Published:Updated:

13 கிளைகள்... பல நூறு கோடி வசூல்... ஆருத்ரா நிறுவனம் முடக்கப்பட்டதன் பின்னணி!

ஆருத்ரா நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
ஆருத்ரா நிறுவனம்

மோசடி

13 கிளைகள்... பல நூறு கோடி வசூல்... ஆருத்ரா நிறுவனம் முடக்கப்பட்டதன் பின்னணி!

மோசடி

Published:Updated:
ஆருத்ரா நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
ஆருத்ரா நிறுவனம்

திறப்பு விழாவில் யானைமீது அமர்ந்து ஊர்வலம், கவர்ந் திழுக்கும் பெண் பணியாளர் கள், சொகுசு விடுதியைப் போன்ற அலுவலகம் எனக் கண்கட்டி வித்தை காட்டி 1,000 கோடி ரூபாய்க்குமேல் பொது மக்களிடமிருந்து சுருட்டிய ஆருத்ரா குரூப்ஸ் நிறுவனத்தின் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கிராமப்புறங்களையும், அடித்தட்டு மக்களையும் குறிவைத்து இந்த மோசடி நிறுவனம் கைவரிசை காட்டியிருப்பதைப் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் பின்னணியை விசாரித்தோம்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சேவூர் ஜெயஜோதி நகரிலிருக்கும் தனியாருக்குச் சொந்தமான ஜி.வி.எஸ் ரெசிடன்ஸிக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில், டிப்-டாப்பாக கோட் சூட் அணிந்த வெளியூர் ஆசாமிகள் நான்கைந்துபேர் லக்ஸரி காரில் வந்து இறங்கினர். ஆட்களுக்கும் ஆடைக்கும் பொருத்தமே இல்லை. அச்சுபிச்சென்று ‘தங்கிலிஷில்’ கலந்துபேசி பில்டப் கொடுத்தபடி, அந்த டவரின் கீழ்த்தளத்தின் ஏ.சி ஹாலை வாடகைக்குக் கேட்டிருக்கிறார்கள்.

13 கிளைகள்... பல நூறு கோடி வசூல்... ஆருத்ரா நிறுவனம் முடக்கப்பட்டதன் பின்னணி!

‘‘சென்னையிலிருந்து வருகிறோம். ‘ஆருத்ரா குரூப்ஸ்’ பெயரில் தங்கத்தை வாங்கி விற்பனை செய்யும் வணிகத் தொழில் செய்யப்போகிறோம். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாடகையாக வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்று சொல்ல, உடனே அந்தக் கட்டடத்தின் உரிமை யாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட, உரிமையாளரும் உடனே வந்து சேர்ந்தார். பெரும் தொகை அட்வான்ஸாகத் தந்ததால், அவரும் ஏ.சி ஹாலை வாடகைக்குத் தந்தார்.

அவசர அவசரமாக ‘கோல்டு கம்பெனி’ என்ற பெயர் பலகை வெளியில் வைக்கப்பட்டு, மூன்று நாள்களுக்கு உள்ளேயே அலுவலக செட்டப்புக்கு ஹால் மாற்றப் பட்டது. ‘மே 6-ம் தேதியன்று, ஆருத்ரா குரூப்ஸ் பெயரில் கோல்டு கம்பெனி திறப்பு விழா நடப்பதாக’ சுற்றுவட்டார கிராமங்களில் நோட்டீஸ் கொடுத்து பிரமாண்டமாக விளம்பரப்படுத்தினார்கள்.

‘‘எங்களிடம், ரூ.1 லட்சம் டெபாசிட் செலுத்தினால் 30% வருமானம் தருவோம். ரூ.3 லட்சம் முதலீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால், மாதம் ரூ.25,000 வீதம் 12 மாதங் களுக்குத் தருவதுடன் தங்கக்காசுகளும் வழங்குவோம்’’ எனச் சொல்லி கிராமப்புற மக்களின் பேராசையைத் தூண்டிவிட்டனர். அறியாமையில் இருக்கும் மக்கள், கோல்டு கம்பெனி விளம்பரத்தைப் பற்றி பேசத் தொடங்கினர். ஆருத்ரா கும்பல் விரித்த வலையில் மக்கள் விழத் தயாரானார்கள்.

அறிவித்ததைப் போலவே, மே 6-ம் தேதி திறப்பு விழாவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆருத்ரா குரூப்ஸ் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர் ரிப்பன் கட் செய்து தொடங்கினார். பேராசைக்கு மயங்கிய மக்கள் பிள்ளைகள் படிப்புச் செலவு, திருமணம் என சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்துடன் நின்றிருந்தனர். கவர்ச்சித் திட்டங்களை நம்ப வைப்பதற்காக ஆரணி அலுவலக இயக்குநர் என அசோக்குமார் என்பவரை ராஜசேகர் அறிமுகப்படுத்தினார். கவர்ந்திழுக்கும் பெண்களும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். முதல் நான்கு நாள் களுக்குள்ளாகவே, ரூ.1 கோடி வசூலானது. இதற்கான பாண்டு பத்திரம் எதையும் நிறுவனம் தரப்பில் தரவில்லை.

இந்த நிலையில், அரசின் முறையான அனுமதி பெறாமல், கோல்டு கம்பெனி பெயரில் வெளியூர் நபர்கள் பணம் வசூலிப்பதாகத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் எஸ்.பி பவன்குமார் ஆகியோருக்குப் புகார்கள் பறந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஆட்சியரும், எஸ்.பி-யும் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர்.

13 கிளைகள்... பல நூறு கோடி வசூல்... ஆருத்ரா நிறுவனம் முடக்கப்பட்டதன் பின்னணி!

மே 11-ம் தேதி விசாரணை தொடங்கியது. ஆருத்ரா கோல்டு கம்பெனியை உள்பக்கமாகப் பூட்டி வருவாய்த் துறையினரும் போலீஸாரும் அதிரடியாக சோதனை நடத்தினர். மக்களிடம் டெபாசிட் வசூலிக்கத் தேவையான எந்த முறையான ஆவணங்களும் இல்லை எனத் தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், ‘‘ஆருத்ரா கம்பெனி உரிமையாளர் ராஜசேகர், சென்னை அம்பத்தூரில் சத்யா நகர் முதலாவது மெயின் ரோட்டில் வசித்து வருகிறார். கம்பெனியின் உரிமம் மற்றும் உரிய ஆவணங்களை அவர் கொண்டு வருவார்’’ என்றும், அலுவலக இயக்குநர் அசோக்குமார் காலதாமதப்படுத்த, ஆவணங்களைக் கொண்டு வர அதிகாரிகளும் அவகாசம் கொடுத்தனர். ஆனால், நிறுவன உரிமையாளர் ராஜசேகர் நேரிலும் வரவில்லை; ஆவணங்களையும் அனுப்பி வைக்கவில்லை.

இதனால், சந்தேகப்பட்ட அதிகாரிகள், ஆருத்ரா கோல்டு நிறுவனத்துக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனிடையே, அந்த நிறுவனத் தின் உரிமையாளர் ராஜசேகர் திடீரென தலைமறைவாகிவிட்ட தாகத் தகவல் பரவியது.

இந்த நிலையில்தான் தமிழகம் முழுவதும், இந்தக் கும்பல் கைவரிசை காட்டியதை அறிந்த, தென் மண்டல பொருளாதாரக் குற்றப் பிரிவுப் போலீஸார் அதிரடியாகக் களமிறங்கினர். சென்னையில் அதிகபட்ச கிளைகளுடனும் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, மதுரை மட்டு மன்றி, இன்னும் பல இடங்களில் கிளைகள் அமைத்து பலநூறு கோடி ரூபாயை சுருட்டி இருப்பதைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கண்டு பிடித்தனர்.

