Published:Updated:

`பிரச்னைகளைத் தீர்க்காமல் தனியாருக்கு விற்க விடமாட்டோம்!’- எச்சரிக்கும் ஏர் இந்தியா ஊழியர்கள்

ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 60,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன்சுமையில் உள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

நிதி நெருக்கடியால் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை வாங்க முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், நாட்டின் பொருளாதார மந்தநிலையைச் சரிசெய்ய இவ்விரு நிறுவனங்களை வருகிற மார்ச் மாதத்திற்குள் விற்க முடிவு செய்திருப்பதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 60,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையில் உள்ளது. அதே போல பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் கடன் சுமையால் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இவ்விரு பொதுத்துறை நிறுவனங்களையும் விற்பதால் 2019-20-ம் நிதி ஆண்டில் ஒரு லட்சம் கோடி நிதி திரட்டலாம் என்பது மத்திய அரசின் திட்டம்.

இது தொடர்பாக பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்த, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்த நிதி ஆண்டிலேயே விற்பனை செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கிறோம். பொருளாதார நிலையை மேம்படுத்த எடுத்துள்ள பல்வேறு நடிவடிக்கைகளால் பல துறைகள் பின்னடைவிலிருந்து மீண்டு வருகின்றன. எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு புதிய திவால் சட்டத்தின் அரசியல்சாசனபூர்வமான வலுவை நிறுவியுள்ளது. இது வங்கிகளின் வரும் காலாண்டு அறிக்கையில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும்.

நிதி அமைச்சர்
நிதி அமைச்சர்

நடப்பு நிதி ஆண்டில் கடந்த சில மாதங்களில் மாதாந்திர ஜி.எஸ்.டி வசூல் ஒரு லட்சத்துக்கும் கீழே குறைந்த நிலையில், சில துறைகளில் விற்பனை அதிகமாகியுள்ளதால் இந்த நிதி ஆண்டிலேயே ஜிஎஸ்டி வசூல் உயரும்" எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர், `` பண்டிகைக் காலங்களில் வங்கி வழங்கும் கடன் திட்டங்கள் மூலம் 1.8 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், முதல் விற்பனை முயற்சியில் ஏர் இந்தியாவை வாங்க எவரும் முன்வராததால் சில சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்நிறுவனம் தனியார் வசம் செல்லவிருக்கும் நிலையில், அதன் பணியாளர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் அவர்கள் பக்கம் திரும்பியிருக்கிறது.

பாரத் பெட்ரோலியம்
பாரத் பெட்ரோலியம்
ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், மற்ற சலுகைகள் குறித்த தெளிவான விளக்கம் அவர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் இருப்பதால் தங்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு இந்நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
சரியும் பொருளாதார நிலை...  என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

அவர்கள், ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராக ஆதரவு தரும்படி, மத்திய வர்த்தக அமைப்புகளுக்கும், சர்வதேச போக்குவரத்து ஊழியர்கள் கூட்டமைப்புக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். மேலும், ஊழியர்களின் பிரச்னைகளைத் தீர்க்காமல் நிறுவனத்தை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் எனவும், அதற்கான சட்டரீதியிலான நடவடிக்கைகளைக் கையிலெடுப்போம் எனவும் ஏர் இந்தியா ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய நிலையில், மத்திய அரசாங்கம் இந்நிறுவனத்தை விற்கும் திட்டமானது, அங்கு பணி செய்யும் சுமார் 20,000 ஊழியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.