குறைவு.

இந்தியப் பொருளாதாரம் இங்கிலாந்தையும் சில ஆண்டு களுக்கு முன்பு பிரான்ஸையும் பின்னுக்குத் தள்ளியிருக்கலாம், என்றாலும், இந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியர் ஒருவரின் சராசரி வருமானம் மிகவும் குறைவாகவே உள்ளது.

இங்கிலாந்து 22-வது இடத்தில்; இந்தியா 193-வது இடத்தில்...

3. கடந்த 2021-ம் ஆண்டில், தரவு கிடைக்கப்பெற்ற 193 நாடுகளின் பட்டியலில் இந்தியா 145-வது இடத்தில் இருந்தது. இந்தியாவானது கென்யாவுக்கு மேலேயும், சாலமன் தீவுகளுக்குக் கீழேயும் இருந்தது. ஆனால், இங்கிலாந்து 22-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் என்னதான் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருந்தாலும் இந்தியர் களின் சராசரி வருமானம் தொடர்ந்து மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.

வாங்கும் திறன் இங்கிலாந்தைவிட இந்தியாவுக்கு அதிகம்...

4. வருமானத்தை ஒப்பிடும் போது, பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் `வாங்கும் திறன் சமநிலை’ யையும் (purchasing power parity) கருத்தில்கொள்வது அவசியம். வாங்கும் திறன் அடிப்படையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை, 2021-ல் சீனா மற்றும் அமெரிக் காவைத் தொடர்ந்து இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் இருந்தது. இங்கிலாந்து ஒன்பதாவது இடத்தில் இருந்தது. ஆனால், தனிநபர் வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பொருளா தாரத்தின் ஒட்டுமொத்த அளவைப் பார்ப்பது சரியான அணுகுமுறை யாக இருக்காது.

சராசரி வருமானம் இந்தியாவிட இங்கிலாந்தில் அதிகம்...

5. கடந்த 2021-ம் ஆண்டில், வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில் சரிசெய்யப்பட்ட இந்தியரின் சராசரி வருமானம் 8,358 டாலராக இருந்தது; ஆங்கிலேயரின் சராசரி வருமானத்தில் (55,301 டாலர்) இது சுமார் 15% ஆகும். எனவே, வாங்கும் திறனைக் கருத்தில்கொண்டு கணக்கிடும்போது இரு நாட்டினருக்குமான இடைவெளி அதிகமாகவே இருக்கிறது.

இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி  5-வது இடம்பிடித்த இந்தியா... சாமானிய மக்களின் வருமானம் உயர்ந்ததா?

இங்கிலாந்து 26-வது இடம்; இந்தியா 125-வது இடம்...

6. தனிநபர் வருமானமானது வாங்கும் திறன் சமநிலைக்கு மாற்றியமைக்கப்பட்டபின், உலகளவில் 193 நாடுகளின் பட்டியலில் இந்தியா 125-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 26-வது இடத்தில் இருக்கிறது. எனவே, இந்த அடிப்படையில் பார்க்கும்போது, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இடைவெளி குறைந்திருந் தாலும் இடைவெளி இன்னும் அதிகமாக உள்ளது.

ஆக, இந்தியப் பொருளாதாரம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருந்தாலும் மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது, அவர்களின் வருமானம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதைக் கருத்தில்கொள்வதும் முக்கியமாகும்.

ஐந்து டிரில்லியன் டாலர் என்கிற இலக்கை நோக்கி செல்லும் நமது இந்தப் பயணத்தில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதையும் கவனத்தில்கொண்டு திட்டங்களை வகுக்க வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரம் பெரிய அளவில் உயராமல், நாட்டின் பொருளாதாரம் மட்டும் வளர்வது பணக்காரர், ஏழை பெரும் இடைவெளியைத்தான் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். மத்திய அரசு இவற்றைக் கவனிக்குமா?