இதையடுத்து, முறைப்படுத்தப் படாத வைப்புத் திட்டங்களைத் தடை செய்தல் பிரிவு உட்பட ஐந்து பிரிவுகளின்கீழ் ஆருத்ரா குரூப்ஸின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர் மற்றும் அவரது கிளை நிறுவனங்களின் பங்கு தாரர்களாக அறியப்படும் சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பாஸ்கர், மோகன்பாபு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள்.

இதைத் தொடர்ந்து, மே 24-ம் தேதி அன்று மாநிலம் முழுவதும் அந்த நிறுவனத்தின் 13 கிளை அலுவலகங்கள் உட்பட 26 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். கோப்புகள், 48 கணினிகள், 6 லேப்டாப்கள், 60 பவுன் நகைகள், 2 கார்கள் மற்றும் ரூ.3.41 கோடி ரொக்கப்பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். அத்துடன், இந்த வழக்குடன் தொடர்புடைய 11 வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த ரூ.15 கோடியை யும் முடக்கினர்.

இது தொடர்பாக, பொருளா தாரக் குற்றப்பிரிவு போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘ஆருத்ரா குரூப்ஸ் நிறுவனம் அதிக வட்டி வழங்குவதாக விளம்பரம் செய்து, பொது மக்களிடமிருந்து பணம் பெற்று அந்த முதலீட்டிலிருந்தே வட்டி வழங்கி ‘பொன்சி’ திட்டத்தை செயல்படுத்தி வந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் மூலம் பாதிக்கப் பட்ட முதலீட்டாளர்கள் வழக்கின் விசாரணை அதிகாரி யிடம் eowtn07of2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 04426-220312 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்; அல்லது சென்னை அசோக் நகரில் இருக்கும் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கும் நேரில் வந்து புகார் மனு அளிக்கலாம்; பொதுமக்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்யும்படியும் கேட்டுகொள்கிறோம்’’ என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

பொருளாதாரக் குற்றப் பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘ஆரணியில் அலுவலகத்தைத் திறந்த நான்கே நாள்களில் ரூ.1.10 கோடி வசூலித்திருக்கிறார்கள். அந்த அலுவலகத்தைப் பூட்டி ‘சீல்’ வைத்துவிட்டோம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொடங்கப்பட்ட அலுவலகத்தில் 600-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.14 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறார்கள். இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் கோடிக்கணக்கில் பெற்றுள்ளனர். செய்யாறு பகுதியில் செயல்பட்டுவரும் சிப்காட் தொழிலாளர்களைக் குறிவைத்தே ஆருத்ரா அலுவலகத்தை அங்கு திறந்திருக்கிறார்கள். அங்கு மட்டும் சுமார் 5,000 பேர் டெபாசிட் செலுத்தியிருக்கிறார்கள்.

சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டுதான் மாநிலம் முழுவதுமே கைவரிசைக் காட்டி இருக்கிறார்கள். சோதனை நடத்தப்பட்ட அனைத்து அலுவலகங்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

நிறுவனத்தின் இயக்குநரான ராஜசேகரின் உறவினர் மணிகண்டன் என்பவரின் வீடு, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள விளாங்காடு கிராமத்தில் இருக்கிறது. அங்குச் சென்றும் சோதனை நடத்தியதில், அவரது வீட்டில் கணக்கில் வராத 40 பவுன் நகைகளையும், ரூ.25 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்திருக்கிறோம். இவர்கள் பழைய நகைகளை வாங்கி, விற்பனை செய்கிறோம் எனச் சொல்வது அனைத்துமே நாடகம்தான்’’ என்றார்.

அளவுக்கதிகமாக லாபம் தருவோம் என்று சொல்லும் நிறுவனங்களை நம்பி மக்கள் பணம் தந்து ஏமாறுவது தொடர்கதையாகிவிட்டது. இது மாதிரியான மோசடி நிறுவனங்கள் சொல்லும் பொய்யை நம்பி ஏமாறாமல், மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்வது அவசியத்திலும் அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism