Published:Updated:

`கார்ப்பரேட் வரியை குறைக்காமல் ஏழைகளுக்காக செயல்படுங்கள்!’ நிதியமைச்சருக்கு அபிஜித் பானர்ஜி அறிவுரை

பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி
பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி ( vikatan )

`ஏழை மக்களுக்கு நிதி உதவி செய்வது அவர்களைச் சோம்பேறிகளாக்கும் என்று எண்ணுவது தவறான போக்கு. அப்படியான எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். வசதியான நபர்களுக்கு உதவி செய்வதையெல்லாம் கணக்கில்கொள்ளாமல், ஏழை மக்களுக்குச் செய்யும் நிதி உதவிகளைப் பெரிதுபடுத்துவது தவறு.’

"கார்ப்பரேட் கம்பெனிகள் போதிய நிதியோடுதான் இருக்கின்றன. அவர்களுக்கான கார்ப்பரேட் வரியைக் குறைத்தது தவறான அணுகுமுறை. வரும் பிப்ரவரி மாதம் வெளியிடவுள்ள 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மீண்டும் கார்ப்பரேட் வரியைக் குறைக்கும் தவற்றைச் செய்ய வேண்டாம்" என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில், பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கையாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்திருந்தது. அதைத்தான் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார் அபிஜித்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
vikatan

அபிஜித் பானர்ஜியும் அவரின் மனைவி எஸ்தர் டுஃப்லோவும் 'உலகளாவிய அளவில் வறுமையை ஒழிப்பதற்கான சோதனை முயற்சி அணுகுமுறை'க்காக 2019-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்றிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில் பேசிய அபிஜித், "அரசு வழங்கும் பொருளாதார உதவியென்பது, அதற்கான தேவையுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களைச் சென்றடைவதாக இருக்க வேண்டும். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களைத் தோல்வியாளர்களைப்போலக் கருதுவது தவறான அணுகுமுறை" என்று கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், "கார்ப்பரேட் நிறுவன அதிபர்களுக்கு நிதிப்பற்றாக்குறை என்பது பிரச்னையே கிடையாது. ஏழை மக்களுக்குத்தான் நிதித்தேவை இருக்கிறது. அவர்கள் அனைவரின் பெயரிலும் வங்கிக் கணக்கு திறப்பதற்கான பணியை ஏற்கெனவே அரசு செய்துள்ளது. எனவே, வங்கி வழியாகப் பணம் செலுத்துவதற்கான உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுவிட்டது. இனி, நிதியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது மட்டுமே அரசின் வேலை. தேவைக்கேற்ப அவற்றைச் செலவிடுவதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். அதன்காரணமாகப் பணபுழக்கம் அதிகரிக்கும். பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்த இதுபோன்றுதான் நிறைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விவசாயக்கடன் தள்ளுபடி
விவசாயக்கடன் தள்ளுபடி

ஏழை விவசாயிகளுக்கு விவசாயக்கடன் தள்ளுபடி செய்வது முழுமையான, எதிர்பார்த்த பலனளிக்கும் என்று நான் நம்பவில்லை. வறட்சி காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்வதன்மூலம் வங்கிக்கடன் பெற்றுள்ள குறிப்பிட்ட சில விவசாயிகள் மட்டுமே பலனடைவார்கள். வங்கிக்கடன் பெறாமல் விவசாயம் செய்வோருக்கு அதன் பலன் கிடைக்காது. எனவே, ஏழை விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், அவர்களது வறுமையை ஒழித்து பொருளாதார நிலையை மேம்படுத்தவும் வேறுவகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஏழை மக்களுக்கு நிதி உதவி செய்வது, அவர்களைச் சோம்பேறிகளாக்கும் என்று எண்ணுவது தவறான போக்கு. அப்படியான எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். வசதியான நபர்களுக்கு உதவி செய்வதையெல்லாம் கணக்கில்கொள்ளாமல், ஏழை மக்களுக்குச் செய்யும் நிதி உதவிகளைப் பெரிதுபடுத்துவது தவறு. நாங்கள் சில நாடுகளில் செய்துபார்த்த சோதனை முயற்சிகள் பலனளித்தன. ஏழை விவசாய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அவர்களுக்கு ஆடு, மாடுகளை இலவசமாக அளித்து அவற்றை வளர்ப்பதற்கான பயிற்சிகளையும் அளித்தால் அதன்மூலம் அவர்கள் வியாபாரத்தைத் தொடங்குவார்கள். குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர்கள் வளர்ச்சிபெற்று தன்னம்பிக்கை அடைவார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். இதை நாங்கள் முதலில் வங்கதேசத்தில் செயல்படுத்திப் பார்த்தோம். அது நல்ல பலனளித்ததால் மேலும் 7 நாடுகளுக்கு விரிவுபடுத்தினோம்" என்றார்.

ஆடு வளர்ப்பு
ஆடு வளர்ப்பு
vikatan

குடியுரிமைச் சட்டத்திருத்தம் குறித்து கருத்து தெரிவிக்கையில், "இது அச்சமூட்டக்கூடிய நிர்வாகப் பிரச்னைபோல இருக்கிறது. நான் ஒரேயொரு நாட்டினுள் வசிப்பவனாக இருந்திருந்தால் எனக்குள்ளும் பீதியை ஏற்படுத்தியிருக்கும். அதிகார வர்க்கத்திடம் மிகவும் வலுவான எண்ணிக்கையில் பலம் இருக்கும் காரணத்தால் இதுபோன்ற மசோதாக்களை இவ்வளவு விரைவாக நிறைவேற்றுவது பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு