எதுவுமே இல்லாமல் வெற்றி அடைந்தவர்கள் ஒரு வகை எனில், எல்லாமே இருந்தும், அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்று வெற்றி அடைவது மற்றொரு வகை. இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் அஜய் பிரமல்.
எதிர்பாராமல் நடந்த அப்பாவின் மரணம்...
மிகப் பெரிய தொழில் குடும்பத்தைச் சேர்ந்தவர் அஜய் பிரமல். டெக்ஸ்டைல் தொழில் (மொராஜி மில்ஸ்) வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ், மிராண்டா டூல்ஸ் என்னும் பல தொழில்களை நடத்திவந்தார் அஜய் பிரமலின் அப்பா.
1977-ம் ஆண்டு எம்.பி.ஏ முடித்த அஜய், குடும்பத்தின் ஒரு நிறுவனமான மிராண்டா டூல்ஸ் நிறுவனத்தை நடத்திவந்தார். தொழிலுக்கு வந்த அடுத்த சில மாதங்களில் அடுத்தடுத்த சோகங்கள்.
குடும்பத்தின் முக்கியமான உறுப்பினரான அப்பாவுக்கு இதயத்தில் பிரச்னை. இந்தியாவில் ஸ்டண்ட் வைக்கும் வசதிகள் இல்லாத நேரம் அது. அப்போது அமெரிக்காவுக்கு செல்லலாம் எனத் திட்டமிட்டபோது அஜயின் அப்பா காலமானார்.
மூன்று சகோதரர்கள்...
அசோக், அஜய் மற்றும் திலிப் ஆகிய மூன்று மகன்கள் குடும்பம் மற்றும் நிறுவனங்களை நிர்வகித்தனர். அப்பா இறந்த இரு ஆண்டுகளில் கடைசி சகோதரரான திலிப் வெளியேற விரும்பினார். அதனால் அவர் வசம் வி.ஐ.பி நிறுவனம் சென்றது.

மொராஜி மில்ஸ் மற்றும் மிராண்டா டூல் ஆகிய இரு நிறுவனங்களும் அசோக் மற்றும் அஜய் வசம் வந்தது. ஆனால், அண்ணன் அசோக்கும் நீண்ட நாளைக்கு நிலைக்கவில்லை. புற்றுநோய் கண்டறியப்பட்டது. அதனால், அவரும் நீண்ட நாளைக்கு நீடிக்கவில்லை. அசோக் காலமானார். 29 வயதில் அண்ணனும் இல்லை; அப்பாவும் இல்லை. ஆனால், இரு பெரிய நிறுவனங்களையும் நிர்வகிக்க வேண்டிய கட்டாயத்தில் அஜய் பிரமல் இருந்தார்.
சிக்கல் இதனுடன் முடியவில்லை. டெக்ஸ்டைல் மில்லில் கடன், பணியாளர்கள் வேலைக்கு வர விரும்பவில்லை. அண்ணன் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். இந்தச் சூழலில் நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தபோது பார்மா துறையில் வாய்ப்பு கிடைத்தது.
அந்த நிறுவனத்தின் உயரதிகாரியை சந்தித்து, ``தற்போது 48-வது இடத்தில் நிக்கோலஸ் இருக்கிறது. இன்னும் 12 ஆண்டுகளில் முதல் ஐந்து இடத்துக்குள் வருவதற்கான திட்டம் இருக்கிறது'' என அந்த அதிகாரியை சந்தித்துப் பேசினார்...
நிக்கோலஸ் பார்மா...
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிக்கோலஸ் பார்மா இந்திய செயல்பாட்டை விற்பனை செய்ய திட்டமிட்டது. ஆனால், பார்மா துறையில் எந்தவிதமான அனுபவமும் இல்லாத அஜய் அதற்கு விண்ணப்பித்தார். பார்மாதுறை என்பது அவ்வளவு எளிதானதல்ல. இந்தியா முழுவதும் விற்பனை நெட்வொர்க் இருக்க வேண்டும். மருத்துவர்களிடம் உரையாட வேண்டும் எனப் பல சிக்கல்கள் இருந்தன. தவிர, 30 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத துறையாக பார்மா துறை இருந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அந்த நிறுவனத்தின் உயரதிகாரியைச் சந்தித்து, ``தற்போது 48-வது இடத்தில் நிக்கோலஸ் இருக்கிறது. இன்னும் 12 ஆண்டுகளில் முதல் ஐந்து இடத்துக்குள் வருவதற்கான திட்டம் இருக்கிறது'' என அந்த அதிகாரியைச் சந்தித்துப் பேசினார்.
நிறுவனம் கைக்கு வந்தது. ஆனால், இவரிடம் வரக் கூடாது என்பதற்காக அந்த நிறுவனத்தின் முக்கியமான அதிகாரிகள் பலரும் விரும்பினார்கள். ஆனால், நிறுவனம் வந்தவுடன் முதல் வேலையாக முக்கியமான பணியாளர்கள் நீக்கப்பட்டனர்.
அதன்பிறகு பல சிறிய பார்மா நிறுவனங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினார் அஜய் பிரமல். பார்மா துறை சீரான வளர்ச்சி அடைந்துவந்தது.
அபோட்டுக்கு விற்கப்பட்ட பார்மா நிறுவனம்...
இந்த நிலையில், மற்றொரு முக்கியமான பார்மா நிறுவனமான அப்போட் நிறுவனத்தின் தலைவரை சிகாகோவில் சந்தித்தார் அஜய். அதன்பிறகு அபோட் தலைவர் இந்தியாவுக்கு வந்தார். பார்மா தொழிலின் திட்டங்கள், வளர்ச்சி என அனைத்தையும் பார்வையிட்ட அவர் வாங்குவதாக விருப்பம் தெரிவிக்க, அதற்கு எந்த விதமான மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்காமல் ஒப்புக் கொண்டார்.
தனது நிறுவனத்துக்கு என்ன மதிப்பீடு கிடைக்கும் என வல்லுநர்களை அழைத்து மதிப்பிடச் சொன்னார். அவர்கள் சொன்னது 2 பில்லியன் முதல் 2.5 பில்லியன் டாலர் வரை மட்டுமே. ஆனால், அஜய் 4 பில்லியன் டாலர் வரை மதிப்பீடு இருக்கும் எனக் கணித்தார். அதற்கான காரணங்களை விளக்கினார். இதை மதிப்பீட்டாளர்கள் புரிந்துகொண்டனர்.

4 பில்லியன் டாலர் எனத் தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் 3 பில்லியன் என்னும் தொகையில் இருந்து பேச்சு வார்த்தையைத் தொடங்கினார்கள். ஆனால், அஜய் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காண்பிக்கவில்லை. அதைத் தொடர்ந்து சில மாதங்களில் 3.5 பில்லியன் எனப் பேச்சு வார்த்தையைத் தொடங்கினார்கள். அதற்கும் மசியவில்லை. அதைத் தொடர்ந்து 3.7 பில்லியன் டாலருக்கு அபோட் சம்மதித்தது.
பிசினஸ் உலகில் பல இணைப்புகள் தோல்வி அடையக் காரணம், எப்படியும் இந்த இணைப்பை நடத்தியாக வேண்டும் என்கிற எண்ணமே. ஒரு மோசமான டீலை வேண்டாம் என்று சொல்ல இங்கு பணம் கொடுக்கப்படாது. ஆனால், மோசமான டீலை முடித்தால் அனைவருக்கும் பணம் கிடைக்கும் என்னும் காரணத்துக்காகத்தான் பெரும்பாலான டீல்கள் நடக்கின்றன. ``நீங்கள் விருப்பம் இன்றி இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்’’ என இந்த இணைப்பு சமயத்தில் அஜய் பிரமல் தெரிவித்திருந்தார்.
வெற்றிகரமான முதலீட்டாளர்...
2010-ம் ஆண்டு பிரமல் குழுமத்தின் பார்மா பிசினஸ் அபோட் நிறுவனம் வசம் சென்றது. ஏற்கெனவே அவர் குறிப்பிட்டது போல, 2010-ம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது பெரிய பார்மா நிறுவனமாக இது இருந்தது.
பார்மா தொழிலில் இருந்து வெளியேறிய பிறகு கிட்டத்தட்ட ஒரு முதலீட்டாளர் நிலையிலே பல முடிவுகளை எடுத்தார் அஜய் பிரமல். வோடபோன் நிறுவனத்தில் 11% பங்குகளை முதலீடு செய்தார். 50% லாபத்தில் அதில் இருந்து வெளியேறினார்.
டெக்ஸ்டைலில் இருந்து விலகி, பார்மா தொடங்கி, அதில் இருந்தும் விலகினார். தற்போது திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். பல துறைகளில் பிரமல் குழுமம் தற்போது செயல்பட்டு வருகிறது.

தொழிலதிபரா, முதலீட்டாளரா?
அஜய் பிரமல் தொழிலதிபரா அல்லது முதலீட்டாளரா அல்லது முதலீட்டாளர் மனநிலையில் இருக்கும் தொழிலபதிரா என்னும் விமர்சனம் இருக்கிறது. ஆனால், இவை எது குறித்தும் அவருக்குக் கவலை இல்லை. ``பணியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவைவோ அதைச் செய்வேன்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் அஜய்.
வேறு நிறுவனங்களை வாங்கி அடையும் வளர்ச்சி (inorganic growth) குறித்து பலருக்கும் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், இவருக்கான வெற்றி சரியான நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து சரியான சமயத்தில் வெளியேறுவதில்தான் இருக்கிறது.
(திருப்புமுனை தொடரும்)