சாதாரண மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த அவர், இன்று ஆகாசா என்ற ஏர்லைன்ஸ் கம்பெனியை நூறு விமானங்களுடன் துவங்கப் போகிறார்.
1985-இல் வெறும் 5000 ரூபாயுடன் பங்குச் சந்தைக்கு வந்த இவரின் சொத்து மதிப்பு இப்போது ரூ.34,000 கோடி. அத்தனையும் பங்குச் சந்தையில் சம்பாதித்த பணம். அவர்தான் இந்தியப் பங்குச் சந்தையின் ஜாம்பவான் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா. உலகில் பெரிய அளவில் பணம் பண்ண பங்குச் சந்தை ஒரு நல்ல வழி என்று நிரூபித்தவர்களில் இவரும் ஒருவர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தப் பங்குச் சந்தை நம்மிடையே கடந்த 150 வருடங்களாக இருந்தாலும், பலவிதமான மோசடிகள் நடக்கும் மர்மக் கூடாரமாகவே கருதப்பட்டது. டிஜிடலைசேஷன் மற்றும் எலக்ட்ரானிக் பிளாட்ஃபார்ம்கள் சந்தையின் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தாலும், கொரோனா லாக்டௌன் காலகட்டத்தில்தான் அதன் முழு வீச்சும் சாதாரண மக்களுக்குப் புலனாகியது. பணத்தைக் கையாள வங்கிகள் உதவுவது போல் பங்குகளைக் கையாள உதவும் சி.டி.எஸ்.எல். (Central Depository Services Ltd.) என்னும் டெபாசிடரியில், கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட அக்கவுன்டுகள் மட்டும் ஒன்றரைக் கோடி.
`இது வரமா, சாபமா?' என்று புரியாத புதிர் இந்தப் பங்குச் சந்தைதான். இந்தக் கடலில் தைரியமாக தோணியேறிப் போய் கைநிறைய அள்ளி வந்த ராகேஷும் உண்டு; மேலே போட்டிருக்கும் சட்டையைக் கூட பறிகொடுத்து கரை ஒதுங்கிய மேத்தாவும் உண்டு. சுறாக்கள், திமிங்கலங்கள், சின்ன அலை, பெரிய அலை, சுனாமி - எல்லாமும் இந்தப் பங்குச் சந்தைக் கடலில் உண்டு. ஆனாலும் இதன் அழகும், ஆபத்தும் நாளுக்கு நாள் அதிகம் பேரைத் தனக்குள் இழுக்கிறது!
பங்கு என்றால் என்ன? ஒரு கம்பெனியை உருவாக்கும் உரிமையாளர், சில வருடங்கள் அதை லாபகரமாக நடத்திய பின், தன் உரிமையைப் பங்குகளாக்கி விற்க முன் வருவார். இதை IPO என்பார்கள். அதில் நாம் பங்குகள் வாங்கினோம் என்றால், கம்பெனியின் லாபத்திலும், வளர்ச்சியிலும் நமக்கும் பங்கு கிட்டும். பங்குகள் சந்தையில் லிஸ்ட் ஆனபின் பங்கு வியாபாரம் களை கட்டும். அந்தக் கம்பெனியின் செயல்பாடுகளையும், உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு நடப்புகளையும் பொறுத்து பங்குகளின் விலை ஏறும்; இறங்கும்.

இறக்கத்தில் வாங்கி ஏற்றத்தில் விற்பதுதான் லாபத்திற்கான சூத்திரம் என்பது யாருக்குத்தான் தெரியாது? ஆனால் எது இறக்கம், எது ஏற்றம், ஏன் இறக்கம், இன்னும் இறங்குமா, எவ்வளவு இறங்கும் போன்ற கேள்விகளுக்கு யாரிடமும் பதில் கிடையாது. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் சிறு நிகழ்வு கூட பங்குச் சந்தையைப் பாதிக்கும். பைடன் தும்மினால் பங்குச் சந்தை நடுங்குவதுண்டு. இத்தனை நிச்சயமற்றதன்மை இருந்தாலும், இதற்குள் மக்கள் மந்தை, மந்தையாக இறங்குவதேன்? ஏனென்றால், இந்தப் பங்குச் சந்தை மந்திரச்சாவி மட்டும் கைக்கு வந்துவிட்டால், அப்புறம், `உள்ளாற எப்போதும் உல்லாலா'தான்.
இதில் இறங்க விரும்புபவர்கள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
- சந்தையின் ஒவ்வொரு நகர்வுக்கும் அதிர்பவர்களுக்கும், நேரம் மற்றும் பொறுமை இல்லாதவர்களுக்கும் இது இடமல்ல.
- அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு அதிகப் பணத்தை இதில் போடக் கூடாது. அவசரமாகத் தேவைப்படக்கூடிய பணத்தை இதில் போடவே கூடாது.
- தினமும் வாங்கி, விற்றலில் ஈடுபட்டால், லாபத்தில் பெரும் பகுதி கமிஷனாகவே காணாமல் போய்விடும்.
- கடன் வாங்கி முதலீடு செய்யக்கூடாது. மன உளைச்சலும், பலவித நஷ்டங்களுமே மிஞ்சும்.

- பங்குகளைத் தேர்ந்தெடுக்கவும், வாங்கிய பின் முதலீட்டைத் தொடரவும், விற்கவும் சுய ஆராய்ச்சி தேவை.
- சந்தை விழுந்தால் உடனே பீதி அடைந்து பங்குகளை வந்த விலைக்கு விற்பது நம் முதலீட்டைப் பாதிக்கும்.
- பங்குச் சந்தை பற்றி இன்னும் விவரமாக அறிந்து கொள்வோமா? வாருங்கள் செல்வம் குவிந்திருக்கும் இந்த அலிபாபா குகைக்கு!
சொல்லுங்கள்... `திறந்திடு சீசேம்!'
- அடுத்து திங்கள் கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.