Published:Updated:

``72% மென்பொறியாளர்கள் வேறு துறைகளில் வேலைபார்க்கிறார்கள்" - `மைக்ரோசாஃப்ட்' சத்யா நாடெல்லா ஆதங்கம்

சத்யா நாடெல்லா
சத்யா நாடெல்லா

``இந்திய தலைமை நிர்வாகிகள், தங்களுக்கான சொந்த தொழில்நுட்பத் திறனை உருவாக்கிக்கொள்ள வேண்டும்" - சத்யா நாடெல்லா

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடெல்லா, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருக்கிறார். நேற்று மும்பையில் மைக்ரோசாஃப்ட்டின் 'ஃபியூச்சர் டிகோடட் சிஇஒ (Future decoded CEO)' உச்சிமாநாடு நடந்தது. அதில் அந்நிறுவனத்தின் தலைவர்களும் இந்திய வணிகத் தலைவர்களும் பங்கு பெற்றனர். தொழில்நுட்பம் வரப்போகும் காலங்களில் உலகை எப்படி வடிவமைக்கப் போகிறது என்பது பற்றி அவரவர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியா @ $5 ட்ரில்லியன்... பொருளாதார வளர்ச்சியை  மேம்படுத்தும் தொழில்நுட்பம்!

அந்த உச்சிமாநாட்டில் தலைமை உரையாற்றிய சத்ய நாடெல்லா பேசியது, "இந்திய தலைமை நிர்வாகிகள், தங்களுக்கான சொந்த தொழில்நுட்பத் திறனை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அவற்றைக் கொண்டுதான் இனிவரும் காலங்களில் தீர்வு காண வேண்டும். கடந்த 10 வருடங்களில் தகவல் சேகரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, ஆனால், அது மட்டும் போதாது. உற்பத்திகளை விரிவுபடுத்த டிஜிட்டல் தலையீடுகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 72% மென்பொறியாளர்கள், அவர்களின் துறையைவிட்டு வேறு துறைகளில்தான் பணிபுரிகின்றனர்" என்றார்.

"இந்திய தலைமை நிர்வாகிகள், தங்களுக்கான சொந்த தொழில்நுட்பத்திறனை உருவாக்கிக்கொள்ள வேண்டும்."
சத்யா நாடெல்லா

அவரைத் தொடர்ந்து பேசிய டாட்டா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜேஷ் கோபிநாதன், "இந்தியாவில் உள்ளவர்கள் தனித்துவமான அறிவையும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் தன்மையும் கொண்டவர்கள். அதற்கேற்ப பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கபட வேண்டும். ஐ.டி வட்டத்தில் பல ஆண்டுகளாகச் செயல்படும் திட்டங்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன. 2020-க்குள் அஜைல் (ajile) டெக்னாலஜியை முழுமயாகப் பயன்படுத்தும் சபதத்தை எடுத்தது டிசிஎஸ் நிறுவனம். தற்போதைய நிலையில் 59% டெவெலப்பர்கள் அஜைல் டெக்னாலஜியை மையமாகக் கொண்டு பணிபுரிந்து வருகின்றனர்" என்று கூறினார்.

mukesh ambani
mukesh ambani

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தன் கருத்துகளை சத்யா நாடெல்லாவுடன் பகிர்ந்துகொண்டார், "தொழில்நுட்பத்தின் பின்னணியில் இந்திய பொருளாதாரத்தின் முன்னேற்றம் 300 மில்லியன் டாலரிலிருந்து 3 ட்ரில்லியன் டாலராக முன்னேறியுள்ளது. இதற்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ்ந்தது பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டமாகும். ஜியோ மூலம் என்னுடைய பங்களிப்பும் உள்ளடங்கியதை நினைத்து பெருமைகொள்கிறேன். வளர்ச்சியைப் பொறுத்தவரை, உலகில் முதன்மையான டிஜிட்டல் சமுதாயமாக மாற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது. நாங்கள் விரைவில் உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்போம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு